Wednesday, May 29, 2013

கேப்ஸ்யூல் நாவல் -8

Posted by பால கணேஷ் Wednesday, May 29, 2013
கரையெல்லாம் செண்பகப் பூ
- சுஜாதா -
ல்யாணராமன் நாட்டுப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய திருநிலம் கிராமத்திற்கு வருகிறான். அங்கே வெள்ளரிப்பிஞ்சு விற்கும் வெள்ளி என்ற பெண்ணும், அவள் மூலமாக அவள் முறைப் பையனான மருதமுத்துவும் அவனுக்கு உதவுகிறார்கள். கல்யாணராமன் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ஜமீன் அரண்மனையில் அன்றிரவு சில வினோத சப்தங்களைக் கேட்டு பயப்படுகிறான். மறுதினம் மருதமு்த்துவின் டிராக்டரில் நகரம் சென்று ஷாப்பிங் செய்து வருகையில் லிஃப்ட் கேட்ட ஒரு பெண்ணைப் புறக்கணிக்கிறார்கள். அவள் கிராமத்துக்கு வந்ததும்தான் அவள் பெயர் சினேகலதா என்பதும், ஜமீன்தார் பரம்பரையின் கடைசி வாரிசு என்பதும் தெரிகிறது. அவள் கல்யாணராமனிடம், அவன் வந்திருப்பது உண்மையில் நாட்டுப் பாடல் ஆராய்ச்சிக்குத்தானா என்று கேட்க, திடுக்கிடுகிறான் அவன். பின் பேச்சை மாற்றுகிறாள்.

அன்றிரவும் ஜமீன் மாளிகையின் மாடியில் மர்ம சப்தங்கள் கேட்க, கல்யாணராமனும் மருதமுத்துவும் மேலே செல்ல... அங்கே ஓர் மர்ம உருவம் இவர்களைக் கண்டு ஓடி மறைவதைப் பார்க்கிறார்கள். சினேகலதா வந்தபின் மருதமுத்துவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவர்கள் பழகுவது பிடிக்கவில்லை என்றும் வெள்ளி, கல்யாணராமனிடம் சொல்கிறாள். கல்யாணராமனுக்கு வெள்ளியி்ன் மேல் உள்ளூர ஒரு மெல்லிய சபலம் இருக்கிறது. அ‌தை மறைத்து அவளை சமாதானப்படுத்துகிறான். நாட்டுப்பாடல் சொல்ல வரும் பெரியாத்தா என்ற கிழவி ஜமீன்தார் வம்சத்தில் ரத்னாவதி என்ற ஜமீன்தாரிணி பட்ட சித்ரவதைகளைச் சொல்லி சாபப்பட்ட ஜமீன் இது என்கிறாள். அன்றிரவு மாடியில் மர்ம சப்தங்கள் கேட்டு கல்யாணராமன் மேலே செல்ல, அந்த மர்ம உருவத்தைப் பிடிக்க முயல, கைகலப்பில் அந்த உருவத்தால் தாக்கப்பட்டு நினைவிழக்கிறான்.

இரு தினங்களில் உடல்நிலை தேறிய ஒரு பகலில் மாடியில் சென்று ஆராய, பீரோ‌வுக்குப்பின் ஒரு ரகசிய அறையைக் கண்டுபிடிக்கிறான். அறையை மட்டுமல்ல... ரத்னாவதியின் டைரியையும்! அதைப் படிக்கப் படிக்க ரத்னாவதியின் சோகக் கதை மனக்கண்ணில் படமாக விரிகிறது. ரத்னாவதி தன் பூர்வீக நகைகளை ஒளித்து வைத்ததைப் பற்றிச் சொல்வதைப் படிக்கையில் வெள்ளி அங்கே வர, மருதமுத்துவும சினேகலதாவும் சைக்கிளில் வந்து இறங்க கோபமாகி வெடிக்கிறாள் வெள்ளி. வார்த்தைகள் தடிக்க, சினேகலதாவைத் திட்டி, சாபம் விட்டு்ச் செல்கிறாள்.  சினேகலதா கல்யாணராமன் வைத்திருக்கும் ரத்னாவதியின் டைரியை தான்தான் ஜமீன் வாரிசு என்பதால் முதலில் படிக்க வேண்டும் என்று பறித்துக் கொள்கிறாள். வெள்ளி கிராமத்து பூசாரியிடம் சினேகலதாவுக்காக கோழி வெட்டி பலி கொடுப்பதை க.ராமன் பார்க்கிறான். சினேகலதாவின் நடவடிக்கைகள் அந்த டைரி கிடைத்தபின் புதிராக இருப்பதையும் மருதமுத்துவுடன் அவள் கூடிக் கூடிப் பேசுவதையும் கண்டு சந்தேகிக்கிறான்.

கிராமத்து விழாவில் பழையனூர் நீலி கதை கூத்து நள்ளிரவு வரை நடக்க, பாதியில் மருதமுத்துவும், சினேகலதாவும் செல்வதையும் சற்று நேரத்தில் வெள்ளி புறப்படுவதையும் க.ராமன் கவனிக்கிறான். ஜமீன் பங்களா வந்தால் எவரையும் காணவில்லை. தேடிவர, தோட்டத்தில் சினேகலதாவை நிலைத்த விழிகளுடன் பிணமாகப் பார்க்கிறான். போலீஸ் வர, விசாரணை துவங்குகிறது. வெள்ளி காணாமல் போயிருக்க, அவள்தான் கொன்றிருப்பாள் என்று மருதமுத்து சந்தேகப்படுகிறான்.

அன்றிரவு வெள்ளி, க.ராமனைத் தேடி வந்து தானே கல்லைப் போட்டு சி.லதாவைக் கொன்றதாகக் கூறி அடைக்கலம் கேட்கிறாள். க.ராமன் அவளை பீரோவின் பின்னுள்ள ரகசிய அறையில் மறைத்து வைக்கிறான். இன்ஸ்பெக்டரும், கிராமத்து முக்கியஸ்தரும் விசாரணைக்கு வரும்போது அந்த ரகசிய அறையைப் பார்த்துவிட்டு உளளே சர்ச் செய்ய, சமாளிக்கிறான். இதற்கிடையில் ‘உங்கள் குடும்பப் பெண் சினேகலதா இறந்து விட்டாள்’ என்று ஜமீன்தாருக்கு கொடுத்த தந்திக்கு, ‘எங்கள் குடும்பத்தில் சினேகலதா என்று யாருமே இல்லை’ என்று பதில் தந்தி வருகிறது இன்ஸ்பெக்டருக்கு! குழப்பமோ குழப்பம்!

க.ராமன் வெள்ளி‌யுடன பேசிக் கொண்டிருப்பதை ஒரு சிறுவன் பார்த்துவிட்டு ஓட, கிராமத்தவர் வரும்போது அவளைப் பிடிக்கப பார்த்தேன், தப்பி விட்டாள் என்று க.ராமன் சமாளிக்க, ரகசிய அறையை ஆராய, அங்கேயும் வெள்ளி இல்லை. அவள் ஜன்னல் வழியாகத் தப்பிவிட்டதை அறிகிறான் க.ராமன். இரவில் ரத்னாவதியின் நகைகள் அனைத்தையும் அணிந்தவளாய் வெள்ளி அவன்முன் தோன்றுகிறாள். கிணற்றில் ஒளிந்ததாகவும் அங்கே ஒரு ரகசியப் பிறையில் இந்த நகைகள் கிடைத்ததாகவும் கூறுகிறாள். கூடவே பேச்சுவாக்கில் ஒரு உண்மையையும் சொல்கிறாள். சி.லதா மேல் அவள் கோபத்தில் எறிந்தது கோலிகுண்டு அளவு கல் என்றும், அது பூசாரி மந்திரத்தின் மகிமையால் அவளைக் கொன்றுவிட்டது என்றும் சொல்கிறாள். தலையில் அடித்துக் கொள்ளும் க.ராமனுக்கு உண்மை புரிந்து அவள் ஏற்படுத்திய குழப்பத்தால் கோபமும் வருகிறது. அவளுடன சென்று கிணற்றில் நகைகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பார்க்கிறான்.

அதற்குள் வெள்ளி அங்கிருப்பதை மருதமுத்துவும், இன்ஸ்பெக்டரும் கண்டுபிடித்துவிட, அவளை இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் செய்து அழைத்துச் செல்கிறார். கிராமத்தவர்கள் க.ராமனை தவறாகப் புரிந்து கொண்டு அடிக்கவர, அவன் பாதுகாப்பிற்காக ஒரு அறையில் தள்ளி கதவைச் சாத்துகிறார் இன்ஸ்பெக்டர். அங்கே ரத்னாவதியின் டைரி கிடக்க, அதன் மூலம் அவள் நகைகள் மறைத்துவைத்த இடத்திற்கு செண்பகப்பூ மூலம் குறிப்பு தந்திருப்பதையும், சினேகலதாவின் கூட்டாளி சாமி என்பவன் நகைகளைக் கொள்ளையிட வரச் சொல்லி அவளுக்கு எழுதிய கடிதத்தையும் படிக்கிறான் க.ராமன். அந்த அறையிலிருந்து தப்பி கலெக்டரைச் சந்தித்து உண்மையைச் சொல்ல, அவர் போலீஸ் அதிகாரிகளுடன்‌ பேச, நள்ளிரவில் அவர்கள் கிணற்றைச் சுற்றிலும் பதுங்கியிருக்க, அதனுள்ளிருக்கும் நகைப் பெட்டியை எடுக்க வ்ந்தவன் மடக்கப்படுகிறான்; கைது செய்யப்படுகிறான்.

காவல்துறையின் ‘பலத்த’ விசாரணைக்குப் பின் அவன் ஜமீன்தாரின் வைப்பாட்டி மகன் என்பதையும், பல லட்சங்கள் பெறுமானமுள்ள ரத்னாவதியின் நகைகளைக் கண்டுபிடித்து அடைவதற்காக கிராமத்தில் குழந்தைகளுககு பயாஸ்கோப் காட்டுபவனாக (பயாஸ்கோப் பழனியாண்டி) வாழ்ந்து சுற்றி வந்ததாகவும், இரவில் நகையைத் தேடியதாகவும், சரியான சந்தர்ப்பத்தில் திருட்டுத் தொழிலில் தன் கூட்டாளியான சினேகலதாவைச் சேர்த்துக் கொண்டதையும் சொல்கிறான். கிராமத்துத் திருவிழா நடந்த இரவு ‌தோட்டத்தில் மருதமுத்து, சினேகலதாவுடன் சுகித்துவிட்டுச் செல்ல, அவன் வந்து கிணற்றில் இருந்து அவள் எடுத்த நகைப் பெட்டியைக் கேட்க, அவள் எதுவும் எடுக்கவில்லை என்று மறுத்து சித்ரவதைக்குப் பின் கிணற்றின் பிறையில் ஒளித்து வைத்திருப்பதாகச் சொல்லிவிட, அவளை கோபமாக அவன் பிடித்துத் தள்ளியதில் பின் மண்டை கிணற்றுச் சுவரில் மோதி இறந்து விட்டாள் என்கிறான்.

சினேகலதா கொலையால் கிராமத்தில் ஏற்பட்ட குழப்பமும் அமளிதுமளியும் ஓயக் காத்திருந்து வெள்ளியை போலீஸ் அரெஸ்ட் செய்ததால் தைரியம் பெற்று அன்றிரவு வந்து மாட்டிக்கொண்டதை அவன் வாக்குமூலம் தர, கேஸ் முடிகிறது. க.ராமன் அந்த கிராமத்திலிருந்து விடைபெற, சமாதானமாகிவிட்ட வெளளியும் மருதமுத்துவும் ஜோடியாக வந்து அவனுக்கு விடை கொடுக்கிறார்கள். கையாட்டி விடைபெறும் சமயம் வெள்ளியின் உதடுகள் ஏதோ சொல்லத் துடித்ததாக க.ராமனுக்குத் தோன்றுகிறது. ரயில் மெல்ல நகர, ‘அவள் என்ன சொல்ல விரும்பினாள்’ என்ற கேள்வியுடனேயே தன் பயணத்தைத் தொடர்கிறான் கல்யாணராமன்.

இதுபற்றி மேலும் படிக்க க்ளிக்: க‌ரையெல்லாம் செண்பகப்பூ

38 comments:

  1. அட வாத்தியாரின் நாவல் வாத்தியாரின் கேப்ஸ்யுளில்

    எனக்கு மிகவும் பிடத்த ஒரு நாவல், காரணம் அதில் நாட்டுப் புறப்பாடல் பற்றி பல குறிப்புகளை கூறி இருப்பார்.

    வள்ளி மருதமுத்து இடையில் நடக்கும் ஈகோ பிரச்சனைகள். கல்யாண ராமனை மிரட்டும் அமானுஷ்ய சக்தி.. நல்ல விறுவிறுப்பான நாவல்... அதனுடைய சாரத்தை சுருக்கமாக அப்படியே உங்கள் வார்த்தை வடிவத்தில் படித்தது அந்த நாவலை முழுமையாக நியாபகப் படுத்த முடிந்தது

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் நினைவு கொண்டு ரசித்த சீனுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  2. தொடராக வந்த போது ஆவலுடன் வாசித்த கதை. ஜெ..-யின் ஓவியங்களும் கதைக்கு சிறப்பு சேர்த்தன.

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஜெ.யி.ன் ஓவியங்கள் ரசனையாகவும், ரகளையாகவும் ஒன்றிரண்டு சாப்டர்களில் செக்ஸியாகவும் அமைந்து ரசிக்க வைத்தன. இப்போதும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. க‌ரையெல்லாம் செண்பகப்பூ
    மலரும் நினைவுகளாக் மீண்டும் மலர்ந்தது ..
    பாராட்டுக்கள் பகிர்வுகளுக்கு...!

    ReplyDelete
    Replies
    1. மலரும் நினைவுகளில் மகிழ்ந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  4. சுருக்கம் மேலும் ஒரு முறை ரசிக்க வைத்தது... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ரசித்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி!

      Delete
  5. சுவைமிக்க பழங்களை அலசி, தோல் சீவி கட் பண்ணி மிக்ஸியில் அடித்து ஒரு க்ளாஸ் ஜூஸாக்கி கொடுத்தது போல் இருக்கிறது...! சுருக்கம்- சுவை மிக்க ஜூஸ். அருமை!

    (சினிமாக்காரங்க திரைக்கதை சொல்ற மாதிரியே இருக்கு..)
    த.ம-5

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ரசனைக்கு ஒரு சல்யூட்! மிக்க நன்றி!

      Delete
  6. நாவலாசிரியாவதற்குரிய எல்லா தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது...நீங்களே ஒரு நாவல் எழுதலாமே..

    ReplyDelete
    Replies
    1. சிறுகதைகள், குறுந்தொடர்கள்னு எழுதிட்டேன். இப்ப நீங்க சொல்லவும் யானை பலம் வருது. விரைவில் எழுதிடலாம் நண்பரே. மிக்க நன்றி!

      Delete
  7. இதுவரை படித்தது இல்லை. உங்கள் பதிவை படித்தவுடன் 'கரையெல்லாம் செண்பகப் பூ' படிக்க என்னுள் ஆர்வம் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. படிக்கணும் ரூபக். நிறையவே ரசிப்பீங்க நீங்க. மிக்க நன்றி!

      Delete
  8. திரைப்படமாய்ப் பார்க்கையில் அவ்வளவாக ரசிக்கவேயில்லை... கதையாக இதுவரை படித்ததில்லை..புத்தகம் கிடைத்தால் படிக்கவேண்டும். ரத்தினச்சுருக்கம்.... ரசிக்கவைத்தது... நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் படித்துப் பாருங்கள். ரசனைக்குகந்த நாவல்! ரசித்த உங்களுக்கு இதயம் நிறை நன்றி!

      Delete
  9. படித்த, ரசித்த கதை. மறுபடி நினைவு படுத்திக் கொள்ள உதவியது. இதைத் திரைப்படமாக எடுத்துப் படுத்தினார்கள். இளையராஜா குரலில் டைட்டில் சாங் எனக்குப் பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பாடல் பிடிக்கும் ஸ்ரீராம். மிக்க நன்றி!

      Delete
  10. உங்கள் கதை சுருக்கம் முழுக்கதையை படிக்கத் தூண்டுகிறது.
    மிகவும் அருமையாக கரையெல்லாம் செண்பகப் பூ மனம் வீச வைத்து விட்டீர்களே!

    ReplyDelete
    Replies
    1. மணத்தை ரசித்த உங்களு்க்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  11. “கரையெலலாம் செண்பகப் பூ“ - உங்களின்
    வலையெல்லாம் மணக்கிறது.

    தோழி உஷா சொன்னது போல் சூப்பர் ஜீஸ் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஜுஸை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  12. கடைசியாக ரசித்துப் படித்த சுஜாதா கதை. நினைவுகளைக் கிளறினீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. எப்போவோ வாசித்த கதை.இப்போ சுருக்கமாக படிக்கும் பொழுது சுவாரஸ்யம் குறையவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமாகப் படித்த தங்கைக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  14. எனக்கும் மிகவும் பிடித்த கதை
    சுவாரஸ்யம் குறையாமல் கதையைச் சொல்வதோடு
    நாட்டுப்புறப் பாடல்களையும் அருமையாகப்
    பகிர்ந்த விதம் மிகச் சிறப்பாக இருக்கும்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. உங்கள் கேப்சூல் நாவல் மிகவும் சுவையானது! அதுவும் இரு வ்லைப்பூக்களிலும் இது பற்றி படித்து மிகவும் ரசித்தேன் கணேஷ்..... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  16. சுஜாதா கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாய் எழுதியதை இப்படி ஒரு பக்கத்தில் முடித்து விட்டீர்களே.ஆனால்கதையின் சுவாரசியம் குறையவில்லை

    ReplyDelete
    Replies
    1. கல்கியும் சாண்டில்யனும் மாய்ந்து மாய்ந்து 600 பக்கங்களுக்கும் மேல் எழுதியதையே நான் ஜூஸ் தந்திருக்கிறேன் முன்பு. இதற்கென்ன... சுவாரஸ்யம் குறையவில்லை என்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  17. "“கரையெலலாம் செண்பகப் பூ“" இதுவரை படித்ததில்லை... கூடிய விரைவில் படிக்க தோன்றுகிறது உங்கள் எழுத்துகளால்

    ReplyDelete
  18. நான் புத்தகத்திலும் படித்து விட்டேன். படமாவவும் பார்த்துட்டேன். படிப்பதைவிட படம் பார்த்தலில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவுதான். ஆனால், அண்ணாவோட எழுத்தில் முழு புத்தகம் படித்த திருப்தி வருது. என் அண்ணாக்கு ராயல் சல்யூட்.

    ReplyDelete
  19. தொடராக வந்தபோது படித்திருக்கிறேன். இப்போது மீண்டும் உங்கள் வார்த்தைகளில் படிக்க பழைய நினைவுகள்!

    ReplyDelete
  20. வாசிக்கத்தொடங்கியதில் இருந்து முடிவு வரை சுவாரசியம் குன்றாத நாவல் இந்த வருடம் சென்னையில் வாங்கியந்ததில் ரசித்துப்படித்ததை நீங்களும் சுவையாக்கியதில் மீண்டும் பொக்கிசம் போல காக்க வேண்டியது அதுவும் அந்தக்கிணறில் ஒரு திரில் சுஜாத்தா செய்து இருப்பார் கல்யானராமன் கவர்ந்த பாத்திரம்.

    ReplyDelete
  21. முன்பு ஒரு முறையும் சமீபத்தில் ஒருமுறையும் இந்த நாவலை படித்தேன். சுவாரசியம் குறையாமல் செல்லும்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube