Monday, June 30, 2014

தொட்டேன்... தொடர்கிறார்... கேபிள்!

Posted by பால கணேஷ் Monday, June 30, 2014
கூகிள், வலைத்தளம் என்கிற ஒரு வசதியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. வலைத்தளத்தின் உரிமையாளர்கள் அவரவர் படைப்புகளை அதில் வெளியிடுகிறார்கள். வாரப்பத்திரிகைகளைப் போல இதற்கும் ஒரு மிகப்பெரிய வாசகர் வட்டம் உண்டு. - இந்த அளவுக்கு மட்டுமே எனக்கு வலையுலகைப் பற்றித் தெரிந்த சமயம் அது. அப்போது திரு.பட்டுக்கோட்டை பிரபாகரிடம் உதவியாளராகவும், அவர் பொறுப்பாசியராக இருந்த ‘ஊஞ்சல்’ இதழின் உ.ஆ. + வடிவமைப்பாளராகவும் இருந்த காலகட்டம். “வலையுலகில் சிறப்பாக எழுதுபவர்களைப் பற்றியும் அவர்கள் தளங்களைப் பற்றியும் ஒரு தொடர் வரப்போகுது. கேபிள் சங்கர்னு பிரபலமான ஒருத்தரை எழுதச் சொல்லியிருக்கேன். மனுஷன் பின்றார்” என்றார் பி.கே.பி. என்னிடம். (கேபிளார் எதைப் பின்னினாரோ? ஹி... ஹி....) அப்படி அறிமுகமாச்சு அவரின் பெயர். பின்வந்த மாதங்களில் ஊஞ்சல் இதழ்களில் அவர் எழுதியதைத் தொடர்ந்து படித்து வந்தேன். அவரின் எழுத்து நடை பிடிச்சது எனக்கு
.
பின்னொரு சந்தர்ப்பத்துல சைதாப்பேட்டை பெட்டிக்கடை ஒண்ணுல ‘கொத்து பரோட்டா’ என்கிற கேபிள் எழுதிய புத்தகம் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் உன்னிப்பதை பார்த்துட்டு, ”நம்ம ஏரியாவுலதான் ஸார் இருக்காரு கேபிள் சங்கர்”ன்னார் கடைக்காரர். என் ஏரியாவில் இருக்கும் அவரைச் சந்திக்கணும் என்ற ஆசை இருந்தாலும் வழி தெரியாம அமைதி காத்தேன். காலத்தின் கரைசல்ல சேட்டையண்ணாவின் வழிகாட்டுதல்ல நானும் ஒரு பதிவராகி சிலபேராவது அடையாளம் காணுற நிலைக்கு அடுத்த ஆறு மாசங்கள்ல வளர்ந்திருந்தேன். அதேமாதிரி கேபிளாரின் பதிவுகளைத் தொடர்ந்து படிச்சு அவர் வெரைட்டி வாரியா எழுதறதையும், அவருக்கிருந்த மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும் கவனிச்சு அவர் பிரபலம்கறதை புரிஞ்சு வெச்சிருந்தேன். அப்போ சென்னைல புத்தகக் கண்காட்சி வந்தது. அங்கதான் கேபிள் சங்கரை முதன்முதலில் சந்தித்தேன்.

பு.க.வைப் பொறுத்தவரை என்னென்ன ஸ்டால்களில் புத்தகங்கள் வாங்கலாம்கறதை சர்வே எடுக்க ஒரு முறையும், அவற்றை வாங்கறதுக்காக ஒரு முறையும் போறது வழக்கம். பார்ப்பதற்காகவும்... பலமுறை விசிட் அடிக்கறது உண்டு ஐ மீன் நண்பர்களைப் பார்ப்பதற்காக.... புக் சர்வேக்காக முதல்முறை போய் சுத்தி வந்துக்கிட்டிருந்தபோது டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலின் வாசலில் இரு நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்த கேபிளாரைக் கண்டேன். புத்தகங்களின் அட்டையில் போட்டோவாகப் பார்த்திருந்த அவரை எளிதா அடையாளம் காண முடிஞ்சது. முதல் பார்வைல நெல்லைக் கோயில் யானையை நினைவுபடுத்தினார். நோ... நோ... உருவத்தை வைச்சுச் சொல்லலீங்க... நீண்ட நேரமாய் நின்னுருப்பார் போலருக்கு கால் மாற்றிக் கால் மாற்றி நின்றபடி பேசிக் கொண்டிருந்தது எனக்கு அப்படி உருவகப்படுத்தியது. அருகில் சென்று உற்றுப் பார்த்தபடி சில நிமிடங்கன் நின்றிருந்தேன். என்னை மாதிரி ஒரு உருவம் பக்கத்துல வந்து எதுவும் பேசாம உத்துப் பாத்துட்டிருந்தா ஒண்ணு பயப்பட்டு விலகணும்... இல்ல, நெருங்கி வந்து பேசணும். ஆனா கேபிள் கொஞ்சமாச்சும் கண்டுக்கணுமே... ஊஹும்... உலகையே மறந்து அவங்களோட பேசிட்டிருந்தார். சரி... அப்பத்தானே அவர் பிரபலம்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு கிட்டப் போய் வலிஞ்சு என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். முதல் அறிமுகம்ங்கற தயக்கம் எதுவுமில்லாம சகஜமாப் பேச முடிஞ்சது கேபிளாரின் பலம்!

அதுக்கடுத்து அவர் போட்ட ‘கொத்து பரோட்டா’வுல என்னை சந்திச்சதைப் பத்தி சில வரிகள் எழுதியிருந்தார். ஆனா பாருங்க... பேரைப் போடாம ’பிகேபியின் உதவியாளர்’னு போட்ருந்தார். என்னை மாதிரி ஒரு ஒலகப் பிரபலத்தோட(!) பேரை மறக்கறது ஞாயமா சொல்லுங்க... நான் கடுங்கோபமாகி பின்னூட்டப் பெட்டில அலுதுட்டே ஒரு கருத்துப் போட்டேன். அதைப் பார்த்ததும் நினைவு வந்து மைல்டா ஒரு ஸாரி சொல்லி என் பேரை பதிவுல அப்டேட்டினார். அதுக்கப்புறம் முதல் ஆண்டு பதிவர் திருவிழாவின் ஏற்பாடுகளுக்கான சந்திப்புகளில் அடிக்கடி அவரைப் பார்க்க, பழக வாய்ப்புக் கிடைத்தது. சந்திக்கற பிரபலங்கள்ட்ட இருந்து முடிஞ்சவரை திருடிக்கற பழக்கமுள்ள நான் கேபிள்ட்ட இருந்தும் திருடிக்கிட்டேன் - எதிராளி கோபமா பாய்ஞ்சாலும் நாம எப்படி கூலா டீல்பண்ணி மேட்டரை ஸ்மூத்தாக்கறது, நாலு பேர் இருக்கற இடத்துல எப்படி அனைவர் கவனத்தையும் கவருவது... சுருக்கமாச் சொன்னா, சக மனிதர்கள்ட்ட பழகுறது எப்படிங்கறதை அவர்ட்டருந்து எடுத்து(திருடி)க்கிட்டேன்.

அவர்கூட நிறையப் பேசற சந்தர்ப்பங்கள் அமைஞ்சதும், உணவகங்களை எழுதறதுல சிகரமான அவர்கூட தாய்லாந்து உணவை ருசிச்சுச் சாப்பிட்டதும், அதை என் தளத்துல நான் எழுதினதும் எனக்கு மிகமிக மகிழ்ச்சி தந்த விஷயங்கள். மெரீனா பீச்ல பாத்தீங்கன்னா... நீச்சல் கொஞ்சங்கூட தெரியாம அலையில கால் நனைச்சுட்டு குதிச்சுட்டு மேலோட்டமா கடலை தெரிஞ்சுட்டு வருவாங்க சிலர். வேற சிலரோ கடலுக்குள்ள முங்கி நீச்சல் போட்டு அடியாழம் வரை போய்ட்டு வர்ற அளவுக்கு கடலை தெரிஞ்சிருப்பாங்க. சினிமாங்கற கடல்ல நான் முதல் ரகமா இருக்கறப்ப அவர் ரெண்டாவது ரகமா இருந்தார். தொலைக்காட்சித் தொடர்கள்ல நிறைய நடிச்சும், எழுதியும் இருந்த அவர் அப்ப ரெண்டு மூணு படங்களுக்கு வசனகர்த்தாவா இருந்தார். ‘கலகலப்பு’ படத்தில் இவர் எழுதின வசனங்கள் ரொம்பப் பிடிக்கும் எனக்கு.

முதலாமாண்டு பதிவர் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினரா பி.கே.பி. வர்றதா முடிவானதுப்ப கேபிள் தான் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் அதற்கு ‘தொட்டால் தொடரும்’ என்று தலைப்பு வெக்க விரும்பறதாவும் சொல்லி பிகேபிட்ட பேசச் சொன்னார். (அவரின் நாவல் தலைப்பு). பி.கே.பி.க்கு தர மனமில்லை. மறுத்துட்டாரு. கேபிளாரின் புரொடியூசர் டைட்டிலை ஏற்கனவே ரிஜிஸ்டர் பண்ணிட்டதால அந்தப் பேர்லயே படம் ஆரம்பமாச்சு. அப்ப கேபிள்ட்ட படத்தப் பத்திக் கேட்டேன். என்ன சப்ஜெக்ட், யார் ஹீரோ, முக்கியமா... யார் ஹீரோயின்... ஹி... ஹி... ஹி... அவர் சொன்னாரு...

இது காதல் த்ரில்லர் வகைக் கதை .முதல் பாதி லவ், ரொமான்ஸ் என்று நகரும் கதையின் மறுபாதி ஆக்‌ஷன் த்ரில்லராக வேகமெடுக்கும். ஹீரோவாக தமன், ஹீரோயினாக அருந்ததி நடித்திருக்கிறார்கள். இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் வின்சென்ட் அசோகன், ஹலோ எப்.எம். பாலாஜி நடித்திருக்கிறார்கள். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.சி. சிவன் இசையமைத்துவருகிறார்.

அவரோட ப்ளாக்கில நிறைய பக்கப் பார்வைகள் பெறுவது சினிமா விமர்சனம். யாரோட படமா இருந்தாலும் அதோட ப்ளஸ் மைனஸை விரிவா அலசி - டெக்னிகலாவும் அலசி - விமர்சனம் எழுதுவார். வாசகர்களுக்கு அவர் நடுநிலையா எழுதறது பிடிக்கும்னாலும் எல்லாப் படத்தையும் குறை சொல்றார்னு சினிமா சைட்ல ஒரு கருத்து இருக்கறதா என் ஃபீலிங். அவர்ட்ட, ‘தலைவா... நீங்க படமெடுக்கற பட்சத்துல அதை விமர்சனம் எழுதிக் கிழிக்க ஒரு க்ரூப்பே ரெடியாயிருக்கும். எல்லாத்தையும் நொட்டை சொல்ற இந்த ஆளு படம் எடுத்தா குறையில்லாம எடுத்திருவானான்னு கேக்க நிறையப் பேரு இருப்பாங்க...’ன்னேன். அதுக்கு அவர் கூலா சொன்னார்....

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தூவார் சந்திரசேகரனே எனக்கு அப்படித்தான் கிடைத்தார். அவர் தயாரித்த ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படத்துக்கு நான் எழுதியிருந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு என்னிடம் பேசினார். பிறகு என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர், அப்படியானால் நீங்கள் வந்து ஒரு படம் எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம் என்றார். சண்டையிலும் விவாதத்திலும்தான் எங்கள் நட்பு தொடங்கியது.  விமர்சனம் செய்பவர்களால் நல்ல படம் எடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள். எல்லா நல்ல விமர்சகர்களுக்குள்ளும் நல்ல ரசிகன் இருக்கிறான். நான் பல படங்களை விமர்சனம் செய்திருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நல்லதை விட்டுவிட்டு கெட்டதை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார்கள். நான் வெறும் விமர்சகன் மட்டுமல்ல.கடந்த 15 ஆண்டுகளாகத் திரைத் துறையில், திரைப்பட விநியோகம், திரையரங்க நிர்வாகம், தயாரிப்பு, விளம்பரம், திரைக்கதை, வசனம், நாவல், சிறுகதை எனத் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறேன். திரை இயக்கம் என்பது என் கனவு. என் படத்திற்கும் விமர்சனம் இருக்கும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் பல விஷயங்களை விமர்சிக்க முடியாதபடி என் படம் தரமும் நேர்த்தியும் நிறைந்ததாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

அப்புறமென்ன... அவர் படம் மளமளன்னு வளர்ந்து இப்ப இந்த மாசக் கடைசிலயோ, அடுத்த மாசத்துலயோ ரிலீசுக்குத் தயாரா இருக்குது. அதுக்கான ஒரு பாட்டு டீஸரா போன வாரம் வெளியாகி யூ ட்யூப்ல நிறைய ஹிட்ஸ்களை குவிச்சுட்டிருக்கு. ஒருமுறை கேட்டுப் பாப்போம்னு பாத்த என்னை பலமுறை கேக்க வெச்சிருச்சு. சாக்ஸபோன்ல ஆரம்பிக்கற அந்த இசையே முதல்ல உள்ள இழுத்திருது. உள்ள இழுத்த செவிகளை பாடல் முழுவதும் தொடர வெச்சு அசத்தியிருக்காரு இசையமைப்பாளர் பி.சி.சிவன். ரொம்பவே யதார்த்தமான அரசியல், சமூகப் பொறுப்புணர்வு, ஜாலி, கேலி கலந்த பாடல் வரிகளும் அருமை. (பாட்டை கேபிள்ஜியே எழுதினதாக் கேள்வி. நிஜமான்றதை அவர்தான் சொல்லணும்.) பாடினவர் பெயர் தெரில... (கேபிளாரே நல்லாப் பாடக்கூடியவர்தான், அவரே பாடியிருக்கலாமேன்னு தோணிச்சு) சின்னச் சின்ன கட் ஷாட்களை இணைச்சு, பிரபலங்கள்ட்ட கருத்து கேக்க வெச்சு அதையும் சேர்த்து, ஸ்க்ரீன் ப்ரஸன்ஸோட தானும் தன் டீமோட தோன்றி பாடலை சுவாரஸ்யமா காட்சிப்படுத்திருக்காரு கேபிள்ஜி. இந்தப் பாட்டை இதுவரை நீங்க பாக்கலைன்னா கீழ நான் தந்திருக்கற லிங்க்ல போய் உடனே பாத்திருங்க.

https://www.youtube.com/watch?v=RNHks79qB58

இதனால என்ன ஆபத்துன்னா... அவரோட படத்துக்கு இப்ப எதிர்பார்ப்பு எகிறிடுச்சு. அதை முழுமையா படம் நிறைவேத்தும்ங்கறதுல எனக்கு முழு நம்பிக்கை உண்டு. ஒரு படத்தை இயக்கறதுன்றது சாதாரண வேலையில்ல. ப்ரொட்யூஸரை சாடிஸ்பை பண்ணி, காமிரா, இசைன்னு அந்தந்தத் துறையில ஜாம்பவான்களை வேலை வாங்கி... அங்குசத்தை வெச்சு யானையை அடக்கற மாதிரி ரொம்பவே டென்ஷனான காரியம் அது. நம்ம ஜாதியில ஒருத்தர் (நோ...நோ... பதிவர் ஜாதிங்கறத சொல்றேன்) இயக்குனராகியிருக்கார் என்பது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்.

என்னைப் பொறுத்தவரைக்கும் பு.க.ல நான் முதல்முறை பார்த்த கேபிள் சங்கருக்கும். இப்ப இயக்குனராகிட்ட பிறகு பார்க்கற கேபிள் சங்கருக்கும் பழகும் முறையில துளியும் வித்தியாசமில்ல... இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடையணும், அடுத்தடுத்த வெற்றிகளைச் சந்திச்சு இன்னும் பல உயரங்களை அவர் எட்டணும்னு மனப்பூர்வமான மகிழ்ச்சியோட அவரை வாழ்த்தற அதே சமயத்துல எவ்வளவு உயரம் தொட்டாலும் பழகும் விதத்துல அவர் இப்ப மாதிரியே எப்பவும் இருக்கணும்னு ஒரு வேண்டுகோளையும் முன்வெக்கறேன். ஆல் த பெஸ்ட் ஃபார் த சக்ஸஸ் கேபிள்ஜி!

Wednesday, June 25, 2014

த்துப் பதினஞ்சு நாளா என்னோட நெட் கனெக்ஷன் புட்டுக்கிட்டதால இணைய உலகத்துல என்ன நடக்குதுன்னு பாக்க முடியாமப் போச்சு. (எல்லாரும் நிம்மதியா இருந்திருப்பீங்கன்றது வேற விஷயம்.) நண்பர் மதுரைத்தமிழன் ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு வெச்சு அது ஓடிக்கிட்டிருக்கறதையும், அவர் என்னைத் தொடர அழைச்சிருக்கறதையும், அவரைத் தொடர்ந்து என் அன்புத் தங்கை ராஜி மற்றும் இனிய தோழி கீதமஞ்சரி ஆகியோர் என்னையும் இந்தப் பத்துக் கேள்விகளுக்கு பதில் சொல்லி சங்கிலியைத் தொடர அழைச்சிருக்கறதையும் கவனிச்சேன். உங்களின் விருப்பப்படி பத்துக் கேள்விகளுக்கான பித்து... ச்சே... முத்து பதில்கள் இங்கே....

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

சிரியஸ்பதில் : சந்திர மண்டலத்துல ஒரு காலனியை ரிசர்வ் செஞ்சு என்னோட பிரம்மாண்டமான லைவ் வினைல் போர்டுகளை அங்கங்க வெச்சு பயமுறுத்தி, பதிவர் நண்பர்கள் எல்லாரையும் ஒரு ஏர்க்ராப்ட்ல வெச்சுக் கூட்டிட்டு(கடத்திட்டு?)ப் போயி மிகப் பிரம்மாண்டமான அரங்கத்துல ராட்சஸ சைஸ் கேக்கை வெட்டி, எல்லாருக்கும் ஒரு ரிச்சான பார்ட்டி தந்து கூடவே என்னோட ஸ்டேஜ் டான்ஸ் ப்ரொக்ராமையும் அரங்கேற்றம் பண்ணுவேன். (சந்திர மண்டலத்துக்கு ஏன் கூட்டிட்டுப் போறேன்னு இப்பப் புரிஞ்சுதா... ஒரு பயபுள்ள தப்பிச்சிர முடியாதுல்ல... ஹி.... ஹி... ஹி....)

சீரியஸ் பதில் : நான் 100 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை... விருப்பமும் இல்லை. தவிர என் பிறந்த தினத்தை நான் கொண்டாடுவதுமில்லை. உங்கள் விருப்பப்படி நான் 100 ஆண்டுகள் வாழ்ந்து பிறந்தநாளையும் கொண்டாடுவது என்றால் 100வது பிறந்ததினத்தை குறைந்தபட்சம் 100 பேருக்காவது உணவிட்டு, 100 ஆதரவற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்து, என்மேல் அக்கறை கொண்ட நல்லவர்கள் (என்று நான் நம்பும்) நூறு பேருடன் கலந்துரையாடி என் பிறந்த தினத்தைக் கொண்டாடுவேன்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

சிரியஸ் : மனைவி வீசும் பூரிக்கட்டை மற்றும் இன்னபிற ஆயுதங்களிலிருந்து தப்புவது எப்படி என்கிற வித்தையை. (நான் சொல்லிட்டேன். நெம்பப் பேரு சொல்லாமயே ஒரு கெத்தை மெயின்டைன் பண்ணுவாய்ங்க. ஹா... ஹா... ஹா...) அப்பறம்... பொய் சொல்ல... (ஐ மீன் மாட்டிக்காம திறமையா... ஹி... ஹி....)

சீரியஸ் : ஒரு பெரிய  லிஸ்ட்டே இருக்குதுங்க... நீச்சல், தமிழ் தவிர்த்த இந்திய மொழிகள், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சமைக்கும் கலை, கார் டிரைவிங், இன்னும் நிறைய.. நிறைய... முடிந்தவரை ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு லிஸ்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என்பது பெருவிருப்பம்.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

சிரியஸ் : கடைசியாச் சிரிச்சதுன்னா... அப்ப இனி என் வாழ்நாள்ல சிரிக்கவே மாட்டேன்னா சொல்றீங்க... அவ்வ்வ்வ்வ்! நீங்க கேக்கற அர்த்தத்துல யோசிச்சா.... அது மாப்பிள்ளை அழைப்பு அன்னிக்குச் சிரிச்சதாத் தேங் இருக்கும்.

சீரியஸ் : என் மாதிரி ஆசாமியைப் பொறுத்தவரை தப்பான கேள்வி இது. எப்பவும் எதுக்காவது சிரிச்சுக்கிட்டே இருக்கற ஆசாமிகிட்ட கடைசியான்னு கேட்டா என்னான்னு சொல்றது யுவர் ஆனர்... கொஸ்டியன் ஓவர்ரூல்ட்.

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

சிரியஸ் : டான்ஸ் ஆடுவேன், (வாய்விட்டு) சத்தமில்லாமல் சிரிப்பேன், இன்னும் வெளிச்சத்துல மத்தவங்க பாத்தா லூசுன்னு நினைக்கிற எல்லாச் செயல்களையும் தயங்காம செஞ்சு பார்த்துருவேன். (இதெல்லாம் செய்யாமலேயே கொள்ளப் பேரு என்னை அப்படித்தான் நெனக்கிறாங்கன்றது வேற விஷயம். ஹி... ஹி....)

சீரியஸ் : மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கொண்டு நான் படிக்க விரும்பி நேரம் இல்லாமல் பெண்டிங்கில் வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றிரண்டையாவது படித்து முடித்து விடுவேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

சிரியஸ் : எலேய்... கல்யாணத்துல மாட்டிக்காதீங்கன்னு நான் படிச்சுப் படிச்சு சொன்னேனே... கேட்டியாலே... இபப பேய்முழி முழிச்சுட்டு வந்து ஆசி கேட்டா என்னத்தச் சொல்ல.... உன் புள்ளைங்களுக்காவது கல்யாணம் பண்ணி வெக்காம அவங்களைக் காப்பாத்து லேய்...

சீரியஸ் : விட்டுக் கொடுத்து வாழுங்கள். எந்த விஷயமானாலும் அவள் அவனுக்காகவும், அவன் அவளுக்காகவும் ஈகோவை உதறிவிட்டு விட்டுக் கொடுத்தால் இனியது இனியது வாழ்க்கை.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

சிரியஸ் : அட போங்கப்பு... என் தலை(வலி)வியால வீட்ல ஏற்படற பிரச்னைகளையே தீர்க்க முடியாம முழி பிதுங்கிட்டு இருக்கேன். உலகத்துப் பிரச்னைய நான் தீக்கறதாவது...? நல்ல டமாஸ்!

சீரியஸ் : உலகெங்கும் பெருகிவரும் மக்கள்தொகையைத்தான் நான் மிகப்பெரும் பிரச்னையாக உணர்கிறேன். அதனைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் முதலில் முயல்வேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

சிரியஸ் : எந்தப் பிரச்னையா இருந்தாலும் முதல்ல என் மனைவிகிட்ட அட்வைஸ் கேப்பேன்... அப்புறம் என் அம்மாகிட்ட அட்வைஸ் கேப்பேன்...! (ரெண்டையும் கண்டுக்காம நானா முடிவெடுப்பேன்ங்கற ரகசியத்த யார்ட்டயும் சொல்லிடாதீங்க. ஹி... ஹி... ஹி...)

சீரியஸ் : பல சிக்கலான சூழ்நிலைகள் எனக்கு ஏற்பட்ட போதெல்லாம் உறவினர்களை விட அன்பும் அக்கறையும் கொண்ட நட்புகள்தான் என்னை வழிநடத்தி காப்பாற்றி இருக்கிறது. எனவே... நான் அறிவுரை கேட்பது நான் விரும்பும் நல்ல நட்புகளிடம் தான்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

சிரியஸ் : அட... இப்புடிக்கூட என்னை பாப்புலராக்க முடியும்னு இத்தனை நாள் தெரியாமப் போச்சேப்பு... ரொம்ப டாங்ஸுன்னு சொல்லி கை குலுக்குவேன்.

சீரியஸ் : என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் அந்தத் தவறான செய்தியை நிச்சயம் நம்ப மாட்டார்கள். என்னைப் பற்றித் தெரியாதவர்களுக்கு அது தவறான செய்தி என்று புரிய வைக்க வேண்டிய அவசியம் என்ன...? ஆகவே, நான் முற்றிலும் உதாசீனம் செய்வேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

சிரியஸ் : இனிமேலயாவது புத்திசாலியாப் பொழச்சுக்கடா... டோன்ட் ட்ரை யுவர் லக் அனதர் டைம் என்று சொல்வேன். ஹா... ஹா... ஹா...

சீரியஸ் : சொல்வதற்கு வார்த்தைகள் ஏதய்யா... அன்பான தொடுகை, ஆறுதலான அரவணைப்பு இவற்றின் மூலம் என் உணர்வுகளைப் புரிய வைப்பேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

சிரியஸ் : எதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு என் மனைவி தடா போட்டிருக்காளோ... அதையெல்லாம் கண்டிப்பாச் செஞ்சு பாத்துருவேன்ல....

சீரியஸ் : சில நல்ல ஈரானிய/கொரிய/உலகத் திரைப்படங்கள் அவற்றில் வரும் சில காட்சிகளின் காரணமாக மனைவி மற்றும் அம்மாவால் கண்டிக்கப்படும் என்பதால் பார்க்க முடியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அப்படியான படங்களைப் பார்த்து ரசிப்பேன். நம்முடைய அருமையான மின்சாரத்துறை அப்படிப் பார்க்க விடாமல் சதி செய்தால் ஏதாவது புத்தகம் படிப்பேன்.

ரைட்டு... நான் சொன்ன பதில்கள் உங்களுக்குப் புடிச்சிருக்கும்னு நம்பறேன். இதைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல 1.சீனு, 2. கோவை ஆவி, 3. அரசன். 4.ரூபக்ராம் ஆகிய அம்ம பயலுவளக் கேட்டுக்கறேன்.

Saturday, June 7, 2014

சரிதா டார்லிங் அட் டார்ஜிலிங்!

Posted by பால கணேஷ் Saturday, June 07, 2014
னிமையான ஒரு மாலை நேரத்தில் நான் ஒரு காபிஷாப்பில் அமர்ந்திருந்த வேளை சட்டைப் பையிலிருந்த செல்பேசி அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன்... என் தலைவலி... ஸாரி, தலைவி சரிதா தான் அழைக்கிறாள். “சொல்லும்மா...?”

“என்னங்க.... நீங்க இப்ப எங்க இருக்கீங்க...?”

“சைதாப்பேட்டையில கீதா ஜூவல்லரி இருககில்ல....?”

“கீதா ஜூவல்லரியா....?”

“உனக்கு நினைவில்லையா..? மெயின் ரோட்ல இருக்கே... போன மாசம் நீகூட அங்க ஒரு கல்வெச்ச நெக்லஸ் பார்த்துட்டு நல்லாருக்குன்னு சொல்லி வாங்கித்தரச் சொன்னியே... நான்கூட வருமானம் வர்றப்ப வாங்கிட்டு வர்றேன்னு சொன்னேனே...”

“ஆஹா... ஞாபகம் வந்திருச்சு. அங்கயா இருக்கீங்க...? பர்ச்சேஸ் பண்ணிட்டீங்களா...?” சரிதாவின் குரலில் குதூகலம் கும்மியடித்தது.

“அங்க இல்லம்மா... அந்த ஜூவ்ல்லரிக்குப் பக்கத்துல இருக்கற காபிஷாப்ல இருக்கேன்...”

“அடத்தூ...! லேண்ட்மார்க் சொல்ற அழகப்பாரு... வீட்டுக்கு வாங்க, இன்னிக்கு இருக்கு...” மறுமுனையில் அவள் பல்லைக் கடிக்கும் சப்தம் இங்கே கேட்டது. “அங்க என்ன பண்றீங்க...?”

“காபிஷாப்ல சாராயமா குடிக்க முடியும்..? என் ஒண்ணுவிட்ட ஃப்ரெண்டோட உக்காந்து காபி குடிச்சுட்டிருக்கேன்...”

“என்னது...? ஒண்ணுவிட்ட ஃப்ரெண்டா..?”

“என் ஃப்ரெண்ட் சிவா இருக்கான்ல... அவனோட நண்பர்ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வெச்சான் இவரை. அதனால நண்பனோட நண்பனை ஒண்ணுவிட்ட நண்பன்னுதானே சொல்லணும்..? அதுசரி... நீ எதுக்குக் கூப்ட்டே...?”

“உங்க கோப்ரோ நம்ம வீட்டுக்கு வந்து உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காரு. உடனே வீட்டுக்கு வாங்கன்னு சொல்லத்தான்...”

“என்னது...? கோப்ரோவா..? அப்படின்னா...?”

“அதாங்க... ப்ரதர்ங்கறதை இப்ப சுருக்கமா ப்ரோன்னு சொல்றாங்கல்ல... கோ-பிரதரை நான் சுருக்கமா கோப்ரோன்னு சொன்னேன். எங்கக்கா வீட்டுக்காரர் கைலாச அத்திம்பேர் வந்திருக்காரு...”

“அவரை நீ கோப்ரான்னே சொல்லிருக்கலாம். மனுஷன் உடம்பெல்லாம் விஷமாச்சே... அவரைப் பார்த்தாலே எனக்கு வந்துருமேடி காப்ரா...”

“எங்க சைட்ல யாராயிருந்தாலும் உங்களுக்கு இளப்பம்தானே...? அந்த சமாச்சாரத்தை அப்பறம் டீல் பண்ணிக்கறேன். இன்னும் அரை மணிக்குள்ள நீங்க வீட்ல இருந்தாகணும். இல்லே....”

‘சரீ... சரீ... வால்யூமைக் கூட்டாத... இப்ப வந்துடறேன்....” என்றுவிட்டு போனை கட் பண்ணினேன். என் சகலை கைலாஷ் எப்போது வந்தாலும் எனக்கு கேஷ் லாஸ் என்பது என் கடந்தகால அனுபவங்கள் தந்த பாடம். இப்போது என்ன மாதிரியான விஷயத்துடன் வந்திருக்கிறாரோ தெரியலையே... என்ற பயத்துடனேயே கிளம்பினேன் நான்.

வீட்டின் வாசலில் என் வாகனத்தை நிறுத்தத்துக்குக் கொண்டு வரும்போதே கிட்டத்தட்ட பி.எஸ்.வீரப்பா பாணியிலான என் சகலையின் சிரிப்புச் சத்தம் கேட்டது. “வாங்கோ மாப்ளே... வாங்கோ...” என்று பல்லெல்லாம் வாயாக வரவேற்றார் என் வீட்டின் உள்ளே நுழைந்த என்னை! ஆறடி உயரம், ஒரு ஏரியாவின் ரோட் மேப்பையே வரையலாம் போல அகன்ற நெற்றி, (ஆரம்பகால) விஜயகாந்த்துக்கு இருந்தது போல பெரிய கண்கள், சின்ன்ன்ன சைஸ் மூக்கு (பிற்பாடு தன் பிள்ளை எப்படி மூக்கால் அழும் என்று அவர் அம்மா கவலைப்பட்டிருப்பாள்), தடிமனான, பட்டையான உதடுகள் - இவை கைலாஷின் முகலட்சணங்கள்.

“நமஸ்காரம். நல்லா இருக்கேளா...?” என்று வலிந்து புன்னகையை வரவழைத்தபடி கை கூப்பினேன் நான். “சரி... அண்ணாக்கு காபி, டிபன் ஏதாச்சும்....” என்று நான் இழுக்க... “அதெல்லாம் பேஷா ஆச்சு மாப்ளே... நான் வந்த விஷயத்தை சொல்லிட்டு உடனே கிளம்ப வேண்டிருக்கு. உங்களுக்காகத்தான் வெய்ட் பண்ணிண்டிருந்தேன். அது என்னன்னாக்கே... போன தடவை நான் சென்னை வந்திருந்தப்ப என்னை ............. மாலுக்கு சினிமா பாக்க கூட்டிண்டு போனேளே... ஞாபகம் இருக்கோ...?”

மறக்கக்கூடிய அனுபவமா அது..? ஹும்...! பெருமூச்சுடன், “நல்லாவே நினைவிருக்கு. சொல்லுங்கோ...” என்றேன். “அங்க க்யூவில நின்னப்ப நம்மளை ஒரு ஃபாரம் ஃபில்லப் பண்ணித்தரச் சொல்லி சொன்னானோல்லியோ... அந்த கம்பெனிலருந்து போன் பண்ணினான். என் கூப்பனை ப்ரைஸ்க்கு செலக்ட் பண்ணிருக்காளாம் மாப்ளே... டார்ஜிலிங்ல நாலு நாள் தங்கறதுக்கு காட்டேஜ் ப்ரீயாத் தராளாம். சமைக்கறதுக்கு குக்லாம்கூட அரேஞ்ஜ் பண்ணிடறாளாம். போய்ட்டு வர செலவும், சாப்பாட்டுக்கான செலவும் மட்டும்தான் நாம பண்ணிக்கணுமாம்...” என்றார் பியானோ கட்டைகள் போன்று அகலமாயிருந்த தன் பற்களைக் காட்டி, அதே பி.எஸ்.வீ.யின் ஸ்டைல் சிரிப்பை உதிர்த்தார்.

“கங்காரு... ச்சே... கங்க்ராஜுலேஷன்ஸ்! சந்தோஷமாப் போயிட்டு வாங்கோ...” என்று கை குலுக்க கை நீட்டினேன். “இல்லை மாப்ளே... நான் போக முடியாது. அந்த ஆஃபரை இன்னும் பத்து நாளைக்குள்ள யூஸ் பண்ணிக்கணுமாம். இந்த நேரம் பார்த்து என் பையனுக்கு அம்மை போட்டுடுத்து... ஸோ... நீங்களும் சரிதாவும் போய்ட்டு வாங்கோ... அந்தக் கம்பெனில போய் நாம ஒரு ஃபாரம் பில்லப் பண்ணிக் கொடுத்தா போதும், மாத்திக்கலாமாம். பேசிட்டேன்....” என்றார்.

திகைத்தேன். ’ழே’ என்று விழித்தேன். “இப்படி திடீர்னு முடிவெடுக்கறது கஷ்டம்ணா... இந்த மாசம் பட்ஜெட் டைட்...” என்று நான் ஆரம்பிக்கும் முன்னாலேயே இடைவெட்டினார். “நம்மளை மாதிரி மிடில்க்ளாஸ்க்கெல்லாம் எப்பத்தான் ஓய் டைட் இல்லாம இருநதது? நாமளா பிளான் பண்ணி எப்பவாவது போக முடியற இடமா அது? சான்ஸை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்குங்கோ...” என்றார். 

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா ப்ளைட் டிக்கெட், சாப்பாட்டு செலவு, அங்க சுத்திப் பாக்கற செலவுன்னு எப்படிப் பார்த்தாலும் பெரிய தொகையாயிடுமே...” என்று நான் இழுக்க... “அவருக்கு எப்பவும் நம்ம பக்கத்து மனுஷா எந்த ஐடியா சொன்னாலும் பட்ஜெட் முன்னால வந்துரும், இல்லாட்டி ஹெல்த் கெட்டுப் போயிடும், அதுவும் இல்லாட்டி அவரோட அம்மாவோ, தங்கச்சியோ வீட்டுக்கு வர்றதா கழுகுக்கு மூக்குல வேர்த்த மாதிரி லெட்டர் போட்டுடுவாங்க... இத்தனை வருஷமா இவரோட குப்பை கொட்டறேனே (இப்பத்தான் சரியா தான் செய்றதை சொல்றா மகராசி) இது மாதிரி எத்தனை வெளியூர் ட்ரிப் ப்ளான் பண்ணி கேன்சலாயிருக்கு தெரியுமா... எதுக்கும் குடுப்பினை வேணும் அத்திம்பேர்.... இவரோட அம்மா இருக்காளே....” என்று நான்ஸ்டாப்பாக சரிதா ஆரம்பிக்க... “சரி... சரி.... இநதப் ப்ளானுக்கும் சரிதான் சரி... நாம போலாம்...” என்றேன் அவசரமாக. (வேறு வழி? அப்படி அவள் வாயை மூடாவிட்டால் என் முப்பாட்டன் என்ன... அறுபாட்டன் எழுபாட்டன் பரம்பரை வரை சொல்லிக் காட்டுவாள். ஹி... ஹி..)

“குட்... இப்பத்தான் சரியாப் பேசறேன் மாப்ளே...” என்றபடி எழுந்தார் கைலாஷ். “நீங்க பட்ஜெட்லாம் போட்டு சிரமப்பட வேணாமேன்னுதான் உங்களுக்காக வெயிட் பண்ண நேரத்துல நான் அப்ராக்ஸிமேட்டா எல்லாச் செலவும் எவ்வளவு ஆகும்னு நான் கணக்கு போட்டுப் பார்த்தே வெச்சிருக்கேன். இதோ பாருங்கோ....” என்று ஒரு சீட்டைக் கையில் எடுத்து நீட்டினார். அசால்ட்டாக அதைக் கையில் வாங்கிப் பார்த்த எனக்கு ‘மொத்தம்’ என்ற தலைப்பிற்கு நேரே அவர் போட்டிருந்த தொகையைப் பார்த்ததும் த...லை...யை...ச்... சு...ற்...ற.....

‘டொம்ம்ம்ம்!‘

ஜுரத்தால வீட்ல ரெஸ்ட்ல இருக்கறதால
ஜுர வேகத்துல திடீர்னு தோணினதை 
மனசுக்கு வந்தபடி கிறுக்க ஆரம்பிச்சதுல
இதுவரை வந்துருச்சு. இதுக்கு மேல
எப்படி தொடர்கிறதுன்னு தெரியல... ஸோ...
தொடரலாம்...?!!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube