Friday, June 28, 2013

விதிகள் மீறப்படுவதற்கா?

Posted by பால கணேஷ் Friday, June 28, 2013
மைதியாக, இனிமை நிரம்பிய முகத்தினனாக வாழ வேண்டும் என்று மனம் விரும்பினாலும், நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களால் ஆன இச்சமுதாயம் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் என் மனம் சினங்கொண்டு ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறது. இப்படி பொதுப்படையாகச் சொன்னால் எதுவும் புரியவில்லை அல்லவா? சற்றே உதாரணங்களுடன் விளம்பிட விழைகின்றேன் யான்.

சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம். கோயமுத்தூருக்குப் பயணச் சீட்டு பெறுவதற்காக அடுத்தடுத்து அனுமனின் வால் போல நீண்டிருக்கும் நான்கு வரிசைகளில் ஒன்றில் நின்றிருக்கிறேன் நான். எனக்கு முன்னால் எத்தனை பேர் என்று எண்ணிப் பார்த்து, ‘இருபத்தைந்து பேர் கடந்து சென்றபின்தான் நாம் பயணச் சீட்டு பெற இயலுமா?’ என்று பெருமூச்சினை வெளியேற்றிக் கொண்டிருந்த ‌வேளையில் விறுவிறுவென்று வந்த, ஆடம்பரமாக உடையணிந்த ஒருவர் வரிசையில் தனக்குத் தெரிந்த நபர் ஒருவர் முன்னால் நின்றிருப்பதைக் கண்டதும், அவர் பெயர் சொல்லிக் கையாட்டியபடி அவர் பின் சென்று நின்று கொண்டார். வரிசையிலுள்ளவர்கள் ஆட்சேபிக்க, ‘‘இவர் என்னுடன் இருந்தவர்தான். ‘அல்பசங்கை’க்காக போயிருந்தார்’’ என்று முன்னால் நின்றிருந்த அந்தத் தடியர் விளக்கம் கூறி கேட்டோர் வாயை அடைத்து விட்டார். அதன்பின் வந்த மற்றொரு இளைஞன், முன்னால் நின்றிருந்த ஓரிருவரிடம் சென்று தனக்கும் சேர்த்து ஒரு ஈரோட்டுக்கு ஒரு பயணச்சீட்டு எடுத்துத் தரும்படி மன்றாடிக் கொண்டிருந்தான்.

அண்ணா அறிவாலயத்திலிருந்து உடனடி வளைவு எடுத்து வாணிமகால் நோக்கிச் செல்லும் சாலையில் என் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன். எதிரில் சிவப்பு விளக்கு பளிச்சட, வாகனத்தை நிறுத்துகிறேன். ஒரு நிமிடக் கரைசலில் எதிரே சென்று கொண்டிருந்த வாகனங்கள் குறைந்துவிட, ஒன்றிரண்டு வாகனங்களே தூரத்தில் வருவதைக் கண்ணுற்று என் பின்னால் நின்றிருந்த ஒன்றிரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை அலட்சியம் செய்து தங்கள் வாகனத்தை விரட்டுகின்றனர். எனக்குப் பின்னே நின்றிருக்கும் மகிழ்வுந்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் ஒலி எழுப்புகிறார். திரும்பிப் பார்த்தால் என்னை முன்னேறச் சொல்லி சைகை காட்டுகிறார். எதிரில் பார்த்தாலோ சிவப்பு விளக்கு இன்னும் பச்சையாக மாறியிருக்கவில்லை. அதன்பின் 35 விநாடிகள் காத்திருந்து பச்சை மாறிய பின்பே நகர்த்துகிறேன். என்னைக் கடந்து செல்லும் மகிழ்வுந்துக்காரர், வேகம் குறைத்து, ‘‘வேலைவெட்டி எதுவும் இல்லியாய்யா உனக்கு? அனாவசியமா என்னையும் லேட் பண்ணிட்டியே...! .... .......’’ என்று (கோடிட்ட இடங்களில் பிரசுரிக்கத் தகாத சொற்கள்) என்னை வழுத்திவிட்டு விரைகிறார்.

இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் எனக்குள் எழுந்த சினவெறிக்கு அளவேயில்லை. இப்படி முறைதவறி வரிசையைப் புறக்கணித்து பயணச்சீட்டைப் பெறுபவர் மனதில் ‘தான் புத்திசாலி’ என்றும் ‘காரியம் சாதிக்கும் திறமையாளன்’ என்றும் பெருமை இருக்க வாய்ப்புண்டு. அது நிஜமா? நான்கைந்து வரிசையை ஒழுங்குபடுத்த ஒரு காவலரே உளர் என்கிற நிலையில் அவர் எத்தனைதான் கவனித்துத் திருத்த முடியும்? அங்கே சுயஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டியது பொதுமக்களின் பொறுப்பல்லவா?  வரைமுறை மீறி, ஒருவன் விரைந்து பயணச் சீட்டு பெறுவதன் மூலம் விதிகளை மதித்து ஒழுங்காக நிற்கும் அனைவரையும் முட்டாளாக்குகிறான் என்பதல்லவா பிரத்யட்சம்! இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக் குரல் கொடுத்து, சண்டையிட்ட அனுபவம் எனக்கு உண்டெனினும் அன்றைய தினம் என் அவசரம் கருதி பொறுமையாய் இருந்ததன் மூலம் நானும் ஒரு குற்றவாளியானேன்.

விதிகளைப் புறக்கணித்து வாகனத்தை விரைவுபடுத்திச் சென்ற அந்த மகிழ்வுந்து வாணிமஹால் அருகில் சிவப்பு விளக்குக்கு கட்டுப்பட்டு நின்றிருந்தது. விதிகளை மதித்து நிதான வேகத்தில் சென்ற நானும் அந்த மகிழ்வுந்தின் பின்னாலேயே என் வாகனத்தை நிறுத்தினேன். எனில், அந்த (தேவையற்ற) விரைவு காரணமாக அவர் சாதித்ததுதான் என்ன? அவரின் விரைவினால், பதட்டத்தினால் ஏதேனும் விபத்து நிகழ்ந்திருந்தால் அதனால் வேதனையும், காலதாமதமும் தானே மிச்சம்? வேறென்ன பயன் விளைந்துவிடப் போகிறது? ஏதோ தீப்பற்றிக் கொண்ட இடத்திற்கு விரைவது போல ஏன் இப்படி அனைவரும் கன்னாபின்னாவென்று வேகத்தில் விரைகிறார்கள்? மேல்நாடுகளில் இருப்பது போன்று இங்கு வெவ்வேறு வாகனங்களுக்கு தனித்தனி பாதைகளா ஒதுக்கப்பட்டிருக்கிறது?

இந்த இரண்டு விஷயங்களும் என்னுள் எழுப்பிய கேள்வியொன்றை உங்கள் முன் வைத்திட விழைகின்றேன். யாரேனும் அருகிலிருந்து வலியுறுத்தினால், தண்டித்தால்/கண்டித்தால் மட்டுமே விதிகள் பின்பற்றப்பட வேண்டியவை. இல்லாவிட்டால் விதிகளை மீறி நடந்தாலும் குற்றம் ஒன்றுமில்லை என்கிற மனப்பாங்க‌ை எவர் விதைத்தது இந்த மனிதர்களுக்கு? ஏதோ ஓரிருவர் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தது போக, அவர்களைக் கண்டு பலரும் விதிகளைக் கடைப்பிடித்து என்ன ஆகப் போகிறது, நாம் ஏமாளியாவதுதான் மிச்சம் என்று தாங்களும் மாறிவிட வாய்ப்பு அதிகம் உள்ளதே! கல்விச் சாலைகளில் ஒழுக்கமும் நன்னடத்தையும் போதிக்கப்பட்டது எல்லாம் வீண்தானா?

கோலெடுத்தால் ஆட்டம் போடும் குரங்கினமா இந்த ம(ஆ)க்கள்? எனில், கடும் தண்டனைகளுக்கு மட்டும்தான் நம் மக்கள் கட்டுப்படுவார்களா? என்னதான் வழி இதுபோன்றவற்றைக் (தீர்வு காண்பதற்கல்ல) கண்ணுறும்போது பொங்கிக் கொந்தளித்த சினமடையும் மனதைக் கட்டுப்படுத்துவதற்கு? இதுபோன்ற பல வினாக்கள் என்னுள்ளே விடையற்றுத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. என்னரும் தோழர்களே... எவர் விண்டுரைப்பீர் இதற்கான விளக்கத்தினை...!

Wednesday, June 26, 2013

சரிதாவின் சபதம்!

Posted by பால கணேஷ் Wednesday, June 26, 2013
‘‘இதோ பாருங்க... நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ தெரியாது... உடனே உங்க அருமை மாமாவைக் கிளப்பியாகணும். அவ்ளவ்தான்...’’ என்றாள் சரிதா இடுப்பில் கை வைத்தபடி.

‘‘வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்தா சந்தோஷப்படணும் சரி. இப்ப... உங்கம்மாவோ தம்பியோ வந்தா ரொம்ப நாள் தங்காம தொண்ணூறே நாள்ல கிளம்பிடறாங்க. நான் ஏதாவது சொல்றேனா...? நீ ஏன் என் மாமாவை இப்படி கரிச்சுக கொட்டறே? அவர் ஒருத்தருக்கு எக்ஸ்ட்ராவா சமைக்கறதால என்ன கொறைஞ்சுடப் ‌போறே?’’

‘‘சந்தடி சாக்குல எங்கம்மா டேரா போடறாங்கன்னு சொல்லாட்டி உங்க தலை வெடிச்சுடுமே...! அவர் இருக்கறதுல எனக்கென்ன ஆட்சேபணை? ஆனா, உங்க மாமா பிளேடு பரந்தாமன் இருக்காரே...’’

‘‘இதபாரு... அவர் பேரு வெறும் பரந்தாமன்தான்...’’

‘‘சரி, வெறும் பரந்தாமன் இருக்காரே... ரொம்ப ரொம்பப் படிச்சவர்தான்; விஷயம் தெரிஞ்சவர்தான். அதனால பேச ஆரம்பிச்சா... ரொம்ப சுவாரஸ்யமா மணிக்கணக்கில பேசி போரடிக்கிறார். எல்லா லாங்வேஜ்லயும் அவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை ‘புல் ஸ்டாப்’ தான் போலருக்கு. அவரோட பேச்ச‌ை நிறுத்தறதுங்கறது 100 வாட்ஸ் பல்பை வாயால ஊதி அணைக்கற மாதிரி... ஸ்ஸப்பா.... என்னால முடியலங்க...’’ என்று அலுத்துக் கொண்டாள்.

‘‘அதான் அவர் 15 நாள்ல கிளம்பிடுறதாச் சொல்லியிருககாரேடி...’’ என்றேன் பரிதாபமாக.

‘‘இந்த நாராயணசாமி‌ டயலாக்தானே வேணாங்கறது. அப்படி அவர் சொல்லியே நாலு 15 நாளாயிடுச்சு.... நீங்களானா ஹாயா ஆபீஸ் போயிடறீங்க... இங்க கெடந்து அவஸ்தைப் படறது நான்ல்ல...! ஒரு வாரமா கரடியாக் கத்தறேனே... உங்களுக்குக் கொஞ்சமாச்சும் உறைக்குதா? அறிவிருக்குதா?’’

‘‘என்கிட்ட அதைல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்டேனே...’’

‘‘என்னது...? என்ன சொன்னீங்க...?’’ என்று பத்துமைல் நான்ஸ்டாப்பாக ஓடிவந்து நின்றவள் போல கோபப் பெருமூச்சு விட்டபடி கேட்டாள். இதற்கு மேலும் பேசினால் ஆபத்து என்பதை அனுபவம் உணர்த்தியதால், ‘‘இப்ப என்ன பண்ணச் சொல்ற என்னை?’’ என்றேன்.

‘‘இப்ப மாமாக்கு ஒதுக்கியிருக்கற ரூமுக்குப் போறோம். அவர்ட்ட சாமர்த்தியமாப் பேசி நீங்க ஊருக்குக் கிளப்பறீங்க...’’

‘‘என்கிட்ட இல்லாததையெல்லாம் எதிர்பார்த்தா என்னம்மா நியாயம்...?’’ என்று முனகியபடியே (வேறு வழியின்றி) மாமாவுக்கு ஒதுக்கியிருந்த அறை நோக்கி நடந்தேன்.

ண்ணாடியில் பார்த்து தலைசீவியபடி ‘‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்; அவள் மாம்பழம் வேண்டு‌மென்றாள்’’ என்று (கோரமாக) பாடிக் கொண்டிருந்தார் மாமா. நடு மையங்களில் காலியாகி எல்லையோரங்களில் மட்டும் சில செடிகள் இருக்கும் தோப்பு போல, அவரது ‘துப்பறியும் சாம்பு’ தலைக்கு சீவும் ஆசையெல்லாம் வராக்கூடாததுதான். பின்னால் வந்தபடியே, ‘‘நல்லவேளை... நீங்க டாஸ்மாக்ல நிக்கலை மாமா...’’ என்றேன். ‘‘பலேடா கண்ணா..’’ என்றபடி அருகில் வந்துவிட்டிருந்த சரிதாவின் தோளில் பலமாகத் தட்டினார் மாமா. உற்சாகம் ஓவராகி விட்டால் அருகில் இருப்பவரின் தோளிலோ, தொடையிலோ பளாரெனத் தட்டுவது அவரது மேனரிஸம்(?)

‘‘மாமா... காலம்பற வரது பேசினான். உங்களைப் பிரிஞ்சு இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்காம். அப்பா என்னதான் பண்றார் அங்க, உடனே இங்க அனுப்பிடுன்னான்’’ என்றேன். ‘‘‌நேத்துக்கூட நான் பேசினேன... இப்படி எதும் சொல்லலையே படவா... இருக்கட்டும், பேசிக்கறேன்...! இங்க கொஞ்சம் வேலை இருக்கு. சில பேரைப் பாக்க வேண்டியிருக்குடா. முடிச்சுட்டு கிளம்பிர வேண்டியதுதான்...’’ என்ற படி சோபாவில் அவர் அமர, அவர் அருகில் அவசரமாக என்னை அமர வைத்தாள் சரிதா.

டி.வி.யில் சிவகுமார் பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தபடி மாமா, ‘‘கம்பராமாயணத்துல கம்பன் ‌என்ன சொல்லியிருக்கான் தெரியுமோ...? ‘ஹனுமான் கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்’ன்னு. எல்லாரும் கண்ணாலதானே பாப்பா? இதை ஏன் ஸ்பெசிபிககாச் சொல்லணும்? ஹனுமான் தன் கண்ணால பார்த்தான்னு அர்த்தமில்லடா கண்ணா. அங்க இருந்த ஏகப்பட்ட பெண்கள்ல சீதை கண்கள்ல மட்டும் தாரை தாரையா கண்ணீர் கொட்டிருந்ததை வெச்சு இவதான் ஜானகியா இருக்கணும்னு அவளை கண்களால அடையாளம் கண்டானாம். எப்பூடி?’’ என்று உற்சாகமாக என் தொடையில் தட்டினார். ‘‘சூப்பர் மாமா...’’ என்றேன் முகத்தைச் சுளித்தபடி

 ‘‘அம்மா சரிதா... ஹனுமான் கண்ணுக்கு ஒரு வெள்ளைப் பூ சிவப்பாத் தெரிஞ்சுதாம். ஏன்னு ‌சொல்லு...’’ என்று கேட்க, சரிதா ‘ழே’ என்று விழித்தபடி, ‘‘மஞ்சள் காமாலை மாதிரி அவருக்கு சிவப்புக் காமாலைன்னு ஏதும் வந்திருக்குமோ மாமா?’’ என்றாள். ‘‘ஹா... ஹா... அதில்ல... கடு்ங்கோபத்துல ஹனுமான் இருந்ததால அவர் கண்ணுல வெள்ளைப் பூ சிவப்புப் பூவாத் தெரிஞ்சிருக்கு.’’ என்றபடி அவர் கையை உயர்த்த, அவசரமாக நான் நகர்ந்து கொண்டேன். சோபாவின் முதுகில் தட்டினார். ‘‘அப்புறம் சரிதா...’’ என்று அவர் ஆரம்பிக்க, ‘‘நான் உங்களுக்கு காபி போட்டு எடுத்துண்டு வர்றேன் மாமா...’’ என்றபடி வேகமாக ‘எஸ்கேப்’பானாள் என் சகதர்மிணி. எனக்கு எஸ்கேப்பாக காரணம் ஏதும் கிடைக்காததால் பொறுமையாக மாமாவின் (நான்ஸ்டாப்) பேச்சுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

டுத்தடுத்து இரண்டு வாரங்கள்தான் ஓடிக் கடந்தன. மாமா கிளம்புகிற வழியாகத் தெரியவில்லை. அன்று வீட்டினுள் வரும்போதே பரபரப்பாக வந்தாள் சரிதா. ‘‘என்னங்க... மாமாவை ஊருக்குக் கிளப்ப ஒரு வழி கண்டுபிடிச்சுட்டேன்’’

‘‘என்னமோ, அமெரிக்காவுக்கு வழி கண்டுபிடிச்ச கொலம்பஸ் மாதிரி அவ்வளவு பெருமையாச் சொல்ற? என்ன.. உன் கையால மைசூர் பாகு பண்ணி அவருக்குத் தரலாம்னு ஐடியா பண்ணியிருக்கியா?’’

முறைத்தாள். ‘‘அதில்ல. பெருமாள் கோயில் போயிருந்தேன்ல.. அங்க பரமசிவனைப் பார்த்தேன்...’’

‘‘பெருமாள் கோயில்ல ஏதுடி பரமசிவன்? ஹனுமாரையும், கருடனையும்ல்ல பார்த்திருப்ப?’’

‘‘ஹய்யோ... நான் சொல்றது என்னோட ஒண்ணுவிட்ட மாமா பையன் பரமசிவனை. கோயில்ல அவனைப் பார்த்துப் பேசிண்டிருந்தப்ப ஒரு சூப்பர் ஐடியா சொன்னான்... நான் நாளைக்கே உங்க மாமா அவர் ஊர்ல இருக்கும்படி பண்ணிடறேன் பாருங்க...’’

‘‘உன்னால ஆகற காரியமாப் பேசுடி. மாமா இப்போதைக்குக் கிளம்ப மாட்டார். உன்னால நிச்சயம் அதைப் பண்ண முடியாது..’’

 ‘‘முடியுதா இல்லையான்னு பாருங்க... இன்னைக்கு நைட்டு மாமா ஊருக்குப் புறப்பட்டிருப்பார். அப்படி இல்லன்னா, அடுத்த ஒரு வருஷத்துக்கு என் பிறந்த வீட்டைப் பத்தி ஒரு வார்த்தை பேச மாட்டேன். இது சரிதாவின் சபதம்!’’

‘‘அதுஏன் கடைசி வார்த்தைய மட்டும் இப்படி ஹை பிட்ச்ல சத்தமா சொல்றே?’’

‘‘எல்லாம் உங்களுக்காகத்தான். தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்னு யாரும் கேட்டுறக் கூடாதில்ல...’’

‘‘கதைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னே யாரும் இதுவரை கேட்டதில்ல. இதையா கேட்டுறப் போறாங்க... நான் வர்றேன்...’ என்றபடி என் வாகனத்தை உதைத்து அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

லுவலகத்தில் அன்றைக்குப் பார்த்து ஏகப்பட்ட ஆணிகள். பிடுங்கிவிட்டு வர இரவு மணி எட்டாகி விட்டிருந்தது. வீட்டினுள் நுழையும் போதே கவனித்தேன்- வீடு படு நிசப்தமாயிருந்தது. ஆனந்தமாக டி.வி.யில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த சரிதா, என்னைக் கண்டதும் ‘தம்ப்ஸ் அப்’ சிம்பல் காட்டினாள்.‘‘மாமா ஒன்பது மணி ட்ரெயினைப் பிடிக்க கிளம்பிப் போயாச்சு.... சரிதாவின் சாதனை!’’

‘அட, இதுகூட நல்ல டைட்டிலா இருக்கே’ என்று ஒரு கணம் யோசித்த நான், ‘‘என்ன பண்ணினே அப்படி அவர் அவசரமாக் கிளம்பிப் போகற அளவுக்கு?’’ என்று கேட்டேன். மெல்லப் புன்னகைத்த அவள் அருகில் வந்து, ‘‘சென்னையில வெயில் ரொம்ப கொளுத்துது. ஒரே புழுக்கமா இருக்கு. ஃபேன் பத்தலைன்னாரு. பேசாம மத்தியான நேரத்துல ஏ.ஸி. தியேட்டர்ல சினிமா பாத்துட்டு கூலா வாங்கோ மாமான்னு சொன்னதும் சரின்னார். சமீபத்துல நீங்க பாத்த நல்ல படம்னும், ரொம்பப் புகழ்ந்துட்டிருந்தீங்கன்னும் இந்தப் படத்தைப் பத்திச் சொலலி, அவருக்கு டிக்கெட் வாங்கிக் குடுத்து அனுப்பினேன். படம் பாத்துட்டு வந்தவர் மூஞ்சில அருளே இல்ல. ‘என்ன மாமா, படம் பிடிச்சிருந்துச்சா? இவர் ரசிச்ச இன்னொரு படத்துக்கு நாளைக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன்’னேன். ‘இல்லம்மா. ஊர்ல எல்லாத்தையும் போட்டது போட்டபடி விட்டுட்டு வந்துட்டேன். நான் அடுத்த தடவை வர்றப்ப பாத்துக்கறேன். நான் கிளம்பறேன்’னுட்டு பொட்டியக் கட்டிட்டாரு...’’ என்று சிரித்தாள்.

‘‘அடிப்பாவி...! அவர் என்னப் பத்தி என்ன நெனச்சிருப்பார்? சமாதானம் பண்ணவே நான் ரொம்ப மெனக்கெடணுமே! சரி சரி... அப்ப நான் போய் நாளன்னிக்கு ‌மேட்னி ஷோவுக்கு அதே படத்துக்கு மூணு டிக்கெட் புக் பண்ணிட்டு வர்றேன்’’

‘‘என்னது...? மறுபடி டிக்கெட்டா? எதுக்குங்க?’’

‘‘நாளைக்கு உங்கம்மாவும் தம்பியும் இங்க வர்றாங்களாம். ஈவினிங் போன் வந்துச்சு. அதான்...  நீயும் அவங்களும் பாக்கலாமேன்னுட்டு...’’ என்றவன் உடன் நகர்ந்ததால் பறந்து வந்த டம்ளர் சுவரில் மோதி உருண்டது. அடுத்தடுத்து பறந்து வரும் பொருட்களிலிருந்து தப்ப... இப்போது அவசரமாக எனக்குத் ‌தேவை ஒரு கேடயம்! யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன் ப்ளீஸ்...!

Monday, June 24, 2013

தமிழ் படிங்க - புன்னகையுடன்!

Posted by பால கணேஷ் Monday, June 24, 2013
ந்த ஒரு மனிதனும் தான் கற்ற மற்ற மொழிகளில் பிழைபட பேசவும் எழுதவும் செய்வானே தவிர, தன் தாய்மொழியைப் பிழையறக் கற்றிருப்பான். தாய்மொழியில் எழுதுவதிலும் பேசுவதிலும் தவறு செய்கிற‌ ஒரே இனம் தமிழனாகத்தான் இருக்கும். அதற்குத் தமிழனை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. மிகத்தொன்மையான தமிழ் மொழியானது, காலப்போக்கில் பிறமொழிச் சொற்களால் கலப்புற்று, ஒவ்வொரு வட்டாரங்களிலும் வசிப்பவர்கள் தங்களுக்கென தனித் தனியாகப் பேசும் முறைகளை உண்டாக்கிக் கொள்ள... மதுரைத் தமிழ், நெல்லைத தமிழ், கொங்கு தமிழ், சென்னைத் தமிழ் என்று பல ஸ்டைல்களாகப் பிரிந்து நிற்கிறது.

இதுபற்றாதென்று தமிழ்வழிக் கல்வி படிப்பது கேவலம், ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது என்கிற எண்ணம் தமிழ் மககளின் மனதில் விதையூன்ற, ‘நாமதான் படிககல... நம்ம புள்ளையாவது படிக்கட்டுமே’ என்கிற ஆதங்கப் பாசத்துடன் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கொழிக்க வைத்ததன் விளைவு... இன்று பலரும் தமிழை தப்புத்தப்பாக எழுதுகிறார்கள். தமிழில் கவிதை எழுதும் சிலர் கூட ‘செய்துப் பார்த்தான்’ என்றெல்லாம் கண்ட இடங்களில் ஒற்றைப் பிரயோகித்து எழுதுவதைக் கண்டு நொந்து போனதுண்டு நான். அப்பாதுரை ஸார் கேட்ட மாதிரி தமிழுக்கு மட்டும் ஏன் இத்தனை ரூல்ஸ்?

என்னாச்சு இந்த ஆசாமிக்கு? படு சீரியஸாப் பேச ஆரம்பிச்சுட்டாரேன்னு நீங்க நினைக்கிறது புரியுது. விஷயம் என்னன்னா... தமிழ்ல சரளமாப் பேசற நிறையப் பேர்கள் எழுதும் போது தப்புக்கள் நிறையப் பண்ணுறாங்க. வல்லின மெல்லின வித்தியாசம் புரியாம ‘ன’ ‘ண’ மாத்தி எழுதறது, ‘ல’ ‘ள’ தப்பாப் போடறது, தேவையில்லாத இடங்கள்ல ஒற்றுக்களைச் சேர்த்து எழுதி தமிழைத் தப்பில்லாம எழுதிட்டதா மார் த்டடிக்கிறது இப்படி ஏராள விஷயங்கள்!

என்னிடம் பேசும்போது ஒன்றிரண்டு பேர் கேட்டதுண்டு. ‘‘தமிழைப் பிழையின்றி எழுத, எங்கெங்க ஒற்று வரணும், வரக்கூடாதுன்ற மாதிரி முக்கிய விஷயங்களைச் சொல்லித் தர்றதுக்கு எளிமையா ஏதாவது புத்தகம் இருக்குங்களா? தெரிஞ்சா உடனே வாங்கிப் படிச்சுடுவேன்’’ அப்படின்னு. ‘‘அப்படி ஏதாச்சும் நல்ல புத்தகம் கண்ல பட்டா சொல்றேங்க’’ என்று ரெடிமேட் பதிலைச் சொல்லிவிட்டு நழுவி விடுவேன். இப்ப... அப்படி ஒரு நல்ல புத்தகம் கண்ணுல பட்டுருச்சு. அதப்பத்திச் சொல்லத்தான் இத்தனை பீடிகை! (என் கைல பீடின்னு அர்த்தம் பண்ணிக்காதீங்க... படிக்கறவங்களை தயார்படுத்தறதுக்காக சுத்திவளைக்கறதைக் குறிக்கற வார்த்தைங்க).

 தமிழ் வகுப்புல தமிழாசிரியர் பாடம் நடத்தற மாதிரி இலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சா, படிக்கறவங்க புத்தகத்தைக் கீழ வீசிட்டு நகர்ந்துடுவாங்கன்னு நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கறாரு நூலாசிரியர். அதனால ரெண்டு நண்பர்கள் பேசிக்கற மாதிரி உரையாடலை அமைச்சு மெல்லிய நகைச்சுவை கலந்து எழுதி, காப்ஸ்யூலுக்குள்ள மருந்தை அடைச்சுத் தர்ற மாதிரி எளிமையா தமிழ் இலக்கணப் பாடத்தை நடத்தியிருக்காரு. படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு. இன்றைய மாடர்ன் இளைஞர்களும் படிச்சுப் புரிஞ்சுக்கற மாதிரி லேட்டஸ்ட் சினிமாப் பாட்டுகள் உட்பட எளிய .உதாரணங்கள் கூறி தமிழ் கற்பிக்கப்படுகிறது இப்புத்தகம் மூலமா.

இடக்கரடக்கல் அப்படின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? சரவணபவன்ல அறிமுகப்படுத்தியிருக்கற புது டிபனான்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு விமோசனமே கிடையாது.

தொடை தெரியுமா? ‘ஓ! ரம்பா பல படங்கள்ல காட்டியிருக்காங்க, பாத்திருக்கேனே’ன்னு சொன்னீங்கன்னா நீங்க தேற மாட்டீங்க. ‘இயைபுத் தொடை’ன்னு ஆரம்பிச்சு தமிழ்ல ரூல்ஸே இருக்குது.

அப்புறம்.... புணர்ச்சி விதிகள் தெரியுமா? இந்தக் கேள்விக்கு மட்டும் முகம் பிரகாசமாகுது. ‘தெரியும்’னு பலமா தலையாட்டறீங்க... நீங்க நினைக்கிறது இல்லீங்க... தமிழ்ல ரெண்டு வார்த்தைகளைச் சேர்க்கறதுக்கு, இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சின்னு ரூல்ஸ் இருக்கு. அதத்தான் கேட்டேன்.

அப்புறம் எந்த இடத்துல ‘ஒரு’ங்கற வார்த்தைய பிரயோகிக்கணும், எங்க ‘ஓர்’ வரணும்னு தெரியுமா உங்களுக்கு? தமிழ் வார்த்தைகள்ல எங்க வலி மிகும் தெரியுமா...? சரி.. சரி... நீங்க உருட்டுக கட்டையவும், பெண்கள் பூரிக் கட்டையவும் வீசி எனக்கு வலி மிகுந்து போறதுக்குள்ள விஷயத்தைச் சொல்லிடறேன்.. அதுவும் தமிழ் இலக்கணத்துல ஒரு பகுதிதாங்க.

இதுபோல பல தலைசுற்ற வைக்கிற விஷயங்களை, கொஞ்சம் கூடக் குழப்பமில்லாமல், நகைச்சுவை ததும்புகிற எழுத்து நடையில் சொல்லித் தருகிறது ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ என்கிற புத்தகம். இதை எழுதியிருக்கிறவர் இலவசக் கொத்தனார் (ராஜேஷ் கர்கா) என்பவர். இவர் முன்னாடியே ‘ஈஸியா பழகலாம் வெண்பா’ன்னு ஒரு புத்தகம் எழுதி, வெண்பா எழுதப் பயிற்சி கொடுத்திருந்தார். இப்ப இது. பயன் தரும் 112 பக்கங்கள் கொண்ட இந்த நூலை ரூ;75 விலையில சென்னை ராயப்பேட்டையில, லாயிட்ஸ் ரோட்ல, அம்பாள் பில்டிங்கில, 177/103, முதல் தளம் என்ற இலக்கத்தில் இருக்கிற கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க. (தொலைபேச: 4200 9603)

தப்பில்லாம தமிழ் எழுத விரும்பறவங்களுக்கு இந்தப் புத்தகத்தை நான் சிபாரிசு பண்றேன். வாங்கிப் படித்துப் பலனடையுங்கள். உரையாடல் வடிவத்துல சொல்லியிருக்கறதால அதுல உள்ள நகைச்சுவையப் படிச்சு சிரிச்சுட்டு பாடத்த மனசுல வாங்கிககாம போயிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சு, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் அந்த சாப்டர்ல போதிக்கப்பட்ட இலக்கணங்களை சிறு குறிப்புகளா, புல்லட் பாயிண்ட்கள் வைச்சு கொடுத்திருக்கறது இந்த நூலோட கூடுதல் சிறப்பு.

Saturday, June 22, 2013

பிரபலமாக (குறுக்கு) சுருக்கு வழி!

Posted by பால கணேஷ் Saturday, June 22, 2013
தோழி மஞ்சுபாஷிணியுடனான சந்திப்பு நிகழ்ந்த தினத்தன்று பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வலையுலகில் பிரபலமாவது எப்படி என்பது பற்றிப் பேச்சு வந்தது. ‘‘யாரையாவது திட்டி எழுதினா சீக்கிரம் பிரபலமாய்டலாம்’’ என்று சேட்டையண்ணா சொல்ல, ‘‘ஆமா சீனு. அடேய் கணேஷான்னு ஆரம்பிச்சு ஏதாவது என்னைத் திட்டி நீ எழுதி, நான் காரசாரமா அதுக்கு பதில் தந்தா பரபரப்பு ஏற்படும். நாம சீக்கிரம் பிரபலமாயிடலாம்’’ என்றேன் நான். ‘‘அப்படியா? சரிவருமா?’’ என்றார் சீனு. நான் சொன்னேன்:

‘‘டேய் சீனு...! நான் ஸ்கூல் படிக்கிற பையனா இருந்தப்ப நடிகர் ஜெமினிகணேசனுக்கு கமலஹாசன் வளர்ப்பு மகன் மாதிரி. ரெண்டு பேருக்கும் உள்ள அட்டாச்மெண்ட் எல்லாருக்குமே தெரியும். ஆனா ‘குமுதம்’ பத்திரிகையில ஜெமினி, கமலைத் திட்டி ஒரு கடிதம் எழுத, கமல் அதுக்கு சூடா அடுத்த வாரம் பதில் தர, மறுபடி ஜெமினி எழுத, கமல் திட்ட... இப்படி நாலு வாரங்கள் வந்ததுக்கப்புறம் ரெண்டு பேருமே கட்டிப்பிடிச்சுட்டு சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் குடுத்து, ‘நாங்க விளையாட்டாதான் சண்டை போட்டுக்கிட்டோம். எங்களுக்குள்ள எதுவுமில்‌ல’ன்னாங்க. ஆனா அந்த நாலு வாரமும் பரபரப்பு ஏற்பட்டு, பத்திரிகை நல்லா வித்திச்சு. அதுமாதிரிதான் எனக்கு நீ எவ்வளவு வேண்டியவன்னு எல்லாருக்கும் தெரிஞ்சாலும் தொடர்ந்து நாலஞ்சு லெட்டர் காரசாரமா எழுதிக்கிட்டோம்னா நிஜமாவே பதறிடுவாங்க... பரபரப்பு கிளம்பி நீ பிரபலமாகறியோ, இல்லையோ... நான் பிரபலமாய்டுவேன்’’ என்றேன். ‘‘சரி வாத்தியாரே... உடனே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுடறேன்’’ன்னாரு சீனு.

நேத்திக்கு சீனு இதப் பத்தி பதிவு போட்ருக்காரேன்னு ஆர்வமா உள்ள போய்ப் படிச்சா... எதுவும் திட்டாம நகைச்சுவையா எழுதி நம்ம தமிழ் சினிமா ஹீரோக்கள் மாதிரி போங்கு ஆட்டம் ஆடியிருக்குது பயபுள்ள...! தமிழ் சினிமா ஹீரோக்கள் என்ன போங்கு ஆட்டம் ஆடினாங்கன்னு ஆர்வமா எழும்பற குரல் எனக்கு கேக்கறதால ரெண்டு பாரா செலவழிச்சு அதை முதல்ல சொல்லிடறேன். அப்புறம் இந்தச் சீனுப் பயலப் பத்திப் பேசலாம்.

ம்ம வாத்யார் எம்சியாரு இருககாருங்களே... ‘இதயக்கனி’ படத்துல வில்லன்க கூடாரத்துக்குள்ள ஒரு வெள்ளக்கார துரையா வேசம் போட்டுக்கிட்டு தன் பேரை ‘எம்.ஜி.ரெட்’ன்னு சொல்லிக்கிட்டு வருவாருங்க. "Hai baby, What's your name? Oh, How Sweet!" அப்டின்னு இங்கிலீசுல்லாம் பேசுவாருங்க. போட்ருககற வேசத்த கரெக்டாப் பண்ண வேணாமுங்களா...? ‘சபாஷ் வாத்யாரே’ன்னு நாம மனசுக்குள்ள நெனக்கறப்ப போடுவாரு பாருங்க ஒரு கூடை மண்ணை நம்ம நெனப்புல! ஒரு ஃபிகர் வந்து டான்ஸாட ஆரம்பிச்சதும், ‘‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’’னு நல்ல தமிழ்ல கணீர்க் குரல்ல பாடுவாருங்க. அதுவும் உங்கூட்டுத் தமிழ், எங்கூட்டுத் தமிழ் இல்லீங்கோ... அந்தாதித் தமிழ்ல பாடுவாரு. இந்த வில்லக் கேனையனுங்க உடனே விசயத்தப் புரிஞ்சுக்கிட்டு அவரப் போட்டுத் தள்றத விட்டுப்புட்டு, ‘ழே’ன்னு முழிச்சுக்கிட்டு அவரு பாடறத ரசிச்சுக்கிட்டிருக்கும்க! என்னத்தச் சொல்ல...!

வரயே தூக்கிச் சாப்ட்டு ஏப்பம் விட்டவருங்க நம்ம சூப்பரு ஸ்டாரு ரசினி! ‘படையப்பா’ங்கற படத்துல ஒரு பார்ட்டியில செந்திலும் மத்தவங்களும் கூல்ட்ரிங்க் கிளாஸ்ல பிராந்திய ஊத்திக் குடிச்சிட்டிருப்பாங்க. தண்ணியடிச்சா நம்ம படையப்பருக்குப் புடிக்காதுங்களே... அதனால! அப்ப நம்ம ரசினி வந்து செந்தில் கைல இருக்கற ட்ரிங்க்கைப் புடுஙகிக் குடிப்பாருங்க. ‘‘ஐயய்யோ... படையப்பா குடிச்சுட்டான்’’னு செந்தில் பதற, ‘‘ஏண்டா குடிச்சா என்ன? கூல்ட்ரிங் தானே?. இதையும் குடிப்பேன், இதையும் குடிப்பேன்’’னு எல்லார் கைல இருக்கறதையும் வாங்கிக் குடிச்சுப் போடுவாருங்க. ஸ்கூல் பையனுக்குக் கூட (பதிவர் இல்லீங்க, நிஜ ஸ்கூல் பையனச் சொல்றேன்) கூல்ட்ரிங்க்குக்கும், பிராந்தி கலந்த ட்ரிங்க்குக்கும் ஸ்மெல், காரம்னு ஆறு வித்தியாசம் தெரியும். நம்ம ரசினி பச்சப் புள்ள மாதிரி இல்லீங்களா... அவருக்கு எதுவுமே தெரியாம அப்புராணியாக் குடிச்சுப்புடுவாருங்க... ஆனா குடிச்சதுக்குப் பொறவு தனக்குள்ள என்ன நடக்குதுங்கறத மட்டும் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டு பாடுவாரு பாருங்க... ‘‘ஓஹோஹோ கிக்கு ஏறுதே’’ன்னு...! இப்படி ஒரு அப்பாவிப் புள்ளய உலகமெல்லாம் தேடினாலும் நீங்க பாக்க முடியாதுங்கோ! அர்சூனு, விசயகாந்துன்னு மத்த ஹீரோக்களப் பத்தி சொல்ல ஆரம்பிச்சா, பல பதிவுகள் தேவைப்படுமுங்கோ!

இப்படில்லாம் ஜனங்களை ஏமாளிங்களா நினைச்சு நம்ம ஹீரோக்கள் ஆடற போங்கு ஆட்டத்தை மாதிரித் தாங்க சீனுவும் எழுதிப்புட்டாரு... சரி, திட்டறதுன்னா எப்படின்னு நம்ம சிஷ்யப்புள்ளைக்குத் தெரியல.. நாம நாலு வார்த்தை ‘நல்லதா’ திட்டிக் காமிச்சுரலாம்னு முடிவு பண்ணிட்டேங்க.  யாரும் என்னைத் தடுக்காதீங்க...! யாரையாச்சும் திட்டறதுன்னு முடிவு பண்ணிட்டா, அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேங்க. ஹி... ஹி...!

லேய் சீனு! சரியான கோட்டிக்காரப் பயபுள்ளையா இருக்கியேலேய்! இல்ல, நான் தெரியாமத்தான் கேககுறேன்... இம்புட்டு நாளா பதிவு எழுதிட்டிருக்கியே... ஏதாச்சும் உருப்படியா எழுதினதுண்டாலே நீயி? சவத்து மூதி! கதைய எழுதறேங்க... பயண அனுபத்தை எழுதறேங்க... நாட்டுக்கு ஏதாச்சும் பிரயோஜனம் உண்டாலே? எம்பூட்டு ஏழை சனங்க சோத்துக்கு வழியில்லாம தவிக்குதுங்க... அதுங்களப் பேட்டி எடுத்துப் போட்டியாலே நீயி? பொசகெட்ட பயலே! எம்பூட்டு ஓட்டல்ல புகுந்து கன்னாபின்னான்னு வெட்டறே? எதயாச்சும் பத்தி சனங்களுக்குப் பிரயோசனமா பகிர்ந்துக்கிட்டியாலே நீயி? சரி போவுது களுத...அத விடு... மூணு மூணு வார்த்தையா எழுதி, நாலு நாலு வரியா மடக்கிப் போட்டுப்புட்டு கவிதைன்னு சொல்றாய்ங்களே... அவியளப் போல ஒண்ணாவது எழுதத் துப்பு இருக்காலே உனக்கு? போக்கனங்கெட்ட பயலே! சோறு தண்ணியில்லாம, நேரங்காலம் பாக்காம புதுப்படத்த ரிலீசான நாலு மணி நேரத்துக்குள்ள விமர்சனம் பண்ணத் தெறம இருக்காலேய் உனக்கு?  இதெல்லாம் இல்லாம நீயெல்லாம் பதிவரான்னே தெரியலியே லேய்! அப்புறம் என்னாத்தலேய் பிரபல பதிவராகறது?

ப்பூடிங்க...? பயபுள்ளக்கு இந்தத் திட்டு போதுமா, இல்ல இன்னும் காரம், மணம், குணம் சேத்துக்கலாமா? எலேய் சீனு...! திட்றதுன்னா எப்பூடின்னு இப்ப புரிஞ்சுட்டிருப்ப... என்னதான் கோபமா உன்னியத் திட்டினாலும் நம்ம பயலாச்சேன்னு பாசமும் இருக்கறதால ஒரு அட்வைசும் சொல்றேன், கேட்டுக்கலேய்...! உனக்கு கோபம் வந்து, (இல்லாத) மீசை துடிச்சு, பதிலுக்கு நீ திட்டறதானா என்னை மாதிரி மனுசங்க பேர்ல எழுதறவங்களைத் திட்டு... இல்ல, தெகிரியமில்லேன்னா, ‘‘வாத்யாரே நான் ஆட்டத்துக்கு வரலை’’ன்னு ஜகா வாங்கிட்டு, கோவை ஆவி, ஸ்கூல் பையன் மாதிரி உஞ்சோட்டு பசங்களத் திட்டு. அதை வுட்டுட்டு ஓவரா உணர்ச்சிவசப்பட்டு வவ்வாலு, பன்னிக்குட்டின்னு பறவை, பிராணிங்க பேர்ல எழுதற மனுசங்க யாரையும் திட்டிப்புடாத. நானாச்சும் கைப்புள்ள மாதிரி மெல்லமா வயித்துல குத்துவேன். அவிய்ங்க கோவக்கார பயபுள்ளைங்க... ஓங்கிக் குத்தினா ஒம்பது டன் வெயிட் லேய்! குத்தினாங்கன்னு வையி... உனக்கு டாங்க் பர்ஸ்ட்டாயிடும் பாத்துக்கோ...! சூதானமா நடந்துக்க...! வர்ட்டா?

Thursday, June 20, 2013

டெஸ்ட் கிரிக்கெட்டும், 20/20யும்!

Posted by பால கணேஷ் Thursday, June 20, 2013
லைப்பதிவை எழுதிவிட்டு நண்பர்கள் யார் கருத்திடுவார்கள் என்று காத்திருந்து, கருத்துக்களுக்கு பதிலளித்து, நாம் எழுதியது ரசிக்கப்படுகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிற வகையில் இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்குச் சமமானது. முகநூலிலோ, ஒரு விஷயத்தை அப்லோட் செய்த சில கணங்களிலேயே நண்பர்களால் படிக்கப்பட்டு, விரும்பப்படுகிறதா இல்லையா என்பதையும் கமெண்ட்டையும் பெற்றுவிட முடிகிற வகையில் 20/20 மேட்சுகளைப் போலத் தோன்றுகிறது எனக்கு முகநூல். ஆனாலும் எனக்கு 20/20யைப் பிடிககிற அதே அளவுக்கு டெஸ்ட் மேட்ச்களும் பிடிக்கும் என்பதால் முகநூலில் அப்லோட் செய்த இரு விஷயங்களை இங்கும் பகிர விரும்பியே இந்தப் பதிவு. 

ரிஷபண்ணா வீட்டு மாடியிலிருந்து ஸ்ரீரங்க கோபுர தரிசனம்!œ
கடந்த சனி ஞாயிறு திருச்சி சென்றிருந்தேன். நான் சென்ற வேலையையும் பூர்த்தி செய்து கொண்டு பதிவுலக உறவுகளான ரிஷபன் அண்ணா, வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் கோவை டு தில்லி ஆகியவர்களைச் சந்தித்தேன். சனி இரவு ரிஷபன் அண்ணாவின் இல்லத்தில் தங்கியதில் வயதில் மூத்தவராக இருந்தாலும் சுறுசுறுப்பில் இளையவராகவும், என் ரசனைக்கு ஒத்துச் செல்பவராகவும் இருந்த ரிஷபண்ணாவின் அப்பாவைச் சந்தித்த உரையாடியது மிக மகிழ்வானது. நான் தந்த ‘சரிதாயணம்’ புத்தகத்தில் சாம்பிளுக்கு ஒரு கதையை சுடச்சுட படித்துவிட்டு அவர் பாராட்டியது இன்னும் சந்தோஷம் தந்த விஷயம்.

உபசரித்து அசத்திய வை.கோ.!
மறுதினம் காலை வை.கோ. அவர்களை சந்திக்கச் சென்றோம் நானும் ரிஷபன் அண்ணாவும். வை.கோ. அவர்களின் விருந்தோம்பலைப் பற்றி அப்பா ஸாரும், தோழி மஞ்சுவும் நிறையச் சொல்லியிருந்ததால், முதல்நாளே சொல்ல வேண்டாம், சர்ப்ரைஸாகப் போகலாம் என்று ரிஷபண்ணாவிடம் சொல்லியிருந்தேன். அப்படிச் சென்றும்கூ;ட விதவிதமான ஸ்னாக்ஸ், குளிர்பானம் என்று தந்து உபசரித்து அசத்தினார் வை.கோ. கூடவே எனக்கு ஒரு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து (வெட்கத்தில் என்னை நெளிய வைத்து) என் மீது அவர் கொண்ட மதிப்பையும் அன்பையும் தெற்றென வெளிப்படுத்தினார். ‘‘மறுபடி ஒரு தடவை நிதானமா நிறைய நேரம் இருக்கற மாதிரி வாங்கோ’’ என்ற அவரின் அன்புக்கு நன்றி சொல்ல இன்னும் வார்த்தைகளை நான் தேடிக் கொண்டு தானிருக்கிறேன்.

வை.கோ. வீட்டிலிருந்து மலைக்கோட்டை தரிசனம்!
அன்று மாலை என் நண்பர் வெங்கட்டின் துணைவியார் ஆதி வெங்கட் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். புத்தகம் படிப்பதில் நிறைய ஆர்வம் கொண்ட ‌தோழி அவர் என்பது எனக்கு ரொம்ப்ப பிடித்த விஷயம். வெங்கட்டின் தாயாரையும், தந்தையாரையும் அறிமுகம் செய்வித்தார். வெங்கட்டின் அப்பாவும் சுறுசுறுப்பாகவும், பளிச்சென்று பேசி, அன்புடன் பழகுபவராகவும் இருந்தார். எனக்கு அவரை மிகப் பிடித்துப் ‌போனதில் வியப்பில்லை... அவருக்கு என்னைப் பிடித்துப் போனதுதான் வியப்பு! புறப்படுகையில், ‘‘அடுத்த தடவை வந்தா ஒரு நாள் என்கூட தங்கற மாதிரி வரணும்’’ என்று அன்பான உத்தரவாக என்னிடம் அவர் சொன்னது என் பாக்கியம்.

மொத்தத்தில் அங்கிருந்த வார இறுதி நாட்கள் முழுக்க மிக மகிழ்ச்சியுடன் கழிந்து எனக்குள் டன் கணக்கில் புத்துணர்வைத் தந்தது என்பதே நிஜம்! இரவு ரயிலில் வருகையில்தான் என்னுடன் அன்பாய்ப் பழகி உபசரித்த இவர்கள் யாவருக்கும் பதில் மரியாதை ஏதும் செய்யாமல் வந்துவிட்டேன் என்பது மனதுக்கு உறைத்தது. தலையில் கு்ட்டிக் கொண்டேன். அடுத்த முறை அவசியம் ஏதாவது செய்யத்தான் வேணும்!

செவ்வாய்க்கிழமையன்று தோழி மஞ்சுபாஷிணியின் தமிழக வருகையை முன்னிட்டு புலவர் ஐயாவின் வீட்டில் காலை 10 மணிக்கு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பன் கோவை ஆவி சென்னைக்கு வருவதாக திங்களன்று போன் செய்து சொன்னதும் கூடுதல் மகிழ்வானது எனக்கு. அவரையும் அழைத்துச் செல்வதெனத் தீர்மானித்தேன். சொன்னதும் ஆனந்தும் மகிழ்வுடன் சம்மதித்தார். செவ்வாய் ‌காலை நானும் ஆனந்தும் மயிலாப்பூருக்கு ஒரு வேலையாகச் சென்றுவிட்டு காலை ஒன்பதரைக்கு புலவர் ஐயா வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கையில் சசிகலா போன் செய்து, தான் வந்துவிட்டதாகச் ‌‌சொல்ல, எப்பவும் லேட்டாக வரும தென்றல் இன்று புயலாய் வந்து என்னை முந்தி விட்டதில் மயக்கம் வராத குறை எனக்கு.

இடமிருந்து: சீனு, கண்ணதாசன், கோவை ஆவி, சசி, சேட்டை, புலவர், மதுமதி, மஞ்சு, ரூபக்!
புலவர் ஐயாவின் வீட்டுக்கு அடித்துப் பிடித்‌துச் சென்றால், அங்கே சசியுடன், கண்ணதாசன் வந்திருக்க, மஞ்சுபாஷிணியை அழைத்து வந்திருந்தார் மதுமதி. பதிவர் சந்திப்பு என்றாலே மது இல்லாமல் இருக்காது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்த ‘மது’ இல்லாமல் என்னைப் பொறுத்தவரை பதிவர் சந்திப்பு கிடையாது. எல்லாருக்கும் ‘ஹாய்’ ‘ஹாய்’ சொல்லிவிட்டு, ஆனந்தை அறிமுகப்படுத்திவிட்டு உடல்நலக் குறைவினால் ஓய்வில் இருக்கும் சேட்டைக்கார அண்ணாவை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு சூளைமேடு கிளம்பினேன்.

புறப்படுகையில் சமீபத்திய காதல் மன்னன் சீனு போன் செய்து புலவர் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். சீனுவுடன் ரூபக் ராமும் பில்லியனில் உட்கார்ந்து செல்வதைப் பார்த்தபடியே கடந்து சென்று சேட்டையண்ணாவின் வீட்டை அடைந்து அவரை புலவர் வீட்டுக்குக் கடத்தி வந்தேன். சேட்டை மீன்ஸ் கலகலப்பு! அவர் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தமும், உற்சாக ஒலிகளும் இருந்து கொண்டே இருக்கும். அன்றும் அப்படியே! கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் பையன் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் பர்மிஷன் சொல்லிவிட்டு ‘பரோலில்’ வர, அரட்டைக் கச்சேரி களை கட்டியது.

நிற்பவர்கள்: சசி, கண்ணதாசன், அடியேன், ஸ்கூல் பையன், மதுமதி. அமர்‌ந்திருப்பவர்கள்: சேட்டைய்ண்ணா, புலவர், மஞ்சு. கீழே: ரூபக் ராம், சீனு, கோவை ஆவி (எ) ஆனந்த்.
மஞ்சுபாஷிணியின் எழுத்திலும் பின்னூட்டத்திலும் நீங்கள் பார்க்கும் வாஞ்சையும், கனிவும் நேரில் சந்திக்கையில் அதிகமாகவே உணர்வீர்கள். மதிய உணவு நேரத்திற்குப் பின் சீனுவும், ரூபக்கும், ஸ்கூல் பையனும் கிளம்பி விட்டனர். முதல்நாள் நைட் டூட்டி பார்த்துவிட்டு தூககத்தைத் துறந்து நண்பர்களைச் சந்திக்க உற்சாகமாய் வந்திருந்த ரூபக்குக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு! அப்புறமென்ன... மஞ்சு, என் தங்கை ஸாதிகாவைப் பார்க்க வேண்டுமென்று சொல்ல, ஸாதிகாவின் வீட்டிற்கு வழிகாட்டி அழைத்துச் சென்றேன். சசிக்கு பையன்கள் பள்ளிவிட்டு வரும் நேரமாகி விட்டதால் ஸாதிகாவுக்கு ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு ‌கிளம்பிட்டாங்க.

நாங்கள் அனைவரும் ஸாதிகாவின் உபசரிப்பிலும் அன்பிலும் நனைந்தோம். மஞ்சுவை நான், மது, கண்ணதாசன், ஆனந்த் நால்வருமாக உடன் சென்று அண்ணா நகரில் அவங்க தங்கை வீட்டில விட்டுட்டு திரும்புகையில் மணி மாலை ஆறரையைத் தாண்டிவிட்டிருந்தது. மஞ்சு திருநள்ளாறு உட்பட சில இடங்களுக்கு விசிட் அடிச்சுட்டு, பெங்களூரு போவதாகவும் அங்குள்ள நட்புகளை போனில் பேசி அழைத்து சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாங்க. பெங்களூரு ஃப்ரெண்ட்ஸ்...! ப்ளீஸ் நோட் திஸ்!

ஆக மொத்தத்தில் மூன்று முழு தினங்கள் கணிப்பொறியை அண்டாமல், நண்பர்களுடன் உற்சாகமாகப் பழகி, மனம்விட்டுச் சிரித்து மகிழ்ந்ததில் எனக்கு பத்து வயது குறைந்துவிட்ட ஃபீலிங்!  இந்த ரெமோவுக்கு இன்னும் பத்து வயசு குறைஞ்சுட்டதால நண்பர்கள் எழுதற காதல் கடிதங்களைப் படிக்கறதுக்கு இப்ப இன்னும் ஜாலியா, சுறுசுறுப்பா தயாராயிட்டாராக்கும்...! ஹி... ஹி...!

Sunday, June 16, 2013

ஒரு அவசர அறிவிப்பு

Posted by பால கணேஷ் Sunday, June 16, 2013
னைவருக்கும வணக்கம்...

கம்ப்யூட்டரைத் துறந்து, தொலைபேசியை சற்று மறந்து இரண்டு நாட்கள் ஊர்சுற்றி வரலாம் என்ற உத்தேசத்துடன் திருச்சி வந்து அதிலும் ஸ்ரீரங்கத்தில் சிவபெருமானின் வாகனத்தைப் பெயராகக் கொண்டவரின் இல்லத்தில் இருந்த என்னை காலை தொலைபேசியில் பேசி மீண்டும் வலைப்பக்கம் இழுத்துவந்து சிக்க வைத்து விட்டார் தோழி மஞ்சுபாஷிணி. புலவர் ஐயாவின் வலை இணைப்பில் பழுது. மதுமதியோ ஊரில் இல்லை. கண்ணதாசனும் தொடர்பெல்லைக்கு வெளியே... எனவே இரண்டு தகவல்களைச் சொல்லி. இவற்றை நீங்கள் வலையிலும் முகப்புத்தகத்திலும் பகிருங்களேன் என்றார்.

1) இன்று தந்தையர் தினம். மனைவியிடம் சில சமயங்களில் பாராட்டும், பல சமயங்களில் குட்டும் வாங்கி. அத்துடன் குடும்ப பாரத்தையும் சுமந்து. குழந்தைகளுக்காகக் கவலைப்பட்டுப் பொருளீட்டும் தந்தையர்களை இன்று வாழ்த்தி அவர்களுக்கு மகிழ்வையும் ஆறுதலையும் அளிப்போமாக...

2) 18ம் தேதி... அதாவது வருகிற செவ்வாய்க்கிழமையன்று காலை குவைத் நகரத்தைக் கலக்கிய புயல்... பெட்ரோலை பேரல் பேரலாக அங்கேயே விட்டுவிட்டு தனக்குள் எனர்ஜி பெட்ரோலை நிரப்பி வந்திருக்கும் எரிமலை... திருமதி மஞ்சுபாஷிணி அவர்களின் சென்னை விஜயத்தை முன்னிட்டு ஒரு கெட் டு கெதர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. துவங்கும் நேரம்.... காலை பத்து மணியிலிருந்து....  முடியும் நேரம்.... பதிவர்கள் சந்திப்புக்கு முடியற நேரம் சொல்றது சாத்தியமேயில்ல... எல்லாருக்கும டைம் இருக்கற வரை நீளும். மாலை வரை கூட தொடரலாம்.

ரைட்டு... காலைல வந்துடறோம், எங்கன்னு கேக்கறவங்களுக்காக... வரவேண்டிய இடம் நம்ம புலவர் ச.இராமானுசம் ஐயா அவர்களின் இல்லம். முகவரி... பழைய எண்.178.1, புது எண்.14.1, ரங்கராஜபுரம் மெயின் ரோடு, கோடம்பாக்கம். சென்னை 24. புறப்பட்டு வந்து கலந்துக்க விருப்பம் உள்ள நண்பர்கள் 90030 36166 என்ற எண்ணில் பாலகணேஷையோ, 90947 66822 என்ற எண்ணில் புலவர் ஐயாவையோ, 96001 66699 என்ற எண்ணில் கவியாழி கண்ணதாசனையோ, 98941 24021 என்ற எண்ணில் மதுமதியையோ, 95512 53993 என்ற எண்ணில் மஞ்சுபாஷிணியையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிச்சா மகிழ்ச்சின்னு மஞ்சு சொல்லச் சொன்னாங்க. மத்தபடி இவங்க யாரோட போன் நம்பரும் எனக்குத் தெரியாதுப்பா....

நா இங்க திருச்சியில் வசிக்கும் பதிவுலக நண்பர்களை (இதப் படிச்சுட்டு என் வருகையப் புரிஞ்சுட்டு தப்பி ஓடறதுக்கு முன்னால) போய் பார்த்துட்டு நாளைக்கு வந்துடறேன். நாளை மறுதினம் இந்த நிகழ்வை அனைவரும் வந்து கலந்து கொண்டு அசத்துங்கன்னு ரெக்வெஸ்ட் விட்டுக்கறேன். வர்ட்டா... ஸீயூ.

Monday, June 10, 2013

மொறுமொறு மிக்ஸர் - 18

Posted by பால கணேஷ் Monday, June 10, 2013
                                  
                                              மனசையும் நிறைத்த ‘தாய்’ மீல்ஸ்!

ழக்கமாக என் தாய் செய்து தரும் மீல்ஸையே சாப்பிட்டு வந்த எனக்கு நேற்று ‘தாய்’லாந்து மீல்ஸை ருசி பார்க்கும் அனுபவம் கிட்டியது. ‘‘சார்.. ஆழ்வார்பேட்டைல எஸ்.ஐ.ஈ.டி. காலேஜ் எதிர்ல ஒரு ஹோட்டல்ல ‘தாய்லாந்து’ ஃபுட் நல்லாயிருக்காம். ஆரூர் மூனா ஒரு மணிக்கு வர்றதா சொல்லியிருக்காரு. நீங்களும் ஜாயின் பண்ணிக்கறீங்களா?’’ என்று மெ.ப.சிவகுமார் கேட்டபோது, ‘‘ஓ.கே. சிவா’’ என்று சம்மதி்த்தேன். ஆனால் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்ட கேபிள், ‘‘தாய்லாந்து ஃபுடஸ் எல்லாமே ஸ்வீட் அண்ட் ஸோர் பேஸ்டா இருக்கும். விசாரிக்காம போனா ‘ழே’ன்னு முழிக்க வேண்டியிருக்கும். கான்டினென்டல் ஃபுட் பிடிக்காதவங்களுக்கு பிடிக்காது’’ என்றதும் கொஞ்சமென்ன... ரொம்பவே தயக்கமாக இருந்தது. ஆனாலும் ஆரூரார் அங்கேதான் சாப்பிட வேண்டுமென்று ஒற்றைக் காலில் நி்ன்றதால் அங்கேயே போனது நால்வர் அணி. தாய்லாந்துசெட் நான்வெஜ் லன்ச் ஆர்டர் பண்ணினார் ஆரூரார்.

முதலில் ஸ்டார்ட்டராக வெற்றிலை ஒன்றில் கொஞ்சம் கடலை, கொஞ்சம் இஞ்சி, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் சாஸ் எல்லாம் போட்டு பீடா மாதிரி ஒன்றைத் தந்தார்கள். என்னடா இது... கடைசில தர்ற பீடாவை முன்னாலயே தர்றாங்களேன்னு பாத்தா, அது பசியைத் தூண்டறதுக்காகன்னாரு கேபிள். சாப்ட்டுப் பாத்தா.. ரொம்பவே நல்லா இருந்தது. அடுத்ததா சூப் வந்தது. சூப். அதுவும் ஏமாற்றவில்லை. நல்ல ருசி! மூன்றாவதாக அவர்கள் தந்தது மாங்காயை மெல்லியதாக நறுக்கி சு‌வை சேர்த்த நூடுல்ஸ் மற்றும் சிக்கன் பீஸஸ்! மாங்காயின் இனிப்பு சுவையுடன் பற்களில் ஒட்டாத க்ரிஸ்பியான சிக்கன் பீஸ்களுடன்.... சூப்பரு்ஙகோ!

அப்புறம் ஒரு நூடுல்ஸ் தந்தார்கள் பாருங்கள்... நான் வாழ்க்கையில் இதுவரை சாப்பிடதிலேயே ரியல் டேஸ்ட் நூடுல்ஸ் இதுதாங்கோ..! எக்ஸ்ட்ரார்டினரி. பின் கொஞ்சம் ரைஸும், சிககன் குருமாவும்! இதுவும் ஏமாற்றாத சுவையில். கடைசியாக டெஸர்ட் கொடுத்தார்கள். தேங்காய்ப் பாலில் பலாச்சுளைகளை சிறிதாக கட் பண்ணி மிதக்கவிட்டு அதற்கு மேல் வெனிலா ஐஸ்க்ரீமை மிதக்க விட்டு.... ரியலி எக்ஸ்ட்ரார்டினரிலி டிவைன்லி டெஸர்ட்!

தாய் செட் லன்ச் ‌நான்வெஜ் ரூ.246ம் வெஜ் லன்ச் ரூ.226ம் என விலைப்பட்டியல் சொல்கிறது. இந்த டைப் தாய் லன்ச் சாதாரணமாக ரூ.700 ஆகுமென்றும், அறிமுகத்துக்காக இந்த விலை என்றும் ஆரூரார் சொன்னார். முகவரி: Sawadika, 21/45, First Floor (Opp. to S.I.E.T. College), K.B.Dasan Road, Alwarpet, Chennai-600 018. ஆழ்வார்பேட்டையில் கே.பி.தாசன் ரோடு எது என்று யோசிக்காதீர்கள். கவிஞர் பாரதிதாசன் ரோடு என்பதைத் தான் அத்தனை லட்சணமாக சுருக்கியிருக்கிறார்கள் அங்குள்ள கடைக்காரர்கள்! (டமில் வாலுக!) அடம்பிடித்து இங்கு எங்களை அழைத்துச் சென்ற (முக்கியமாக பில்லும் கொடுத்த) ஆரூரார் வாழ்வாங்கு வாழட்டும்!

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=


                                     துணிச்சலின் மறுபெயர் எம்.ஆர்.ராதா!

‘தூக்குமேடை நாடகத்துக்கு நாட்டுல எவ்வளவு ஆதரவு இருந்ததோ அவ்வளவு எதிர்ப்பும் இருந்தது.’’

‘‘பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையை முதன்முதலாக அம்பலப்படுத்திய நாடகம் அது என்று சொல்வார்களே, எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா?’’

‘‘நான்தான் எதிர்ப்பிலேயே வளர்ந்தவனாச்சே! அதுக்கெல்லாம் அஞ்சுவேனா? என் நாடகம் பாகற்காய் மாதிரி. கசப்பைப் பார்க்காம பாகற்காயைக் கறி வைத்துத் தின்னா உடம்புக்கு நல்லது; அதேபோல என் நாடகக் கருத்துகளிலே உள்ள உண்மையும் உங்களில் சிலருக்குக் கொஞ்சம் கசப்பாய்தான் இருக்கும். அதை முகத்தைச் சுளிக்காம, எதிர்த்துக் கூச்சலிடாம, அமைதியா இருந்து கேட்டா உங்க அறிவுக்கு நல்லது. எங்களுக்கு அறிவு வேணாம்னு யாராவது நினைச்சி கலாட்டா செய்யறதாயிருந்தா அவங்க தயவுசெய்து டிக்கெட்டைக் கவுண்ட்டர்லே கொடுத்துப் பணத்தை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுங்கம்பேன். அதையும் மீறி வம்புச் சண்டைக்கு வந்தா, அந்தச் சண்டைக்கும் நான் தயாராயிருப்பேன்.

‘‘நீங்க பார்த்திருப்பீங்களே... நம்ம சாமிகளிலே ஏதாவது ஆயுதம் ஏந்தாத சாமி இருக்கா? இருக்கவே இருக்காது. எல்லாச் சாமியும் ஆயுதம் ஏந்திக்கிட்டுத்தான் இருக்கும். எதுக்கு அப்படியிருக்கு? மனுஷனைக் கண்டு பயந்தா? ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய எல்லாச் சாமியும் அப்படியிருக்கு’ன்னு பெரியவங்க சொல்வாங்க. அந்த சாமிகளைப் போலவே நானும் என் எதிரிகளுக்காக எப்பவும் ஆயுதம் ஏந்தி ‘சாமி’யாவே இருந்துக்கிட்டிருந்தேன்..!’’

‘‘சுவாமிகள் ஏதாவது ‘தப்புத் தண்டா’ செய்தால்கூட அதைத் ‘திருவிளையாடல்’ என்று பக்தர்கள் சொல்லிவிடுவார்கள். நீங்கள் ‘தப்புத் தண்டா’ செய்தால்....’’

‘‘‘‘நானாக எப்பவுமே எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டேன். எல்லாம் தானாகத்தான் வந்து சேரும்...’’

‘‘அது உங்கள் ஜாதக விசேஷம் போலருக்கு...’’

‘‘இல்‌லே... நாடக விசேஷம்!’’

-‘எம்.ஆர்.இராதா-வாழ்க்கையும் சிந்தனையும்’ என்ற விந்தன் எழுதிய நூலை சென்னை கே.கே.நகரில் 5D, பொன்னம்பலம் சாலையில் இயங்கி வரும் ‘தோழமை’ பதிப்பகம் ரூ.80 விலையில் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு பகுதிதான் நீங்கள் மேலே படித்தது. கேள்வி-பதில்களாக எம்.ஆர்.ராதாவுடன் உரையாடியதை அவருடைய வார்த்தைகளிலேயே தொகுத்துத் தந்திருக்கிறார் திரு.விந்தன். படிககப் படிக்க சுவாரஸ்யமாகவும், யார் என்ன சொல்வார்களோ என்ற கவலை எதுவுமின்றி நிஜம் பேசியிருக்கும் எம்.ஆர்.ராதா என்ற துணிச்சல்காரரின் சுயரூபத்தைக் கண்டு பிரமிப்பும் விரிகிறது.  விருப்பமிருப்போர் வாங்கி வாசித்து இந்த அனுபவத்தை நீங்களும் பெறலாம்.

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
                                             நான் படித்த சில ந(பொ)ன்மொழிகள்:

பெண் என்பவளே என் தாய், என் சகோதரி, என் துணைவியும் அவளே, பெண்ணே என் மகள் என்னும் உணர்வு ஆண்களிடம் வேரூன்றித் தழைத்தால் பெண்ணுக்கு இழிவு நேருமா? நேராதே!

ன்னம்பிக்கை என்பதற்கும், ஆணவம் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு மிக நுண்மையானது. வலிமை குறைந்தவரிடம் ‘நான்’ ‘என்’ என்பவை தன்னம்பிக்கை. அதுவே வலிமை நிறைந்தவரிடம் ஆணவம் என்று பெயர் பெறும்.

டம்பும் ஒரு பாத்திரம்தான். அதில் அன்பு நிரந்தரமாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது பரிமளிக்கும். நாம் அன்பாகத்தான் இருக்கிறோம். ஆனால் அது காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் மாறிக் கொண்டே இருககிறதல்லவா? அப்படி இல்லாமல் நிலையாக அன்பு செய்ய வேண்டும்.

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
                                                           கொஞ்சம் ஹிஹிங்க...!

To end with a smile... இரண்டு ‌ஜோக்குகளைப் படித்து கொஞ்சம் ரிலாக்ஸ்... எப்போதோ எங்கேயோ கேட்ட, நான் ரசித்த ஜோக்குகள்.

1) மிக வேகமாக பாரில் நுழைந்தான் அவன். அங்கிருந்த விற்பனையாளனிடம், ‘‘சண்டை துவங்குவதற்குமுன் எனக்கு சீக்கிரமாக விஸ்கி ஒரு லார்ஜ் கொடு’’ என்றான். விற்பனையாளன் வியப்படன் ஊற்றிக் கொடுத்தான். அவன் மடமடவென்று குடித்துவிட்டு, மீண்டும், ‘‘சண்டை துவங்குவதற்குள் இன்னொரு லார்ஜ் கொடு’’ என்றான். அவன் மறுபடி ஊற்றிக் கொடுக்க, அவசரமாகக் குடித்து வைத்தான். இதே டயலாக்கைச் சொல்லி இப்படி ஐந்து லார்ஜ்கள் குடித்துவிட்டான். ஆறாவது லார்ஜை இதே வசனத்துடன் அவன் கேட்டபோது, விற்பனையாளன் கேட்டான் வியப்புத் தாளாமல்... ‘‘சண்டை துவங்கப் போகிறது என்கிறாயே... எங்கே துவங்கப் போகிறது. யாருக்கும் யாருககும் சண்டை?’’ ஆறாவது லார்ஜை நிதானமாகக் குடி்த்து முடித்த அவன் சொன்னான், ‘‘இங்கேதான் துவங்கப் போகிறது! உனக்கும் எனக்குமிடையில் தான்! நான் இதுவரை குடித்த ஆறு லார்ஜ்களுக்கும் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை!’’

2) அமெரிக்காவுக்கு சுற்றிப் பார்க்கச் சென்ற நம் இந்தியர் ஒருவருக்கு அவசரமாக ‘சுச்சா’ ‌போக வேண்டியிருந்தது. ஆள் நடமாட்டமற்ற தெரு ஒன்றைக் கண்டுபிடித்து, நம்நாட்ட வழக்கப்படி சாலையோரம் ஜிப்பை இறக்கப் போகையில் பின்னால் வந்து நின்ற அமெரிக்க போலீஸ்காரன் அவர் தோளில் தடியால் தட்டினார். ‘‘இங்கேயெல்லாம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது மிஸ்டர்! உனக்கு அவசரமெனில் நான் வேறொரு இடம் காட்டுகிறேன். அங்கே போயக் கொள்...’’ என்றான். நம்மவருக்கு ஒரே குஷி! ‘‘சீக்கிரம் இடத்தக் காட்டுப்பா’’ என்றார். அவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி அழைத்துச் சென்று ஒரு அழகான கட்டிடத்தைக் காட்டினார். அந்தக் கட்டிடத்திற்கு முன்னால் விசாலமாகப் புல்வெளிகளும், மரங்களும் இருந்தன. ‘‘இங்கே நீ விரும்பியதைச் செய்யலாம்’’ என்றார். நம்ம ஆள் அவசரமாக ஓடி ஒரு மரத்தின் மறைவில் ‘வேலை’யை முடித்துவிட்டு வந்து போலீஸ்காரனிடம், ‘‘சாலையோரம் செய்வதை விடுத்து இவ்வளவு அழகான கட்டிடத்தின் புல்வெளிக்கு ஏன் கூட்டி வந்தாய் என்னை? இது என்ன இடம்?’’ என்று கேட்டார். போலீஸ்காரன் நிதானமாகப் பதில் சொன்னார்... ‘‘இதன் பெயர் இந்தியத் தூதரகம் தம்பி!’’ என்று.


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
மைதானத்தில் மேய : சித்திரமேகலை-1

Friday, June 7, 2013

காதல்! ஒரு தென்றல் போல... அநேகமாக எல்லார் வாழ்விலும் காதல் அல்லது காதல் போன்றொரு உணர்வு ஒரு முறை கடந்து சென்றிருக்கும் என்பது நி்ச்சயம். அதென்னமோ தெரியவி்ல்லை... காதல் வந்தாலே கூடவே கவிதையும் வந்து விடுகிறது. காதலிக்கிற நபர்கள் ஒன்று கவிதை எழுதுகிறார்கள். அல்லது கவிதை என்று நினைத்துக் கொண்டு எதையாவது எழுதி, மற்றவர்களைப் படுத்துகிறார்கள். என் அறை நண்பன் ஒருமுறை காதலி கீழே ‌போட்ட பஸ் டிக்கெட், தவறவிட்ட பைசா எல்லாம் தனக்குப் பொக்கிஷம் என்று எழுதின கவிதையை அப்படி கிண்டலடித்திருக்கிறேன். ஏன்னா... அந்த ஃபீலிங் நம்ம பக்கம் திரும்பாததாலதான்! அதிர்ஷ்ட (துரதிர்ஷ்ட?) வசமாக எனக்கு காதல் அனுபவம் ஏற்படவில்லையென்பதால் கவிதை உலகம் தப்பிப் பிழைத்தது! ஹி.. ஹி...!

கோவையில் வேலைக்குச் செல்லத் துவங்கிய நாட்களில் ஒருமுறை கோவையில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். பஸ்ஸின் பின் பகுதியில் நின்றிருந்த என்னை முன் பகுதியில் நின்றிருந்த ஒரு மலையாளப் பெண் உற்று நோக்குவதைக் கவனித்தேன். புன்னகைத்தாள் என்னைப் பார்த்து. மலையாள பாணியில் வெள்ளையில் ஜரிகை பார்டர் போட்ட புடவை... கருகருவென இடுப்பைத் தொடும் கூந்தல்... ஏக்கரா கணக்கில் அகன்ற கண்கள்! செம க்யூட்! நான் சுற்றுமுற்றும் பார்த்து, நிஜமாகவே என்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறாளா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். (கன்னம் பழுத்துவிடக் கூடாது, பாருங்கள்... ஹி... ஹி...) என் அருகில் ஒரு தாத்தாவும், இந்தப் பக்கம் ஒரு பொடியனும் நின்றிருந்தார்கள். நிச்சயம் நம்மைப் பார்த்துத்தான் சிரிக்கிறாள் என்பது கன்ஃபர்ம்ட். நானும் புன்னகைத்தேன். அடுத்த நான்கு நிறுத்தங்கள் தள்ளி நாங்களிருவரும் இறங்கும் வரை பலமுறை என்னைப் பார்த்து சிரித்து, ஏதோ சொல்ல முயற்சித்தாள். எனக்குத்தான் சைகை பரிபாஷை புரியவில்லை. நான் இறங்கிய ஸ்டாப்பிலேயே அவளும் இறங்கியதால் ஆர்வத்தோடு அவளை அணுகி, ‘‘ஹாய்... என்கிட்ட ஏதோ சொல்ல வந்தீங்களே... என்ன?’’ என்று ஆர்வமுடன் கேட்டேன். ஒரு பந்தில் ஒரு விக்கெட் விழுவதைத்தானே பார்த்திருப்பீர்கள் நீங்கள்... அவள் சொன்ன ஒற்றை வார்த்தை என்னை இரண்டு முறை விக்கெட் வீழ்த்தி காலி பண்ணியது. அந்த வார்த்தை என்னவென்பதை நான் சொல்ல மாட்டேன்ப்பா!

காதல் என்பது பொதுவாக பெண்களுடன் சம்பந்தப்பட்ட விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. நட்பைக் காதலிக்க, இயற்கையைக் காதலிக்க, பெற்றோரைக் காதலிக்க என்று எத்தனை இருந்தாலும் ‘காதல்’ என்ற ஒற்றை வார்த்தை முதலில் குறிப்பது ஆண்-பெண் காதலைத்தான். காலேஜ் படிக்கும் காலத்தில் மஹேஸ்வரி என்ற ஒரு பெண்ணை அவளின் பழைய 10 பைசா நாணயம் போன்ற நெளிக் கூந்தலுக்காக விரட்டி விரட்டி சைட் அடித்தது நினைவில் இருக்கிறது. அப்பக்கூட காதல் என்ற உணர்வோ, கிட்டே போய்ப் பேசும் தைரியமோ வரவில்லை.

அதன்பின் ஸ்மூத்தாகப் போய்க்கிட்டிருந்த லைஃப்ல இன்னொரு பொண்ணு குறுக்கிட்டா. அலுவலக வேலை நிமித்தமாக கோவை பிராஞ்சிலிருந்த நானும், சென்னை பிராஞ்சிலிருந்த அவளும் நாள் முழுதும் நிறையப் பேச வேண்டியிருந்தது. பேச்சு அலுவலக விஷயங்களைத் தாண்டி எங்கெங்கோ போனதுல நேரில் சந்திக்காமலே லவ் ஸ்டார்ட்டாயிடுச்சு. லவ்வுன்னா உங்கூட்டு லவ்... எங்கூட்டு லவ இல்லீஙக.. செமையான லவ்! கோவையில பாக்கற எல்லாமே அழகாத் தெரிஞ்சது எனக்கு. என் ரூம் கூட பிரகாசமாயிட்ட மாதிரி ஃபீலிங். அறை நண்பன்தான் கேட்டான். ‘‘என்னடா ஆச்சு உனக்கு...? ஒரு வாரமா ‌கோமியம் குடிச்ச மாதிரி மூஞ்சிய வெச்சுககிட்டிரு்க்க?’’ என்று.

சரிதான்... இந்தக் காதல் நமக்குள்ளதான் பிரகாசத்தைத் தரும் போலருக்குன்னு நெனச்சுக்கிட்டேன். அந்தக் காதல் பின்னாடி நேர்ல சந்திச்ச ஒரு சந்திப்புக்கப்புறம் நீர்த்துப்‌ போச்சு. காதலி பை சொல்லிட்டா.. ஏன்னா நம்மளோட உருவ அழகு(?) அப்படி! அப்படின்னா அதுக்குப் பேர் காதலே இல்லன்னு நீங்க சொல்லலாம்... ஆனா என் சைட்ல முழு மனசோட இருந்ததால அது நிச்சயம் காதல்தான் அப்படின்னு நான் சொல்லுவேன். விதி அதுக்கப்புறம் நமக்கு இந்த அனுபவத்தைத் தந்து சோதிக்காம கல்யாணத்தைப் பண்ணிட்டு செட்டிலாயிருடான்னு சொல்லிடுச்சு. ஹும்...!

இப்ப எதுக்காக இப்படி காலயந்திரத்தில அதுவும காதல்ங்கற எபிஸோட்ல மட்டும் பேக் ட்ராவல் பண்ணனும் நாம? காரணம்... நம்ம கு.மி.சி. சீனுதாங்க! அவரோட தளத்துல காதல் கடிதங்களுக்கு ஒரு போட்டி வெக்கப் போறதாகவும், அதுக்கு நான் நடுவரா இருக்கணும்னும் கேட்டுக்கிட்டாரு. (ஐயோ, பாவம்!). காதல் கடிதங்கள் எழுதறதப் பத்தின ‌போட்டி அது. நடுவரா நீங்க இருந்து தகுதியானவங்களை செலக்ட் பண்ணித் தந்துட்டா ஒரு கார் வாங்கித் தர்றேன்னிருக்கார் சீனு! ஹி... ஹி... அந்தப் போட்டி பத்தின மேல் (அ) ஃபீமேல் விவரங்கள் வேண்டுவோர் இங்கே க்ளிக்குக. உடனே காதல்ங்கற சப்ஜெக்ட் மனசுக்குள்ள புயலாப் புகுந்துருச்சு. நான் உணர்ந்த காதலின் சில துளிகளை மனம் மீண்டும் நினைச்சுப் பாககவும். அதுலருந்து கொஞ்சத்தை உங்களோடல்லாம் ஷேர் பண்ணிக்கலாம்னு தோணிச்சு. சரின்னு எழுதி்யாச்சு. பின்ன காணான்... என்னங்க... ஓ...! அதுவா...?

அவள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை : ‘‘ஜிப்பைப் போடுங்க அண்ணா!’’
 

Wednesday, June 5, 2013

தெரியுமா இவரை - 6

Posted by பால கணேஷ் Wednesday, June 05, 2013
வின்ஸ்டன் சர்ச்சில்
 
சர். வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer Churchill)  என்பது அவருடைய நீளமான பெயர். 1874ம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த அன்னைக்கும், பிரிட்டிஷ்காரரான தந்தைக்கும் பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க போன்ற ஐக்கிய நாடுகளின் கூட்டுப் படைக்குத் தளபதியாக இருந்தவர் சர்ச்சில்! ஹிட்லர், முசோலினி ஆகிய சர்வாதிகாரிகளிடமிருந்து உலகைக் காப்பாற்றியவர் என்ற முறையில் சர்ச்சிலுக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் உண்டு.தன்னுடைய மிகச்சிறந்த வீரம் மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர் என்ற வகையில் அந்நாட்டு மக்களால் தேவதூதன் போல மதிக்கப்பட்டவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

அதற்கெல்லாம் அடிப்படை சர்ச்சிலின் பள்ளிப் படிப்பிலிருந்தே துவங்கியது. அவர் சிறுவனாக இருந்தபோதே ராணுவப் பள்ளியில் படித்தவர். அச்சம் என்பதை அறியாமல் வளர்ந்த இளைஞன் சர்ச்சில் முதலாம் உலக யுத்ததின் போது இங்கிலாந்தின் கப்பல் படை அமைச்ச்ராக இருந்தார். கடற்படையை மிகவும் வலுப்பெறச் செய்து வெற்றிகளைக் குவித்தார் அவர். இரண்டாம் உலகப் போர் துவங்கிய சமயம் ஹிட்லரின் ஹிட்லிஸ்ட்டில் இங்கிலாந்தும், பிரான்ஸும்தான் முதல் இடங்களில் இருந்தன. அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சேம்பர்லின் என்பவரின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்தார் வின்ஸ்டன் சர்ச்சில். சேம்பர்லின் அரசு ஹிட்லருடன் மோதத் தயாராக இல்லை. ஹிட்லருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் போட்டார் சேம்பர்லின். ஹிட்லரைப் பற்றித்தான் உலகறியுமே...  ஒரு பக்கம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டே மறுபக்கம் யுத்தத்திற்கான ஆயத்தங்களை செய்தார் அவர்.

வீரனாகிய அமைச்சர் சர்ச்சில், பிரதமர் சேம்பர்லினை இந்த விஷயத்தில் கடுமையாக எதிர்த்தார். ‘‘ஹிட்லருடன் ஒப்பந்தமிடுவது போரில் தோல்வி‌யை ஒப்புக் கொள்வதற்கு சமம். ஹிட்லரை நம்பக் கூடாது’’ என்று சீறினார். அவரி்ன வார்த்தைகள்தான் சரியென்பதை ஹிட்லர் நிரூபித்தார். அவரின் படைகள் குண்டுமழை பொழிந்தன. அதற்கு மேலும் பொறுமை காக்க இயலாமல் இங்கிலாந்தும், பிரான்ஸும் ஜெர்மனியை எதிர்த்து போருக்குத் தயாராயின. ஆனால் துவக்கத்தில் வெற்றி ஹிட்லரின் பக்கமே இருந்தது. தொடர்ந்து வெற்றிகளை ருசித்தது ஜெர்மனி. அச்சமயத்தில் இங்கிலாந்து பிரதமர் சேம்பர்லின் சோம்பல்-லினாக இருந்த காரணத்தால், அவரின் கட்சியிலேயே அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்ப, பிரதமர் பொறுப்பு சர்ச்சிலைத் தேடி வந்தது. ‌சர்ச்சிலின் வீரம், ராஜதந்திரம் இரண்டும் இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நம்பிய இங்கிலாந்து மக்களின் முழு ஆதரவும் அவருக்கு இருந்தது.

மக்களின் நம்பிக்கையை மெய்ப்பித்தார் சர்ச்சில்! நேசப்படைகளின் தளபதியானதும், முதலில் அதுவரை உலகயுத்தத்தில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்த அமெரிக்காவிடம் இங்கிலாந்தின் உறவை பலமாக்கினார். அமெரி்க்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டுடன் அவர் கொண்ட நட்புறவின் பயனாக, படைகளுக்குத் தேவையான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏராளமாகக் கிடைத்தன. இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் ஹிட்லர் அமெரிக்காவையும் சீண்டிவிட, பிரான்ஸ், இங்கிலாந்துடன் அமெரிக்காவும் கை கோர்த்து களத்தில் குதித்தது. வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர். யுத்த சமயம் அவர் ஆற்றிய உரைகள் படைகளை எழுச்சி கொள்ளச் செய்தன. அதைத் தவிர, Victory என்ற வார்த்தையின் முதல் எழுத்தைக் குறிக்கும் வண்ணம் V என்பதைப் போல இரண்டு விரல்களை உயர்த்தி (நம்ம வாத்யார் இரட்டை இலை காட்டுவது மாதிரி) காட்டுவார் சர்ச்சில். ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகத்தை அணை உடைத்த வெள்ளமாய் அந்த சைகை பொங்கச் செய்யும்.

1944ம் ஆண்டு சர்வாதிகாரிகள் அழிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அந்தப் போரில் இங்கிலாந்து மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு மகத்தான வெற்றி கிடைக்கக் காரணமாக இருந்தவர் சர்ச்சில். ஆனால் வாழ்வின் மிகப்பெரிய முரண்களில் ஒன்றாக... போரில் வென்ற சர்ச்சில், தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்தார். ஆம்! 1945ம் ஆண்டு சர்ச்சிலின் பதவிக் காலம் முடிய, இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட சர்ச்சிலுக்கு்க் கிடைத்தது தோல்வி. அதற்குக் காரணம் அவர் முன்பு நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த சட்டதிட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததை மக்கள் மறக்கவில்லை. மிகச் சிறந்த வீரனாகவும், ராஜதந்திரியாகவும் அவரை நம்பிய மக்கள் நாடாள்பவராக அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர், 1951ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மீண்டும் பிரதமரானார். 1955ம் ஆண்டு பதவியிலிருந்து விலகி அரசியல் ஓய்வு பெற்றார்.

போர்வீரராக இருந்தாலும் சர்ச்சிலுக்கு எழுதுவதில் பெரும் நாட்டம் இருந்தது. அவர் எழுதிய History of the English Speaking People புத்தகம் புகழ்பெற்றது. ஆறு தொகுதிகளைக் கொண்ட இவர் எழுதிய நூலான The Second world War என்ற புத்தகம் இவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. கவிதைகள் எழுதுவதிலும் சர்ச்சிலுக்கு மிகப் பிடித்த ஒன்று. இதைத் தவிர அழகாக ஓவியம் வரையும் திறமையும் சர்ச்சிலின் வசம் இருந்தது. பேச்சில் வல்லவரான அவரிடம் நகைச்சுவை உணர்வும் நிரம்ப இருந்தது. ஒருமுறை சர்ச்சிலின் வாதங்களுக்குப் பதில்தர முடியாத எதிர்க்கட்சி உறுப்பினர் கோபத்தில், ‘‘நீங்கள் என் கணவராக அமைந்திருந்தால் காப்பியில் விஷத்தைக் கலந்து உமக்குக் கொடுத்திருப்பேன்’’ என்று கொதிப்புடன் கூற, சர்ச்சில் கூலாக, ‘‘நீங்கள் என் மனைவியாக வாய்த்திருந்தால் அதை சந்தோஷமுடன் வாங்கிப் பருகியிருப்பேன்’’ என்று பதில் தந்தது உலகப்புகழ் பெற்ற ஜோக்!

சர்ச்சிலுக்கு சென்டிமென்ட்டான விஷயம் அவர் கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக்! அதை அவர் எப்போதும் பிரிந்ததே இல்லை. புகைப்படங்களில் கூட பெரும்பாலும் அவரை கையில் வாக்கிங் ஸ்டிக்குடன்தான் பார்க்க முடியும். மாபெரும் ராஜதந்திரியான சர்ச்சில் தன்னுடைய 90வது வயதில் 1965ம் ஆண்டு ஜனவரி 24ம் ஆண்டு மறைந்தார். ‘இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தால் இங்கிலாந்தின் கெளரவம் குறைந்துவிடும். எனவே சுதந்திரம் தரக் கூடாது.’’ என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வாதாடினார் என்ற வகையில் நம் நாட்டு மக்களுக்கு உவப்பானவராக அவர் இல்லாவிட்டாலும் இங்கிலாந்து மக்களின் நினைவில் இன்றும் குறிப்பிடத்தக்க தலைவராக வாழ்கிறார் சர்.வின்ஸ்டன் சர்ச்சில்!

Monday, June 3, 2013

பதிவர் சந்திப்பு தேவைதானா?

Posted by பால கணேஷ் Monday, June 03, 2013
னிக்கிழமை காலை அலுவலகத்தில் இருந்தபோது சீனுவிடமிருந்து போன். ‘‘வாத்யாரே... ‘சினிமா சினிமா’ தளத்துல எழுதற ஹாலிவுட் ராஜ் சென்னைக்கு வந்திருக்காரு. ஈவ்னிங் நீங்க ஃப்ரீயா?’’ என்று கேட்டார். ‘‘ரைட்டு. சந்திக்கலாம். எப்போ, எங்கேன்னு சொல்லு’’ன்னு கேட்டேன். ‘‘புலவர் ஐயா வீட்ல வெச்சு சந்திக்கலாம்னு சிவா சொல்றாரு. நீங்க புலவர் ஐயாகிட்ட கேட்டுட்டு ஓகேயான்னு சொன்னா,சங்கத்து ஆட்கள் எல்லாரையும் வரச் சொல்லிடறேன்’’ என்றார் சீனு. புலவர் ஐயாவுக்கு போன் செய்து கேட்டால், ‘‘இதுக்கெல்லாம் கேக்கணுமா என்ன? சந்தோஷமா சந்திக்கலாம். ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் நான் வாங்கி ‌வைக்கட்டுமா?’’ என்றார். நோ... நோ...! கற்பனையைக் கண்டபடி பறக்கவிடக் கூடாது. ட்ரிங்ஸ் மீன்ஸ்... பேன்டா, ஸ்நாக்ஸ் மீன்ஸ் சமோசா அண்ட் பிஸ்கட்ஸ்! மீ ரொம்ம்ப்ப நல்லவன்! ஹி... ஹி...!

மற்றவர்களை ஒருங்கிணைத்து வரச்செய்யும் பொறுப்பை சீனுவின் தலையில் (கதறக் கதற) கட்டிவிட்டு அலுவலகப் பணியில் மூழ்கினேன். மதியம் சிவாவை பிக்கப் செய்து கொண்டு புலவர் ஐயா வீட்டுக்குச் சென்றோம். சற்று நேரத்தில் இந்த எதிர்பாராத சந்திப்பின் கதாநாயகன் ஹாலிவுட் ராஜ் வந்து சேர்ந்தார். அவருக்கு மிகச்சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும், புதிய ஜீவனை வரவேற்க யு.எஸ்.ஸிலிருந்து பறந்து வந்திருப்பதாகவும் நல்ல செய்தி சொன்னார். பையனுக்கு வியாஸ் என்று (அழகான) பெயர் வைத்திருக்கிறாராம். அவரை வாழ்த்தினோம். 

கொஞ்ச நேரத்துல சீனுவும், ஸ்கூல் பையனும் சேர்ந்து வந்து ‘உள்ளேன் ஐயா’ன்னாங்க. ஸ்கூல்பையன் கேக்கும், சாக்லெட்டும் சாப்ட்டுட்டுதான் வருவேன்னு அடம் பிடிச்சதால கொஞ்சம் லேட்டா வந்ததா அடங்கொண்டு.... ஸாரி, திடங்கொண்டு சீனு சொன்னார். அடுத்ததா வந்து சேர்ந்தார் கவிஞர் மதுமதி. அவரைத் தொடர்ந்து கலகலப்பு தளபதி பட்டிக்ஸ்! பின்னாலேயே அரசன். என்ன வினோதம் பாருங்க... சங்க காலத்துல அரசர்கள்தான் புலவர்களுக்கு இடம் தருவாங்க. இப்ப புலவர் அரசன் உட்பட எங்களுக்கு இடம் தர்றாரு. ஹா...  ஹா...!

இத்த‌னை பேர் இருந்தும் சபை நிறைய‌லையேன்னு மனசுல ஒரு எண்ணம் ஒடினதைப் புரிஞ்சுக்கிட்ட மாதிரி ஆரூர் மூனா செந்தில் வந்து சபையை நிறைச்சுட்டாரு. அப்பத்தான் எனக்கு நம்ம தல செ.பி. கிட்டருந்து போன் வந்துச்சு. ஒரு ஆட்டோக்காரரை நம்பி ஏறிட்டதாவும், அவன் தன்னை எங்கயோ நார்த் உஸ்மான் ரோடு தாண்டி கடத்திட்டுப் போகப் பாக்குறான்னும் சொன்னாரு. அடையாறு அஜீதன்னா சும்மாவா...? போன்லயே அவருக்கு புலவர் வீட்டுக்கு வர வழி சொல்லிட்டு, எதிர்கொண்டு அழைத்துவர வேண்டியதாயிடுச்சு.

எல்லாரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்‌சு சபை கலகலப்பா நடந்துட்டிருந்தது. பதிவுலக விஷயங்கள்லருந்து சினிமா உலக விஷயம் பேசி, எழுத்தாளர்கள் தலைகள் உருட்டப்பட்டு சுவாரஸ்யமா போயிட்டிருந்தது ஜீன்ஸ், டீஷர்ட் போட்ட நவீன நாரதரான நம்ம பட்டிக்ஸ் கண்ணை அது உறுத்திடுச்சு போலருக்கு. டபார்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு.‘‘போன வருஷம் ஆகஸ்ட்டுல நாம பதிவர் சந்திப்பு நடத்தினோம். இந்த வருஷம் நடத்தறதுக்கு இப்ப இருந்தே கலந்து பேசி ஏற்பாட்டைப் பண்ணினாத்தான் சரியா வரும்.’’ என்றார். ‘‘அவசரப்படாத பட்டிக்ஸ்’’ன்னு நான் மறுக்க நினைக்கறதுக்குள்ள உறுப்பினர்கள் ஆர்வமா பண்ணலாமேன்னு பேச ஆரம்பிச்சதும் என் திருவாயை மூடிக்கிட்டேன். அடுத்த வாரம் இதைப் பத்தி மீட்டிங் வெச்சுக்கலாம்னு பட்டிக்ஸ் சொன்னாரு. அப்புறமென்ன... வழக்கம்‌போல நம்ம எக்ஸ்‌பிரஸ் செ.பி. வீட்டுக்குப் போனதுமே சுடச்சுட தன் தளத்துல ஒரு பதிவு முன்னோட்டமா போட்டுட்டாரு.ஆரூர் மூனா செந்தில் ஆர்வக்கோளாறுல போட்டோஷாப் டிசைன் ஒண்ணைப் பண்ணி முகநூல்ல போட, அதை அரசனும், ஸ்கூல்பையனும் ஷேர் பண்ண... இன்னிக்கு நம்ம சீனு வேற இதைப் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கார்.

ஆனா... எனக்கென்னமோ இந்த வருஷம் பதிவர் திருவிழான்னு ஒண்ணு நடந்தறதுல முழுச் சம்மதமில்ல. சென்ற முறை நடத்தினதே ஒரு கல்யாணத்தை நடத்தின மாதிரி ஃபீலிங். கல்யாணத்துக்கு வந்தவங்களை என்னதான் வுயுந்து வுயுந்து கவனிச்சுக்கிட்டாலும் ஒன்றிரண்டு பேருககு சின்னக் குறைகள் இருக்கத்தான் செஞ்சுது. கல்யாணத்துக்கு எனக்கு இன்விடேஷன் அனுப்பலையேன்னும் சிலர் குறைபட்டுக்கிட்டாங்க. தவிர ‘பதிவர் திருவிழான்னு ஒண்ணு நடத்தறதால ‌பத்து பைசாவுக்கு பிரயோஜனமுண்டா’ன்னு ஒரு கேள்வியும் வந்துச்சு. இதெல்லாம் சென்றமுறை நடத்தியதில் ஏற்பட்ட நெருடல்கள். 

ஆரூரார் டைரியில்ல!. அவருக்கேத்த பெரிய போன்!
இந்த ஆண்டில் பதிவுலகில் ஏனோ முன்பிருந்த உற்சாகம் குறைந்திருப்பதாக என் உள்ளுணர்வு சொல்கிறது. தவிரவும் நிறையப் பதிவர்கள் இணையதளத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு முகநூலில் மற்றும் ட்விட்டரில் உலாவச் சென்று விட்டார்கள். ஆகவே சென்ற முறை வந்த அளவுக்கு அணிதிரண்டு நம்மவர்கள் வருகை இருக்குமா என்ற ஐயம் எனக்குள் எழுகிறது. இன்னொரு முறை இப்படியான உறுத்தல்களைத் தாண்டி ஏன் நடத்த வேண்டும் என்று ஒரு கேள்வியும் அயர்ச்சியும் கூடவே இருக்கிறது ஆனாலும் பட்டிக்ஸ் போட்ட ஒரு விதைக்கு நண்பர்கள் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி விட்டார்கள். அது வளர்ந்து செடியாக, மரமாக வேண்டுமா? இல்லை இப்படியே அதை நிறுத்தி விடலாமா? என்று தோன்றுகிறது.

இந்த ஆண்டும் ஒரு பதிவர் திருவிழாவை நடத்தலாமா? நடத்தலாம் எனில் என்ன விதமாய் உருப்படியாய், யாருக்கும் குறைவராத விதமாய் எப்படி அதைச் செய்யலாம்? இந்த விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களின் கருத்துக்களை உரைத்து ஒரு தெளிவும் உற்சாகமும் (எனக்கு) கிடைக்க உதவுங்கள்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube