Thursday, August 30, 2012

பதிவர் திருவிழாவில் பி.கே.பி!

Posted by பால கணேஷ் Thursday, August 30, 2012

திவர் திருவிழாவில் திரு.பி.கே.பி. இணைய எழுத்தைப் பற்றியும். முதியோர் பற்றியும் செறிவான உரை நிகழ்த்தினார். அதன் விரிவாக்கம் விழாவைப் பார்க்காதவர்களுக்காக இங்கே. (என் வழக்கத்துக்கு மாறாக நீண்ட பதிவாக இருக்கும. பொறுமையுடன் படியுங்க நண்பர்களே)

மூத்த வலைப்பதிவாளர்களுக்கு மரியாதை, கவியரங்கம்னு இந்த நேரத்துல இந்த விழா இவ்வளவு சுறுசுறுப்பா போயிட்டிருக்கறதே பெரிய விஷயம். முக்கியமான ஒரு குடும்ப விழா இது. வலைப்பதிவர்களின் சங்கமம்ங்கறது இந்த வகையில இதான் முதல் விழான்னு நினைக்கிறேன். இந்த விழாவை அமைத்த அமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய கரகோஷத்தைத் தரலாம் நீங்க. இந்த விழா ஒரு முக்கியமான விழான்னு சொல்றதுக்கு காரணமான மற்றொரு விஷயம் என்னன்னா... துபாய்லருந்து, சிங்கப்பூர்லருந்துல்லாம வந்து கலந்துட்டிருககாங்கன்றது ரொம்ப பாராட்ட வேண்டிய விஷயம். மும்பைலருந்து, கோயமுத்தூர்லருந்து, மதுரைலருந்துல்லாம் வந்திருக்காங்க. பெண்கள் கிட்டத்தட்ட 20, 25 பேர் இருக்காங்கன்னு நினைக்கிறேன். 25 சதவீதம்! இவங்க ஒரு நாள் முழுக்க வலைப் பதிவாளர்களுக்கான விழாவுல வந்து கலந்துக்கிட்டிருக்காங்கன்னா அது விழாவின் வெற்றியாக எடுத்துக்கலாம்.

காலை நிகழ்ச்சிகள் எப்படிப் போச்சுன்னு எனக்குத் தெரியாது. அதுவும் நல்லாவே போச்சுன்னு பாலகணேஷ் சொன்னார். பதிவர்கள் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. அவர் முதல்ல அழைச்சப்ப, எத்தனை மணிக்கு நீங்க வர்றீங்க, பேசிட்டு நீ்ங்க வேணாப் போயிடலாம்னுதான் சொன்னார். ஆனா சபை நாகரீகம்னு ஒண்ணு இருக்கு. என்னைப் பொறுத்தவரை நானே வலைப்பதிவுகள்ல ஆர்வமுள்ள ஒரு ஆர்வலன். நான் அவர்கிட்ட என்ன ‌சொன்னேன்னா, என்னுடைய பகுதி நிகழ்ச்சி ஆரம்பத்துலருந்து கடைசி வரை நான் இருப்பேன்னு சொன்னேன். உங்க பங்கு முடிஞ்சதும் போயிடலாம்னு என் நேரத்துக்கு முக்கியத்துவம் தந்து சொல்லாதீங்க, நானும் ஒரு பார்வையாளனா... பேச்சாளனா இல்லை, பார்வையாளனா முழுக்க இருந்து பாக்கறேன்னு கேட்டுக்கிட்டேன். அதனால ஒரு மூணு மணி நேரம் செலவு பண்ணினது பெரிய விஷயம் இல்ல. சந்தோஷமா எல்லாத்தையும் ரிஸீவ் பண்ணிட்டிருந்தேன்.

ஒவ்வொருவரின் பேச்சிலும் பல தெறிப்புகள்! அவ்வளவு திறமைகள்! இவ்வளவு பேர் கவிதைகள் படிச்சாங்களே... அந்தக் கவிதைகள்ல உள்ள நயம்...எவ்வளவு ஆழம், அழுத்தம், நகைச்சுவை, கிண்டல், பணிவு அனுபவம்! இதையெல்லாம் வலையில பதிவு பண்ணத்தான் போறீங்க. அதுக்கான ஒரு சாம்பிள்தான் இந்த மேடைல காட்டினீங்க. ரொம்ப அருமையா இருந்துச்சு எல்லாரோட கவிதைகளும். அதுலயும் இந்தப் புத்தகத்தை (தென்றலின் கனவு) நான் வெளியிட்டேன்கறதால அதுலருந்து சில பகுதிகளைச் சொல்றதுதான் முறைன்னு நினைக்கிறேன். சசிகலா அவர்களுடைய தென்றலின் கனவு வலையில அவர் பதிவு செய்த கவிதைகளோட தொகுப்புன்னு சொன்னாங்க. நல்ல கவிதைகள் நிறைய இருக்கு. புரட்டினப்ப கண்ல பட்ட சில தெறிப்புகள் மட்டும் இங்க படிச்சுக் காட்டறேன்.

‘கோபம் வரத்தான் செய்கிறது’ ன்னு ஒரு கவிதை. தூங்கி விழித்து/மண்ணில் உருண்டு புரண்டு/ சண்டையிடும் மழலைகளைக் காணும் போதெல்லாம்/ கோபம்வரத்தான் செய்கிறது/ சண்டையே போடாத அக்காவின் மேல்! -அந்த சண்டையே போடாத அக்காவின் மேல்ங்கறதுலதான் ஒரு பன்ச், நல்ல ஒரு ரசனை இருந்தது. அதேபோல ‘அன்பைப் போல’ன்னு ஒரு கவிதை... எவர் தடுப்பினும்/வழியிலேயே நின்றுவிடப் போவதில்லை மழை/ உன்மீதான என் அன்பைப் போல! மழைய நாம எல்லாம் பாத்துக்கிட்டுத்தான் இரு‌க்கோம். அதை காதலோட கம்பைல் பண்ணி... மழை பெய்யறப்ப என்னதான் தடுத்தாலும் நிக்காதுல்ல...  அந்த அன்பைச் சொல்ற தாட் நல்லா இருந்துச்சு.

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்துல எதுவுமே பழைய சட்டை போட்டுட்டிருக்கற புது அம்சம். எதுவுமே பழசோட தொடர்ச்சி இல்லாம இல்ல. முந்தி கையெழுத்துப் பத்திரிகைன்னு ஒண்ணு நடத்தினோம். அப்பல்லாம் பத்திரிகைகள் ரொம்பக் கம்மி. நான் எழுத வந்தப்போ.... 77ல என் முதல் சிறுகதை! 77ல ஒரு நாலு, அஞ்சு பத்திரிகைதான். குமுதம், விகடன், கல்கி, கலைமகள்னு நாலைஞ்சு பத்திரிகைதான். இன்னிக்கு மாதிரி 50, 60ன்னு அந்த அளவுக்குல்லாம் இல்ல. ஸோ, அன்னிக்கு இருந்த எக்கச்சக்கமான எழுத்தாளர்கள்லாம் இந்தப் பத்திரிகைகள்லதான் எழுத முடியும். எல்லாருமே வெகுஜனப் பத்திரிகைகள்ல, பிரபல பத்திரிகைகள்ல எழுத முடியாதில்லையா? அப்ப தன்னுடைய திறமையை, தன்னுடைய படைப்பை, தன் கற்பனை நமைச்சலை வெளிப்படுத்தறதுக்கான ஒரு வழியா அந்தக் காலகட்டத்துல இருந்தது கையெழுத்துப் பத்திரிகை. எட்டு பக்க பேப்பரை எடுத்து கட் பண்ணி, அதுலயே ஒரு கார்ட்டூன், ஜோக்னு பத்திரிகை மாதிரியே ரெண்டு மூணு பேர் எழுதி, அதுக்கு ஒரு எடிட்டர், ஒரு சப்எடிட்டர், அதுக்கு ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னுட்டு அது ஒரு ப்ரைவேட் சர்குலேஷன்- ஒரு 25 பேருக்கு, 50 பேருக்கு. அந்த மாதிரி இருந்தது.

அதனுடைய ஒரு நீட்சி... அதனுடைய மிகப்பெரிய வளர்ச்சியின் ஒரு பகுதிதான் இந்த வலைப்பதிவுகள்! யோசிச்சுப் பாத்தா ஆச்சரியமாக்கூட இருக்கு. ஒரு நூறு வருஷத்துல விஞ்ஞானம் செய்திருக்கற ஒரு தாவல்! பல நூற்றாண்டுகளுக்கு முன்னால வாழ்ந்தவர்கள் இதையெல்லாம் அனுபவிக்காமயே போய்ட்டாங்களேங்கற ஒரு ஆதங்கம்கூட எனக்கு உண்டு. பொன்னியின் செல்வன்ல வந்தியத்தேவன் ஒரு ஓலைய எடுத்துக்கிட்டு ஒரு பாகம் பூரா போயிட்டிருப்பான். குந்தவை தந்த ஓலையக் குடுக்க ரெண்டாவது பாகம் வரை ஓடிட்டிருப்பான். இன்னிக்கு மாதிரி ஒரு ஸ்கைப் கால் இருந்திருந்தா... அருள்மொழிகிட்ட வந்தியத்தேவன் என்ன, குந்தவையே பேசியிருப்பா. அதுக்கு நடுவுல ஒரு தூதுவன் எதுக்கு? நல்லா யோசி்சசுப் பாத்தீங்கன்னா... அவங்க இழந்தையெல்லாம் நாம எவ்வளவு அடைஞ்சிருக்கோம்னு புரியும். நானே அனுபவிச்சிருக்கேன்.

ட்ரங்க கால்! பட்டுக்கோட்டையில எஸ்.டி.டி. வர்றதுக்கு ரொம்பக் காலம் ஆச்சு. ட்ரங்க் கால் புக் பண்ணிதான் பேசணும். போஸ்ட் ஆபீஸ் போய் எழுதிக் குடுக்கணும். ஏற்கனவே எழுதிக் குடுக்க ஆறேழு பேர் வரிசைல நின்னுட்டிருப்பான். ஏழாவது ஆளா, காரைக்குடில இந்த எண்ணுன்னு எழுதிக் குடுத்துட்டு உக்காந்திருக்கணும். அவங்கல்லாம் முடிக்கற வரைக்கும் எப்ப கூப்பிடுவாங்களோன்னு உக்காந்திருக்கணும். காரைக்குடி கால் புக் பண்ணிங்களா, இந்தாங்க பேசுங்கன்னு தந்ததும் ஹலோ அங்க நாராயணன் இருக்காருங்களான்னு கேட்டா, அவர் வெளில போயிருக்காருங்களேன்னு டொக்னு வெச்சுடுவாங்க.அவர் வெளில போயிருக்காருன்னு தெரிஞ்சுக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் உக்காந்திருக்கணும். அது ஒரு காலகட்டம் அப்படி இருந்திருக்கு. இன்னிக்கு விஞ்ஞானம், எலக்ட்ரானிக் மீடியா தந்திருக்கற வாய்ப்புகள் எவ்வளவு!

இங்க மூத்த பதிவர்கள்ன்னு அறிமுகப்படுத்தி, அவங்களையெல்லாம் கவுரவிச்சாங்களே... ரொம்பப் பெருமையாகவும், நெகிழ்ச்சியாவும் இருந்தது. அவங்கள்ல ஒருத்தர் பேசும்போது சொன்ன மாதிரி, ரிடையராயிட்டோம், வாழ்க்கையின் ஓய்வான ஒரு பகுதி, சும்மா பேப்பர் படிச்சுக்கிட்டு, வாக்கிங் போயிட்டு, வீட்டுக்கு சின்னச் சின்ன வேலை பண்ணிட்டு, பேரன் பேத்திகளைக் கொஞ்சிட்டு இருந்திடலாம்னு இல்லாமல்... இன்றைய இளைஞர்களோட போட்டி போடற விதமா... இன்னும் சொல்லப் போனா இந்த மூத்த பதிவர்கள் இளைஞர்களை விட பத்து மடங்கு பாராட்டப்பட வேண்டியவங்க. ஏன்னா, இளைஞர்கள் அனுபவத்தை இப்பதான் அனுபவிக்க ஆரம்பிச்சிருக்காங்க. சிந்தனையும் கற்பனையும்தான் இவங்க பதிவுல அதிகம் இருக்கும். ஆனா, முதியவர்களோட பதிவுகள்லாம் அனுபவச் சுரங்கங்கள்! அவை கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது. இன்னிக்கு யாரும் உக்காந்து கேக்கறதுக்குத் தயாரா இல்ல. இன்னிக்கு பல வீடுகள்ல வயசானவங்களோட பிரச்சனை என்னன்னா... ஒரு அஞ்சு நிமிஷம் எனக்கு ஒதுக்க மாட்டியா? யாரும் உக்காந்து பேசத் தயாரா இல்ல. ஒண்ணு கம்பெனிக்கு போகணும், வேலைக்குப் போகணும், ஸ்கூலுக்குப் போகணும், மத்த நேரத்துல அவங்களோட ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட், கேம்ஸ்க்கு போகணும், கராத்தே போகணும், தன்னை வளர்த்துக்கப் போகணும்னு எல்லாரும் ஆக்குபைடா இருக்காங்க.

ஸோ, இது இந்த முதியவங்களுக்கு கிடைச்சிருக்கற மிகப் பெரிய வரப்பிரசாதம். நீ வீட்ல கேக்க வேணாம்டா, லட்சம் பேர் வெளில கேக்கறான், போ... என்னுடைய எண்ணங்களை, என்னுடைய அனுபவங்களை படிக்கறதுக்கும், ரசிக்கறதுக்கும், பின்னூட்டம் போடறதுக்கும் நீ இல்ல... அறிமுகம் இல்லாத எவனெவனோ இருக்கான் -அப்படிங்கற நம்பிக்கையை அவங்களுக்குக் குடுத்திருக்கற இடம் இந்த வலையுலகம். அப்படித்தான அதை நான் பாக்கறேன். ரெண்டு மூணு ஜெனரேஷன் தாண்டி வந்தப்புறம் ஐக்யூ லெவல்ங்கறது இன்னிக்கு மாறி இருக்கு. ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் அது அதிகரிச்சிட்டேதான் போகுது. ஒரு 20, 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஐக்யூ லெவல் இன்னிக்கு இல்ல. இன்னிக்கு உள்ள ஐ க்யூ லெவல் வேற. திரைப்படம்னு எடுத்துக்கிட்டாக் கூட பத்து வருஷத்துக்கு முன்னாடி படத்துக்கான ட்ரீட்மெண்ட்டுங்கறது வேற, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி‌ வேற, இன்னிக்கு ட்ரீட்மெண்ட் வேற.. இப்படி மாறுது. யாருக்காக தயாரிக்கிறோமோ அந்த ஆடியன்ஸ் மாறுறாங்க. அந்த மாறுதலுக்கேற்றபடி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாத்திக்கிற அப்டேஷன்ங்கறது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னிக்கு தே‌வைப்படுது.

எங்கம்மால்லாம் செல்போனை தொடறதுக்கே தயங்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு அந்த செல்போனை எப்படி இயக்கணும்னு கத்துக் கொடுத்ததுக்குப் பிறகு யாரையுமே டிபெண்ட் பண்ணாம, கிடைச்ச நேரத்துல மகன்களுடனும், மகள்களுடனும் பேசிட்டிருந்தாங்க. அவங்களோட கடைசிக காலத்துலல்லாம் அந்த செல்போன்ல பேசிட்டே இருந்தாங்க. அப்படி தன்னை நவீனப்படுத்திககறதுக்கு இன்னுமே நிறையப் பேர் தயாரா இல்லை. கம்ப்யூட்டர்ன்னா அது ஏதோ தொட்டா ஷாக் அடிச்சுடும்னு நினைக்கறவங்கல்லாம் இருக்காங்க. வலைப்பதிவர்களாகிய உங்களோட நோக்கம்ங்கறது அவங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தறதா இருக்கணும்னு நினைக்கிறேன். நீங்கள் உங்களுடைய அனுபவங்‌களையும், திறமைகளையும் இதுல வெளிப்படுத்தறதைத் தவிரவும் மத்தவங்களை இதுல ஈடுபடுத்தறதுக்கு என்ன பண்ணப் போறீங்க? அதற்கான சிந்தனைகளை யோசிக்கணும், அதற்கான வழிமுறைகளை யோசிக்கணும். கேன்வாஸிங் ஃபார் திஸ் மீடியா. நான் சொல்றது தனிப்பட்ட முறையில இந்த வலைப்பதிவைப் படிங்க, அந்த வலைப்பதிவைப் படிங்கன்னு நான் சொல்லலை.

வலைப்பதிவுங்கற ஒரு விஷயம் எதிர்காலத்துல ஆளும். இப்ப நாம பேப்பர்லெஸ் சொஸைட்டியை நோக்கித்தான் போயிட்டிருக்கோம். ரயில்வேயில கூட உங்க டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுக்காதீங்க, மொபைல்ல எடுத்துட்டு வாங்க, அது போதும்ங்கறாங்க. ஏன்னா பிரிண்ட் அவுட் எடுககறதை நிறுத்தினீங்கன்னா வருஷத்துக்கு இவ்வளவு பேப்பர் குறையும்கறாங்க. இங்க கூட ஒருத்தர் மொபைல்லதான் எழுதிட்டு வந்து படிச்சாரு. அப்படிதான் போயிட்டிருக்கு. அப்படி பேப்பர்லெஸ் சொஸைட்டில எலக்ட்ரானிக்ஸ்ல கிடைக்கக் கூடிய ஒரு புதிய தளம், அந்த புதிய தளத்தோட முதல் விழாவையே இன்னிக்குதான் ஆரம்பிச்சிருக்கீங்க. இது மூலமா ஒரு நல்ல விஷயத்தை எப்படி பொதுமக்களுக்கு பரப்பப் போறீங்க? ஏன்னா... ஆல்ரெடி ப்ளாக்கர்ஸ்னாலே ஒரு தனி மரியாதை இருந்துட்டிருக்கு.

திரைத் துறையைப் பொறுத்தவரைக்கும் கேபிள் சங்கர் என்ன விமர்சனம் எழுதறாருன்னு எத்தனை பேர் எதிர்பாத்துட்டிருக்காங்க தெரியுமா? ஜாக்கி சேகர் என்ன எழுதறார்னு பாக்கறாங்க. குறிப்பிட்டு பத்து பேரை... ஏன்னா பத்திரிகையில வந்து, அவங்க படம் பார்த்து எழுதறதுக்கே டைமாகும். இவங்க எப்பப் படம் பாக்கறாங்கன்னு தெரியலை. எல்லாப் படத்துக்கும் உடனே விமர்சனம் எழுதிடறாங்க. முந்திக்கறாங்க. இதெல்லாம் எழுதறது ‘என்கிட்ட திறமை இருக்கு. இதைப் பார்’ன்னு காட்டக்கூடிய விஷயம் இல்ல. ‘இது பதிவு, இது ஒரு அனுபவம், இது நான் கேட்டது, இது நான் உணர்ந்தது’ அப்படின்னு அந்தப் பதிவுக்கு கிடைக்கிறது நல்ல ஒரு மேடை.

நாம உடனே படிச்சுடறோம். குமுதத்துக்கோ, விகடனுக்கோ கதை அனுப்பிட்டு, அது ஆறு மாசம் கழிச்சு ஒரு குறிப்போட ‘தங்கள் கதையை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம், தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள்’ன்னு குறிப்போட வரும். அந்த ஸ்லிப்பை பாக்கறதுக்கே சந்தோஷமா இருக்கும்- ஆறு மாசம் கழிச்சு! இது உங்களுக்கு நீங்களே அமைத்துக் கொள்கிற மேடை! உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்கிற ஒரு புத்தகம்! அப்படியொரு வாய்ப்பு இந்தக் காலகட்டத்துல கிடைச்சிருக்கு. இனி இந்த வலைப்பதிவுங்கற துறையை இன்னும் பெரிசா கொண்டு சென்று சேர்க்கணும்னு உங்களை கேட்டுக்கறேன். அதற்கான வழிமுறையை யோசிக்கற கூட்டங்களாக அடுத்தடுத்த கூட்டங்கள் இருக்கணும். நிறையப் பேருக்கு இந்த டெக்னிகல் ‘நோ ஹெள’  தெரியாம இருக்கலாம். அவங்களுக்கு ஒரு பயிற்சி கொடுக்கணும். நான் எப்படி ப்ளாக்குக்குள்ள வரணும், புதுசா துவங்கணும்னு நினைக்கறாங்கன்னா, நீங்க அவங்க வீட்டுக்கே போய் சொல்லிக் கொடுக்கலாம். அதற்கு ஒரு கமிட்டி அமைக்கலாம். இதெல்லாம் உங்களை வளர்த்துக்கறதுக்கு ஒரு அடுத்த கட்டமாக எடுத்துக்கணும்னு நான் கேட்டுக்கறேன்.

அதைத் தாண்டி, எல்லா விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு. ஒரு அணுகுண்டு கண்டுபிடிச்சா அதுக்கு ஒரு பயன்பாடு ஒரு பக்கம்னா, அணுகுண்டோட அழிவைப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை. அதுமாதிரி... இதுல உள்ள மைனஸ்ன்னு பாக்கறப்ப, நான் என்ன ஃபீ்ல் பண்றேன்னா... தனி நபரைத் தாக்கறதுக்கான ஒரு களமா தயவுசெய்து இதைப் பயன்படுத்தாதீங்க. இதை அதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்தறது அநாகரீகம்னு நான் நினைக்கறேன். நான் சில வலைகள்ல பாத்திருக்கேன். அதுவரைக்கும் நல்ல விஷயங்கள் வந்திருக்கும். ஒரு தனிநபரைக் குறிப்பிட்டு ஒரு நபரை விமர்சனம் பண்றதுக்காகப் பயன்படுத்தறாங்க. படைப்பை விமர்சியுங்கள்... படைப்பாளியை விமர்சிக்காதீர்கள்!  ஏன்னா எந்த ஒரு படைப்பாளியையும் தனி மனுஷனா நீங்க அணுகிப் பார்த்தால் அவன்கிட்ட குற்றம் குறைகள் இருக்கும். கண்ணதாசன் அவருடைய படைப்புகளுக்காக மட்டுமே மதிக்கப்படுகிறார்; தனிப்பட்ட வாழ்க்கையினால அல்ல!

அதுமாதிரி நான் கவனிச்ச இன்னொரு விஷயம் என்னன்னா... ஒரு பத்திரிகைக்கு படைப்பு அனுப்பினீங்கன்னா அங்க எடிட்டர்னு ஒருத்தர் இருக்கார். அந்த எடிட்டர் ஆட்சேபமான ஒரு விஷயத்தை, அன்பார்லிமென்ட்ரியான வார்த்தைகளை எடிட் பண்றதுக்குத்தான் அவர் உக்காந்திருக்கார். அதுதான் அவர் வேலை. ஒரு செய்தி மக்களுக்குப் ப‌ோயச் சேருகிற போது இப்படித்தான் போகணும்னு ஒரு வரைமுறை -சென்சார்ஷிப்- இருக்கு. இங்க சென்சார்ஷிப்ங்கறதை நீங்களே வகுத்துக்கணும். ஏன்னா, இதுக்கு இல்லை. அப்படி இதுக்கு இல்லைங்கறப்ப ஒரு சுய கட்டுப்பாடு, சுய சென்சார்ஷிப் - ஒரு நியாயம் - வேணும். சில தளங்கள்ல அன்பார்லிமென்ட்ரியான வார்த்தைகள் வருது. பெண்கள் எப்படிப் படிக்கறது? சொல்லுங்க... நீங்க இதுக்கு ‘யதார்த்தமா பேசறதைதானே எழுதறேன். யதார்த்தமான நிகழ்வுதானே’ன்னு சப்பைக்கட்டு கட்டாதீங்க. டீசன்ஸி லெவல்ன்னு ஒண்ணு இருக்கு. ‘‘இது என் பக்கம். இங்க என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்’’ங்கற ஒரு அலட்சியப் போக்கு வேண்டாம். கூடிய சீக்கிரத்துல உங்களைப் புறக்கணிச்சுடுவாங்க.  ‘இவர் இப்படி ஒரு வலைப்பதிவு எழுதறார். போய்ப் படி’ன்னு மத்தவங்க சொல்லும்படியாக உங்க வலைப் பக்கங்களை அமைச்சுக்கங்க. அந்த ஒரு பண்பாடு, நாகரீகம் வேணும்.

ஒருவனோட முகத்தைப் பார்த்ததும், அவன் பேச ஆரம்பிச்சதும் எப்படி அவங்க மேல ஒரு மதிப்பீடு வருதோ... அதைப் போல உங்கள் வலைப் பக்கம், உங்களைப் பற்றிய அடையாளம் காட்டுகிற ஒரு விஷயமா இருக்கு. அதை நீங்க மறந்துடக் கூடாது. நீங்க என்ன பதிவு பண்றீங்களோ, அதை வெச்சுத்தான் உங்க மேல மரியாதை இருக்கும். உங்கள் மேல ஒரு மதிப்பு- ஒரு கூட்டத்துல பாக்கறப்ப, ‘இவரா... இப்படி எழுதிட்டிருப்பாரே... இவர்தானே’ அப்படின்னு சந்தோஷத்தோட தேடி வந்து கை குடுக்கற மாதிரி இருக்கணும். ’இவரா... இவரைப் பாக்கவே கூடாது’ன்னு முகத்தைத் திருப்பிட்டுப் போகிற மாதிரி உங்க வலைப்பக்கத்தை அமைக்காதீர்கள்.

அப்புறம்... வலைப்பதிவுகளோட அருமை வெளியில நல்லாப் பரவிட்டிருக்குங்கறதுக்கு ஒரு சாம்பிள் என்னன்னா, இன்னிக்கு எந்தப் பத்திரிகைய எடுத்துக்கிட்டாலும் வலைப்பதிவுகள்லருந்து சில பகுதிகளை எடுத்துப் போடாமல் செய்யவே முடியாது. அந்த மாதிரி ஒரு கட்டத்துக்கு வந்துட்டாங்க. ‘வலையில் சுட்டவை’ ‘வலையில் எடுத்தவை’ன்னு பத்திரிகைல எழுதறவன் குறைஞ்சு போயிட்டான், இங்க எழுத ஆரம்பிச்சுட்டாங்கறதால நல்ல விஷயங்களைத் தேடறதுக்கு இவங்களே (பத்திரிகையாளர்கள்) பாக்க வேண்டியதா இருக்கு. பத்திரிகைகள்ல பாத்தா ஃபேஸ் புக்லருந்து, ட்விட்டர்லருந்து எடுக்கற மேட்டர்கள் வரிசையா இருக்கும். இனி யார் புதுசா பத்திரிகைய ஆரம்பிச்சாலும் ஜோக் போடறது, கவிதை போடறது மாதிரி, வலைப்பதிவுகள்லருந்து திரட்டி எடுத்த மேட்டர்களைப் போடறதும் ஒரு தவிர்க்க முடியாத அம்சமா மாறிடுச்சு. அந்த மாதிரி கவனிக்க வெச்சிருக்கீங்க. அது ஒருவரோட செயல் இல்ல... உங்க அத்தனை பேரோட ஒரு கூட்டு முயற்சி. அத்தனை பேரோட செயல்பாடுகள்தான் இந்தப் பக்கம் திரும்ப வெச்சிருக்கு. லட்சக்கணக்குல விக்கற பத்திரிகைகள்லாம் உங்களைத் தேடி வந்து மேட்டர் எடுத்துப் போடறாங்கன்னா, அது உங்களோட வலிமையை நீங்கள் புரிஞ்சுக்க வேண்டிய நேரம்.

அப்புறம்... இந்த சினிமா விமர்சனம் உடனுக்குடனே பண்ணிடறாங்கன்னு பாராட்டிச் சொன்னேன். அதுல சில விமர்சனங்கள் நடுநிலையா இருக்கறதில்லை. அதில நிறைய ஒரு சார்பு நிலை இருக்கு. சினிமா விமர்சனம்லாம் எல்லாரும் பண்ணியே ஆகணும்கற கட்டாயம்லாம் ஒண்ணும் கிடையாது. அதை பண்ணினாத்தான் கவனிக்கப் படுவோம்கற அவசியமும் கிடையாது. அதனால சினிமா விமர்சனம் எழுதறதுன்னு முடிவு பண்ணினால், சினிமா ரசனையுடன், சினிமாவைத் தெரிந்து எழுதுங்கள். சும்மா நானும் எழுதணும்னு எழுதாதீங்க. பல பதிவுகளை நான் படிச்சுட்டிருக்கேன் தொடர்ந்து படிக்கலைன்னாக் கூட ராண்டமா பாத்துட்டிருக்கேன். அப்படி கவனிச்சதுலதான் கேபிள் சங்கரை ‘ஊஞ்சல்’ இதழ்ல வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தணும்னு கேட்டுக்கிட்டேன். அவரும் 30, 40 பேரை அவங்க தளத்தின் பேரோட, தளத்திலுள்ள சிறப்பான‌ ஹைலைட்ஸைத் தொகுத்து அற்புதமா பண்ணிக் கொடுத்தாரு. அதெல்லாம் ஒரு ரெகக்னிஷன்தான். அதனால... சினிமா விமர்சனம்னு வரும்போது அதை முழுமையாக, ப்ளஸ் மைனஸ்களோட நடுநிலையா விமர்சனம் பண்ணுங்க.

வலையில நல்ல பல தெறிப்புகளை நான் பாக்கறேன். நான் பாத்த தளத்துலருந்து ஒரு குட்டிக் கதைய இங்க ‌சொல்றேன். ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்‌டோர்ஸ்க்கு ஒருத்தன் வர்றான். அவன் ‘அரைகிலோ பட்டர் வேணும்’னு கேக்கறான். விற்பனையாளன் பாத்துட்டு ‘ஒரு கிலோ பட்டர்தான் இருக்கு’ங்கறான். ‘இல்ல, எனக்கு அரைகிலோதான் வேணும்’கறான் அவன். ‘இல்லங்க, ஒரு கிலோ பாக்கெட்டாதான் இருக்கு. அதைப் பிரிக்க முடியாது அரைகிலோ தீர்ந்து போயிட்டதால, ஒரு கிலோ வேணும்னா வாங்கிக்கங்க’ங்கறான். ‘நான் கஸ்டமர். என்னை ஸாடிஸ்பை பண்ண வேண்டியது உன் கடமை. உன் மேனேஜரைக் கேளு. நான் ரெகுலரா வாங்கிட்டிருக்கேன். எனக்கு அரை கிலோதான் வேணும்’னு பிடிவாதம் பிடிக்கறான். சேல்ஸ்மேனுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நேரா மேனேஜர்கிட்டப் போறான். ’’சார், ஒரு சாவுகிராக்கி, லூசு... ஒரு கிலோ பட்டர் இருக்கு, வாங்கிக்கோன்னா அரை கிலோ பட்டர்தான் வேணும்னு பிடிவாதம் பிடிக்கிறான்’’ அப்படின்னு சொல்லிட்டிருக்கும் போது பாத்தா, அந்த கஸ்டமர் பின்னாடியே வந்து நிக்கிறாரு. அவரைப் பாத்ததும் என்ன பண்றதுன்னு தெரியாம ஒரு செகண்ட் திகைச்சு்ட்டு, ‘‘அப்படிப் பண்றான் ஸார் ஒருத்தன். ஆனா இந்த ஜென்டில்மேன் இவர் அரை கிலோ வாங்கிக்கறேங்கறாரு. இப்ப நான் என்ன பண்ணட்டும்?’’ன்னு சொன்னான். ‘‘அப்புறம் என்னய்யா... இந்த ஜென்டில்மேன்தான் அரைகிலோ வாங்கிக்கறேங்கறாருல்ல... பிரிச்சுக் கொடுத்துடு’’ன்னாரு மேனேஜர்.

பிரிச்சுக் கொடுத்து அனுப்பினதும் அவனைக் கூப்பிடறார் மேனேஜர். ‘‘பரவால்லப்பா... நீ அந்த கஸ்டமரைப் பத்தி கமெண்ட் அடிச்சுட்டே. பின்னாடி அவரைப் பார்த்ததும் சடார்ன்னு பேச்சை அப்படியே மாத்திட்டியே. வெரிகுட்! நீ எந்த ஊர்லருந்து வர்றப்பா?’’ன்னு கேட்டார். ‘‘நான் மெக்ஸிகோலருந்து வர்றேன் ஸார். நிறைய ஃபுட்பால் டீம்களுக்கும், நிறைய ப்ராஸ்டிட்யூட்ஸ்க்கும் புகழ்பெற்ற மெக்ஸிகோவுலருந்து நான் வர்றேன் ஸார்’’ன்னான். மேனேஜர் முகம் சுருஙகிப் போச்சு. ‘‘என்ன ஸார்?’’ன்னான். ‘‘என்னய்யா நினைச்சுட்டிருக்க? என்னையே கிண்டலடிக்கிறியா? என் வொய்ஃப் மெக்ஸிகோவைச் சேர்ந்தவ. தெரியமா?’’ன்னார் கோபமா. அவன் சட்னு, ‘‘அப்படியா ஸார்? எந்த ஃபுட்பால் டீம் அவங்க’’ன்னு கேட்டான். அங்கயும் தன் ஸ்மார்ட்னஸ்ஸைக் காமிச்சான்கறதுதான் விஷயம்.

அந்த அளவுக்கு ஐக்யூ உள்ளவங்கதான் இன்னிக்கு இருக்கறாங்க. அந்த மாதிரி ஐக்யூ இருக்கறவங்க கிட்டதான் நீங்க வலைப்பதிவு எழுதிக்கிட்டிருக்கீங்க. அதனால, யார் படிக்கறாங்கங்கறதை மைண்ட்ல வெச்சுக்கிட்டு, பொறுப்புணர்ச்சியோட தொடர்ந்து செயல்படுங்கள். வாழ்த்துக்கள். என்னை அழைத்ததற்கு நன்றி! வணக்கம்!

Monday, August 27, 2012


பிரமிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் அளவு கடந்து போய்விட்டால் வாயில் பேசுவதற்கு வார்த்தைகள் வராது. என்ன சொல்வது என்றே தெரியாமல் திகைத்துத் தடுமாறி நிற்கும் நிலை ஏற்படும். அப்படித்தான்... நேற்று நடந்த பதிவர் திருவிழாவைப் பற்றி சுருக்கமாக சில வார்த்தைகள் எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்தால் மகிழ்வின் உச்சத்தில் வார்த்தைகள் ‌மனதுக்கு வசப்படாமல் விளையாட்டு காட்டுகின்றன. ஏனெனில் மகிழ்ச்சி என்கிற சொல்லை அதன் முப்பரிமாணத்தில் அனுபவிக்கிற வாய்ப்பு நேற்றுக் கிடைத்தது.

பதிவர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அனைவரும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தாலும், ‘மைக்செட்காரன் வந்து சேரலையா இன்னும்’, ‘ஷீல்டுல்லாம் ரெடியாய்டுச்சாப்பா?’ ‘பேனர் கட்டியாச்சா?’ போன்ற கடைசி நிமிட டென்ஷன்கள் ஓடிக் கொண்டுதான் இருந்தன. காலையில் 9.30க்கு விழா துவங்கும் என்று போட்டிருந்தோம். காலை 8 மணி முதலே பதிவுலக நண்பர்கள் வரத் துவங்கி விட்டனர், நண்பர் ‘வசந்த மண்டபம்’ மகேந்திரன் அவைக்கு முதல் ஆளாக வந்து மகிழ்வைத் தந்தார். அநாயசமாக, ரசனைக்கு விருந்தாய் கவிதை படைக்கும் அந்த நண்பனை நேற்று பார்த்துப் பேசியதில் அளவிட இயலாத மகிழ்ச்சி எனக்கு.

வலையில் நாம் எழுதுவதை வலைப் பதிவர்கள் தவிர, வலைப்பதிவுகளில் எழுதாமலேயே படித்து போன் மற்றும் இ மெயில் மூலம் உற்சாகப்படுத்தும் விசிறிகள் நிறைய உண்டு அனைவருக்கும். அவர்களின் பிரதிநிதி நான் என்பது போல காலை 8 மணிக்கு அரங்கிற்கு வந்து உற்சாகமாய் விழாவில் கலந்து கொண்டார் சமீரா. பலரின் பதிவுகளை படித்து ஊக்குவிப்பவர் என்ற அறிமுகத்தோடு அவரை நான் மேடையில் பேசச் சொன்ன போது “எங்களைல்லாம் ஊக்குவிக்க மாட்டீங்களா மேடம்?“ என்று கிண்டலித்தார் கேபிள் சங்கர். (அம்மாம சமீரா... அவர்ட்டயும் ஊக்கு வித்துடும்மா... ஸாரி. ஊக்குவிசசுடும்மா) அடுத்தடுத்து ஒவ்வொருவராக வரவும் குறித்த நேரத்தில் விழாவை ஆரம்பித்துவிடுவது சுலப சாத்தியமாய்த்தான் இருந்தது. கோவை மற்றும் மதுரையிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அன்பைப் பரிமாறி மனதிற்கு மகிழ்வையும் நெகிழ்வையும் தந்தார்கள்.

பதிவர்கள் அனைவரும் அரங்கத்திற்குள் நுழைந்ததும் தங்களுக்குள் சுய அறிமுகம் செய்து கொண்டது ஒரு புறம் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. என்றாலும், மேடைக்கு அழைத்து ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொள்ளச் ‌‌சொன்னபோது அனைவரும் கவனத்தை அங்கே திருப்பி, கவனி்த்தது ரொம்பவே மகிழ்வான விஷயம். புலவர் சா.இராமானுசம், திரு.சென்னைப் பித்தன், வலைச்சரம் திரு.சீனா ஆகிய மூவரும் ‌முன்னிலை வகித்து காலை நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்தார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்ற பிரபல பதிவர்கள், புலவர் சா.இராமானுசம், சென்னைப் பித்தன், கணக்காயன் போன்ற மூத்த பதிவர்கள், சென்ற ஆண்டிலும் இந்த ஆண்டிலும் வலைப் பதிவைத் துவங்கி எழுத ஆரம்பித்திருக்கும் (என்போன்ற) குழந்தைப் பதிவர்கள் என அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு பேசியது மனதிற்கு இதமாக இருந்தது. விழாவிற்கு வந்திருந்த சேட்டைக்காரன் அனைவருடனும் சகஜமாக அவருக்கே உரித்தான இயல்பான நகைச்சுவையுடன் பேசி மகிழ்ந்ததைப் பார்க்க நிறைவாக இருந்தது.

மதிய உணவிற்கான இடைவேளை அறிவித்ததும், சிறப்பு அழைப்பாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகரை அழைத்துவர அவர் இல்லாம் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் என் அலைபேசி அலறியது. பேசியவர் புதுச்சேரியில் வசிக்கும் ‘சிந்தனைச் சிறகுகள்’ வலைப்பூவின் சாமுண்டீஸ்வரி பார்த்தசாரதி. நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்திருந்ததன் மூலம் விழாவைக் கவனித்ததாகவும், சிறப்பாக விழா நடந்து கொண்டிருப்பதில் மகிழ்வைத் தெரிவித்து, விழாவுக்கு வந்திருக்கும் அனைவரும் தன் வாழ்த்துக்ளையும் தெரிவித்தார். அவருடைய பிறந்ததினம் என்பதால் நான் அவரை அகமகிழ்வுடன் வாழ்த்தினேன். நேரலை ஒளிபரப்பின் மூலம் நிறையப் பேர் ஆர்வமாக நம் விழாவை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி மனதில் நிரம்பியிருக்க, சிறப்பு அழைப்பாளருடன் அரங்கிற்குத் திரும்பினேன்.

உணவு இடை‌வேளைக்குப் பின் மதிய நிகழ்ச்சிக்கு 2.30க்கு கூட வேண்டும் என்று அனைவருக்கும் அறிவித்திருந்தோம். நண்பர்கள் அனைவரும் அதை மிகச்சரியாக நிறைவேற்றினார்கள். மீண்டும் அரங்கிற்கு அனைவரும் குன்றாத ஆர்வத்துடன் வந்துவிட, 2.30க்கு சரியாக மதிய நிகழ்வுகளை ஆரம்பிக்க முடிந்தது. மதிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சுரேகா அவர்களின் ஸ்பான்டேனியஸான பேச்சும், இயல்பான ந்கைச்சுவையும் கலந்த பேச்சு அரங்கை களைகட்டச் செய்தது.  மூத்த பதிவர்களை மேடையேற்றி அவர்களை கெளரவித்தது விழாக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. சிறப்பு அழைப்பாளர் பேசும்போது இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். கவிதைகள் என்கிற பெயரில் வீரிய விதைகளைத் தூவி கேட்பவரின் மனங்களைப் பறித்துச் சென்றார்கள் நம் பதிவுலகக் கவிஞர்கள். ‘தென்றல்’ சசிகலாவின் ‘தென்றலின் கனவு’ என்ற புத்தகம் இந்த அரங்கில் வெளியிடப்பட்டது அவருக்கு மட்டுமல்ல, பதிவர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.

அதன் பின் அற்புதமான உரையொன்றை நிகழ்த்தினார் சிறப்பு அழைப்பாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர். முதலில் விழாவுக்கு வரும்படி அவரை நான் அழைத்தபோதே, ‘‘பதிவர்கள் சந்திக்கப் போறீங்க. அங்க நான் வந்து எதைப் பத்திப் பேசறது?’’ என்று கேட்டிருந்தார். நான், ‘‘சார், நீங்க எழுத வநத விதத்தையும், .உங்க எழுத்தையும் பத்திப் பேசுங்க. எங்களில் நிறையப் பேர் உங்களின் வாசகர்கள்தான். அதனால ஆர்வமாக் கேப்பாங்க. நீங்க பாக்கற பதிவுலகத்தைப் பத்தியும் உங்க கண்ணோட்டத்துல பேசலாம்’’ என்று சொல்லியிருந்தேன். ஆனால் பி.கே.பி.யோ பதிவுலகின் சக்தியைப் பற்றியும், பதிவர்களாக இருப்பதன் ப்ளஸ் மற்றும் மைனஸ் ஆகிய அனைத்தையும் அலசிய தன் உரையின் மூலம் அனைவருக்கும் பிரமிப்பை அள்ளித் தந்து, அரங்கின் பலத்த கரகோஷத்தைப் பெற்றுக் கொண்டார்.

தலைவர் உரைக்குப்பின் கவிஞர் மதுமதி நன்றியுரைத்து விழா நிகழ்வு நிறைவுற்றதும் சிறப்பு விருந்தினரை வழியனுப்பி வைத்துவிட்டு வெளியூரிலிருந்து வந்திருந்த, கிளம்ப வேண்டிய அவசர(சிய)த்திலிருந்த நட்புகள் விடைபெற்றுச் சென்றுவிட மற்றவர்கள் நிறைய நேரம் மனம்விட்டுப் பேசிவிட்டுப் பிரிந்தோம். இப்படி அனைவரையம் சந்தித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதிலும், திருமதி. வல்லி சிம்ஹன் என்னை அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே அங்கீகரித்து அன்பைப் பொழிந்ததிலும் மகிழ்ச்சி நிரம்பியிருந்த மனது அன்று நடந்த ஒவவொரு நிகழ்வையும் ரீவைண்ட் பண்ணி சந்தோஷித்தபடி இருந்ததால் இரவு விழிகளை உறக்கம் தழுவ வெகுநேரமானது!

இது நாமே நடத்துகிற, நமக்கான விழா என்று மகிழ்வுடன் உணர்வுரீதியாக ஒன்றிணைந்து விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெகிழ்வுடன், மனமகிழ்வுடன் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

Saturday, August 25, 2012

னிய நட்புகளுக்கு வணக்கம். இன்றைய இரவு விடிந்தால்,,, காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கி விடும். இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமிருப்பது விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்ற வேட்கையை அது அதிகரிக்கிறது

இந்தப் பதிவர் சந்திப்பில் இரண்டு விசேஷ அம்சங்கள் என்னவென்றால் இதுவரை முகம் காட்டாமல் ஒரு கேள்விக்குறியாக இருந்த சேட்டைக்காரன் முகம் காட்டி ஆச்சர்யக் குறியாக பரிமளிக்க இருக்கிறார். மற்றொரு வியப்பு... இதுவரை முகம் காட்டாமல் மறைந்திருந்த நல்ல கவிஞர் ஒருவர் கவியரங்கில் கவிதை வாசித்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார், உங்களனைவருக்கும் தெரிந்ததுதான் அவர் பெயர் : கேபிள் சங்கர் (மண்டபத்துக்குள்ள தக்காளி. முட்டைல்லாம் எடுத்துவர அனுமதி இல்லை. சொல்லிப்புட்டேன்)

மண்டபத்திற்கு வரும் வழி : சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள்  அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம்.  இதேபோல் செங்கல்பட்டு, தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் 17 என்று எண்ணிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம். இந்த நிறுத்தத்தில் இறங்கி  லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம். தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.

பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும்  பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம். கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.

தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள்  25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம்.


பதிவர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பவை :  1. அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும். 2. மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும். 3. பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும். 4. ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

முக்கிய நிகழ்வுகளாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.


கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.தங்கள் வலைப்பக்கத்தில் இருந்த படியே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.அதற்கான நிரலை எப்படி இணைப்பது என்பதை இங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்.

வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சங்கமிப்போம்.

Friday, August 24, 2012

துக்கடா : வெட்டி மன்றங்கள்!

Posted by பால கணேஷ் Friday, August 24, 2012

திவர் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் செம்மையாக நடந்தேற வேண்டுமே என்கிற பயமும் பரபரப்பும் உச்சத்தில் இருக்கிறது. ‘‘ஒரு கல்யாணத்தை நடத்தறது மாதிரி திட்டமிட்டு செயல்படுகிறீர்கள்’’ என்று வல்லிசிம்ஹன் அம்மா பேசும்போது குறிப்பிட்டார்கள். மிகச் சரியான வார்த்தை! கல்யாண மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்வும் ஒரு கல்யாணம் போன்றதுதான்.

கல்யாணத்தை நல்லபடியாகச் செய்து முடித்து விருந்தினர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்கிற ஒரே சிந்தனைதான் இப்போது! கருத்துப் பெட்டியில் கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தவறாமல் பதிலளிப்பது என்கிற என் வழக்கத்தை கடந்த இரண்டு மூன்று பதிவுகளாகச் செயல்படுத்த இயலாமல் நான் மனக்குறையுடன் தவிப்பதன் காரணமும் அதுவே. நிகழ்ச்சி தினம் நெருங்கி விட்டதால் கச்சேரி (பதிவு) செய்யலாம் என்று உட்கார்ந்தால் குரல் (சிந்தனை) ஒத்துழைக்கவில்லை. எனவே சில துக்கடாக்களைத் தூவி நிரவல் செய்கிறேன் இங்கே.

=======================================

டிகர்திலகம் சிவாஜிகணேசன் எவ்வளவு சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அவர் மிகச் சிறந்த பொய்யர் என்பதை இன்று நான் உணர்ந்தேன். ‘ஸன் லைப்’ தொலைக்காட்சியை இன்று காலையில் வைத்தபோது சிவாஜி இப்படி பாடிக் கொண்டிருந்தார்.

‘நடையா இது நடையா, ஒரு நாடகமன்றோ நடக்குது; இடையா இது இடையா, அது இல்லாதது போல் இருக்குது’

யாரைப் பார்த்துப் பாடினார்? அழகான வட்ட முகத்தையும், பூசணிக்காயையொத்த இடையையும் கொண்டிருந்த தேவிகாவைப் பார்த்து! இப்போது சொல்லுங்கள்... சிவாஜி பச்சைப் பொய்யரா இல்லையா? ஹி... ஹி...

=======================================

‘தனக்கு மிஞ்சித்தான் தானம்’ என்பதற்கு நான் ஒரு புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் இங்கே ‘தனக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள். 

 தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து அதை தர்மத்துக்குச் செலவழிப்பதுதான் ‘தனக்கு மிஞ்சி தானம்’. நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாக இருந்தாலும், தானம் பண்ணும்படியாக செலவைக் கட்டுப்படுத்தி மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்.
                                                                   -ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்

=======================================
ட்டிமன்றங்கள் என்கிற விஷயங்களின் மீது எனக்குப் பெரிய மரியாதை கிடையாது. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் குன்றக்குடி அடிகளார், வாரியார் போன்றவர்கள் நடத்தியபோது கருத்துச் செறிவுடன், வாதங்களும் எதிர் வாதங்களுமாக ரசிக்க வைக்கும் பட்டிமன்றங்கள் நிறைய இருந்தன. சாலமன் பாப்பையா நடத்திய வரையில் இருந்த அந்த நிலைமை மாறி, இன்றைக்கு துணுக்குத் தோரணங்களைத் தொங்க விடும் வெற்று அலங்கார மண்டபங்களாக மாறிவிட்டன பட்டிமன்றங்கள்.

நான்கைந்து ஜோக்குகள், எதிரணியினரின் தனிப்பட்ட விஷயத்தைக் கூட கேலியாக மேடையில் பேசுதல் (வீட்ல பூரிக்கட்டையால அடி வாங்கினவருங்க இவரு) என்றெல்லாம் அவற்றின் தரம் இறங்கி, இன்றைக்கு ‘இடை ஆட்டுவதில் சிறந்தவர் அனுஷ்காவா, ஹன்ஸிகாவா’, ‘பதிவர்களில் சிறந்தவர் ஜாக்கி சேகரா, கேபிள் சங்கரா’ என்றெல்லாம் தலைப்பு வைத்து நடத்தப்படும் ஒரு நிலையை அடைந்து விட்டன. ஹோட்டலின் மெனு மாதிரி ஏதாவது விசேஷ தினங்கள் என்றால் ஒன்றரை மணி நேரத்தை விளம்பரங்களுடன் ஒப்பேற்ற பட்டிமன்றங்கள் என்பவை அத்தியாவசியமாகி விட்டன ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும். நான் இவற்றைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல் வெளியேறி விடுவேன். உங்களின் எண்ணம் இவ்விஷயத்தில் எப்படி?



Wednesday, August 22, 2012

சென்னையை கலக்கப் போகிறவர்கள்

Posted by பால கணேஷ் Wednesday, August 22, 2012
ணக்கம் நண்பர்களே...

நாம் அனைவரும் ஒன்றிணையும் பதிவர் சந்திப்பு தினம் வெகு அருகில் வந்து விட்டது. இங்கே விழாவில் கலந்து கொண்டு கலக்க இருக்கு்ம் நம் வலைத்தள உறவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளோம். இவர்கள் தவிர மற்றவர்களுக்கும் கலந்து கொள்ளவும் கவிதை பாடவும் விருப்பம் இருப்பின் நாளை மாலைக்குள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தும்படி வேண்டுகிறோம். சரியான முறையில் ஏற்பாடுகள் செய்ய அது மிக உறுதுணையாக இருக்கும்.


யகுளம் கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
 

ரேகா ராகவன்,சென்னை
 கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்
னை அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை  
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
மென்பொருள்பிரபு,சென்னை 
அமைதி அப்பா,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
சைத அஜீஸ்,துபாய் 
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 


மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
கணக்காயர்,சென்னை  

கவியரங்கில் பங்குபெறுவோர் 

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
கணக்காயர்,சென்னை  

எங்களைத் தொடர்பு கொள்ள...

மதுமதி - 9894124021
ஜெயக்குமார் - 9094969686
பால கணேஷ் - 7305836166
மெட்ராஸ்பவன் - 9841611301

மின்னஞ்சல் முகவரி:

kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

Monday, August 20, 2012

நடை வண்டிகள் - 31

Posted by பால கணேஷ் Monday, August 20, 2012

நானும், ‘அவரும்!’
கோவையிலிருந்து என் நண்பன் விஜயன் போன்‌ செய்தான். அவனும் அவன் நண்பன் ராமசுப்ரமணியனும் அன்றிரவு சென்னை வருவதாகவும், ராமசுப்ரமணியன் எழுத்தாளர் ............ன் தீவிர விசிறி என்பதால் மறுநாள் ஞாயிறன்று அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டு. அந்த எழுத்தாளரை எனக்கு அறிமுகம் இல்லாவிட்டாலும், அவரின் போன் நம்பரைத் தேடிப் பெற்று டயல் செய்தேன். அவரே எடுத்தார். நான் விஷயத்தைச் சொன்னதும்... ‘‘வாசகரைச் சந்திப்பது என் பாக்கியமல்லவா? நாளைக் காலை அவசியம் வாருங்கள்’’ என்றார். நான் மகிழ்வுடன் கோவைக்கு போன் செய்து என் நண்பனுக்கு விஷயத்தைச் சொல்லி விட்டேன்.

நான் அந்த எழுத்தாளர் எழுதிய கதைகளை நிறையப் படித்ததுண்டு. மனித உறவுகளையும், வாழ்க்கை குறித்த அக்கறையுடனும் எழுதும் அவர் எழுத்தின் மேல் எனக்கு மிக மதிப்பு உண்டு. அவரின் எழுத்துக்களைப் படித்து தீவிர விசிறியான பல வாசகர்கள் அவரை ஞானகுரு என்று கொண்டாடுவார்கள். அத்தகைய மதிப்புமிக்க எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரைச் சந்திக்கப் போகும் மகிழ்வு என்னுள் ததும்பியது. மறுதினம் காலையில் அவர்கள் இருவரையும் அவர் வீட்டிற்கு அழைத்தச் சென்றேன்.

மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் அவர். என்னை அறிமுகம் செய்து கொண்டு, என் நண்பர்கள் இருவரையும் அறிமுகம் செய்வித்தேன். ராமசுப்ரமணியம் அவரைச் சந்தித்த மகிழ்வில் அவரின் கதைகளைப் பற்றிப் பேச, அவர் அவனுக்கு பதில் ‌சொல்லிக் கொண்டு, இடையிடையே சில அறிவுரைகளையும் அவனுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த நான் அவர் பேசும் விதத்தையும், நொடிக்கு நொடி மாறும் அவரது முகபாவங்களையும் ரசித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். தன் வாசகனுடன் நீண்ட உரையாடல் நடத்திக் கொண்டிருந்த அவர், திடீரென்று என் பக்கம் திரும்பி, ‘‘இவன் என்ன பெரிய புடுங்கி மாதிரி அட்வைஸ் பண்ணிட்டிருக்கான்னுதானே நீங்க இப்ப மனசில நினைக்கறீங்க?’’ என்று கேட்டார்.

தூக்கிவாரிப் போட்டது எனக்கு. ‘‘இல்லை ஸார்... நான் அப்படியெல்லாம் நினைக்கக் கூடியவன் இல்லை. உங்களோட பேச்சையும், முகபாவங்களையும் ரசிச்சுப் பார்த்துட்டிருந்தேன். என் மனசுல நீங்க சொன்ன மாதிரி நினைப்பு ஓடலை. வேறொரு விஷயம் ஓடிட்டிருந்தது. அதை உங்ககிட்ட கேக்கலாமா?’’ என்றேன். அவருக்கு ஏன் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்பதும், என்னை ஏன் அப்படிக் கேட்டார் என்பதும் எனக்குக் குழப்பமாகவே இருந்தது. ‘‘எதுவா இருந்தாலும் கேளுங்க’’ என்றார்

அவர். நான் சொன்னேன்: ‘‘ஸார்! விகடன்ல ஒருசமயம் சிறுகதைப் போட்டி வெச்சிருந்தாங்க. பரிசு மிகப் பெரிய தொகைங்கறதால கோவைல என்கூட வேலை பார்த்துட்டிருந்த முத்துசாமிங்கற நண்பன் லீவு போட்டுட்டு கன்னியாகுமரில (அவன் சொந்த ஊர் நெல்லை) ஒரு தனி இடத்துல உக்காந்து யோசிச்சு கதை எழுதிட்டிருந்தானாம். அப்ப கடற்கரைல நீங்க தனியா நடந்து வர்றதைப் பார்த்திருக்கான். உடனே உங்ககிட்ட ஓடிவந்து மேல்மூச்சு வாங்க, ‘ஸார்... நான் உங்க தீவிர ரசிகன் ஸார். உங்க கதைல்லாம் படிச்சிருக்கேன்’ன்னு சொல்லிருக்கான். நீங்க ஒருமுறை நிமிர்ந்து பார்த்து, ‘படி’ ன்னீங்களாம். அவன் பரசவத்தோட, ‘உங்களை இங்க பாப்பேன்னு நினைக்கவே இல்ல ஸார். உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் ஸார்’ன்னானாம். நீங்க ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்து, கைய உயர்த்தி, ‘சந்தோஷப்படு!’ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு நடந்து  போயிட்டீங்களாம். அவன் திகைச்சுப் போய் நின்னுட்டானாம். பின்னொரு நாள்ல இதைச் சொல்லி ‘அந்த எழுத்தாளர் ஒரு கர்வி’ன்னான். ஆனா நீங்க பேசறதை, பழகறதைப் பார்த்தா அப்படித் தெரியலையேன்னு தான் நான் யோசி்ச்சிட்டிருந்தேன்’’ என்றேன்.

‘‘உங்க நண்பனுக்குப் புரியவில்லை. ஒரு எழுத்தாளன் தனிமையில சிந்திச்சபடி நடந்து வந்துட்டிருக்கறப்ப சிந்தனை கலைக்கப்பட்டால் ஏற்படும் எதிர்விளைவு அது. நானென்ன சினிமா நடிகனா என்னைப் பார்த்ததும் பரவசப்பட்டு பேச்சு வராமல் திகைக்கற அளவுக்கு? என் கதைகளைப் பத்திப் பேசியிருந்தா நானும் நின்னு பேசியிருப்பேன். வெறுமே பார்த்ததுலயே பரவசம், சந்தோஷம்ங்கறவங்க கிட்ட நான் என்ன பேசிட முடியும் சொல்லுங்க...’’ என்றார். அவர் சொன்னது எனக்கு மிகச் சரியாகப் பட்டதால் ஆமோதித்தேன். அதன் பின்னர் ஒரு மணி நேரம் அவருடன் உரையாடிவிட்டு நாங்கள் மூவரும் விடைபெற்றபோது வாசல்வரை வந்து வழியனுப்பினார்.

பின்வந்த காலத்தில் அவரின் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர் ஒருவர் எனக்கு நண்பராகி அவருக்கு பல புத்தகங்கள் லேஅவுட் செய்து கொடுத்தேன். அப்போது இந்தச் சம்பவத்தைச் சொன்னேன், "ஏன்யா உங்க எழுத்தாளரு அப்படிச் பேசினாரு?" என்று கேட்டதற்கு அவர் மிக வியந்தார். எழுத்தாளர் இயல்பில் நல்ல குணமுடையவர் என்றும், அனைவரிடமும் அன்பாகப் பேசுபவர் என்றும், உங்களிடம் அப்படி ஒரு கேள்வி‌யைக் கேட்டிருக்க வாய்ப்பேயில்லையே என்றும் சொன்னார். உண்மையில் ஏன் என்னைப் பார்த்து அப்படிக் கேட்டார் அவர் என்பது இன்றும் எனக்குள் ஒரு வியப்புக் குறிதான்! நான் அவரை வெறித்த விதம் அநாகரீகமாக இருந்திருக்கும் போலும் என்றெண்ணி அதை நான் திருத்திக் கொண்டேன். அதன்பின் அந்த எழுத்தாளரைச் சந்திக்கும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை.

===================================

டை வண்டிகள்’’ தொடர் இத்தடன் நிறைவு பெறுகிறது. இறையருளினால் சில எழுத்தாளர்களை நண்பர்களாகப் பெற்ற நான் அந்த அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்களையும், எழுத்தாளர்கள் பற்றிய நான் அறிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தத் தொடரை எழுதத் தொடங்கினேன். கற்றதும் பெற்றதுமான என் அனுபவங்களை நீங்கள் அனைவரும் ரசித்து வரவேற்று என்னை உற்சாகப்படுத்தியது என்றும் என் மனதிலிருந்து அகலாமல் பசுமையாக இருக்கும். உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகமிக நெகிழ்வுடன் என் இதயம் நிறைந்த நன்றி.

                                                   - நிறைவு -

Saturday, August 18, 2012

மொறுமொறு மிக்ஸர் - 10

Posted by பால கணேஷ் Saturday, August 18, 2012
                           
                             எலும்புகள் சொன்ன கதை!

ர் ஸிட்னி ஸ்மித் என்ற அறிஞர் எடின்பரோ சர்வகலாசாலையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு பல ஆண்டுகள் கெய்ரோவில் சவப் பரிசோதகராகவும் இருந்தவர் அவர். பல பெரிய கொலை வழக்குகளில் இவருடைய ஆராய்ச்சி மிகவும் பயன்பட்டிருக்கிறது.

ஒரு நாள் மூன்றே மூன்று எலும்புகள் அடங்கிய ஒரு சிறு பொட்டலத்தை போலீசார் அவரிடம் அனுப்பினார்கள். ஒரு பழைய கிணற்றைச் சுத்தம் செய்யம் போது அவை கிடைத்தனவாம். போலீசாருக்கு ஒரு சந்தேகமும் முதலில் அதைப் பற்றி எழவில்லை. தற்செயலாக ஆடு, மாடு ஏதாவது விழுந்து இறந்திருக்கும் என்று நினைத்தனர். இருப்பினும், ஸர். ஸிட்னியின் பரிசோதனைச் சாலைக்கு வழக்கப்படி அனுப்பி, ‘‘இவைகள் மனித எலும்புகளா?’’ என்று விசாரித்தனர்.

எலும்புகளைப் பரிசோதித்த பின்பு ஸர்.ஸிட்னி சொன்ன தகவல்கள் இவை: 1) அந்த மூன்றும் ஒரு பெண்ணின் எலும்புகள் 2) அந்தப் பெண் குட்டையாகவும், ஒல்லியாகவும் இருந்தவள் 3) வயது சுமார் 23 இருக்கும் 4) மூன்று மாதத்திற்கு முன்பு இறந்திருக்கிறாள் 5) மணமானவள் 6) ஒரு குழந்தைக்குத் தாய் 7) அவள் இடதுகால் சற்றுக் குட்டை, சாய்ந்து சாய்ந்து நடக்கிறவள் 8) துப்பாக்கியிலிருந்த ரவை வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது  9) ஒன்பதடி தூரத்திலிருந்து நேர்முகமாகத் துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள் 10) அவளைக் கொன்றவன் எதிரே சற்றே இடது பக்கம் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ சுட்டிருக்கிறான் 11) சுட்டவுடனேயே அவள் இறக்கவில்லை, ஒரு வாரம் அல்லது பத்து நாள் கழித்து இறந்திருக்கிறாள்.

-இந்தத் தடயங்களைதக் கொண்டு போலீஸார் துப்பறிந்து குற்றவாளியைக் கண்டுபிடித்தார்கள். குற்றவாளி அந்தப் பெண்ணின் தந்தைதான்! வீட்டில் அவர் துப்பாக்கி ரவை செய்வதுண்டு (லைசென்ஸ் பெறாமல்). மூன்று மாதங்களுக்கு முன்பு துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது தற்செயலாக அவர் மகள் மீது ஒரு ரவை பாய்ந்து விட்டது என்றும், புண் புரையோடி அவள் இறந்து விட்டாள் என்றும், போலீசுக்குப் பயந்து அவளை ஒரு பாழ் கிணற்றில் போட்டு விட்டதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

ஸர். ஸிட்னி மூன்று எலும்புகளைக் கொண்டு எப்படி இவ்வளவு விவரங்களை சரியாக ஊகித்துச் சொன்னார்? நீஙகளும் கொஞ்சம் யூகித்து, கண்டுபிடியுங்களேன்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

ரு எழுத்தாளர் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நேரத்தில் கதை எழுத உட்கார்ந்தார். இப்படி எழுதினார்:

பாவம் அந்த போதைப் பெண்! அவள் கணவன் விக்‘ரம்’ அவளைக் கொல்ல வருவதாக மனப்‘பிராந்தி’ அடைந்து, பயத்தில் ‘பீரி’ட்டு அலறி, ஓடியதில் ‘கள்’ தடுக்கி விழுந்து விஸ்‌கி விஸ்கி அழுதாள்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

பெரிய பாராக்களையும், நீண்ட கதைகளையும் படிக்க இந்நாட்களில் யாருக்கும் அவகாசமில்லை. சின்னச் சின்ன வாக்கியங்களில் எழுதிக் கொண்டிருக்கிறோம். அன்றைய காலகட்டத்தில் சாண்டில்யன் எழுதுகிற மாதிரி நீஈஈஈஈஈண்ட வாக்கியங்கள் அமைத்து எழுதுவது சஜகமாயிருந்திருக்கிறது. முண்டாசுக் கவிஞன் எழுதிய ஒரு நீண்ட வாக்கியத்தைப் படியுங்கள்:

ங்ஙனம் மனித ஜாதிக்கே பொது இகழ்ச்சியாகவும், பொதுக் கஷ்டமாகவும், இந்தியர்களுக்கு விசேஷ அவமானமாகவும், விசேஷ கஷ்டமாகவும் மூண்டிருக்கும் இந்த வறுமையாகிய நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்து, அந்த நோயை நீ்க்கி, இந்தியாவிலும் பூ மண்டலத்திலும் சகல ஜனங்களுக்கும் ஆகார சம்பந்தமாகப் பயமிலாதபடி அரை வயிற்றுக் கஞ்சியேனும் நிச்சயமாகக் கிடைப்பதற்கு வழிகள் எவை என்பதைப் பற்றி ஒவ்வொரு புத்திமானும் ஆராய்ச்சி செய்தல் இவ்வுலகத்திலுள்ள எல்லா அவசரங்களைக் காட்டிலும் பெரிய அவசரமென்று நான் கருதுகின்றேன்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

முதிர் இளைஞன் ஒருவனுக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை. அவன் நண்பன் ஒருவன் அதற்கு யோசனை சொன்னான். ‘‘டேய், நீ எந்தப் பெண்ணைப் பத்தி உன் அம்மா கிட்டே சொன்னாலும் வேண்டாம்னு உங்கம்மா மறுத்துடுறதாச் சொல்றே. ஒண்ணு பண்ணு... உன்னுடைய அம்மாவைப் போலவே தோற்றத்திலும் குணத்திலும் உள்ள ஒரு பொண்ணைப் பார்த்து விட்டாயானால் அம்மாவால மறுத்துப் பேசவே முடியாது. அதை வேணா ட்ரை பண்ணிப் பாரேன்...’’

ஒரு வாரம் கழித்து நண்பனைச் சந்தித்ததும் அவன் கேட்டான்: ‘‘என்னடா... நான் சொன்னபடி செஞ்சியா?’’

‘‘அலையா அலைஞ்சு தேடிக் கண்டுபிடிச்சேன்டா...’’

‘‘‘வெரிகுட்! நிச்சயதார்த்தம் எப்போடா?’’

‘‘அடப்போடா... அந்தப் பொண்ணை எங்கப்பா வேண்டாம்னு சொல்லிட்டாருடா. அவ்வ்வ்வ்வ!’’

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

சின்னச் சின்ன ட்வீட்டு! சிங்கார ட்வீட்டு! குறு வரிகளில் நறுக்கான ட்வீட்டுகள் சில இங்கே...

* நகரங்களில் கொஞ்சமும் கவலையின்றி ஒன்று மிகப் பணக்காரர்கள் வசிக்க முடியும்; அல்லது மிக ஏழைகள் வசிக்க முடியும்.

* கார் ஓட்டுவதை விடவும் விமானம் ஓட்டுவது ஆபத்து குறைவானது.

* மாற்று அறுவை சிகிச்சை செய்து இதயங்களைக் கூட மாற்றி விடலாம். ஆனால் ஜலதோஷத்தைப் போக்க முடியாது.

* ஏழைகளே இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதை விட செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது சுலபம்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

ஸர். ஸிட்னி கண்டுபிடித்த விதம்:

1) போலீஸார் தந்த மூன்று எலும்புகளில் இரண்டு இடுப்பு எலும்புகளாகவும், ஒன்று அவைகளை இணைக்கும் நடு எலும்பாகவும் இருந்தன. அந்த மூன்றையும் பொருத்திப் பார்த்தால் இடுப்பின் கீழ்ப் பாகம் சரியாக இருந்தது. அதைப் பார்த்ததுமே அது பெண் என்பது சுலபமாகப் புரிந்தது. 2) அவை சிறியதாகவும், லேசாகவும் இருந்ததால் அந்தப் பெண் குட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்திருப்பாள். 3) இடுப்பு எலும்புகள் சாதாரணமாக 22 வயதிலிருந்து 25 வயதுக்குள் ஒன்று சேரும். ஆனால் அவை சரிவரச் சேராததனால் வயது உத்தேசமாக 23 இருக்கலாம் என்பது யூகம். 4) அந்த எலும்புத் துண்டில் கொஞ்சம் மாமிசம் ஒட்டிக் கொண்டிருந்தது. அதைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 3 மாதங்களுக்கு முன் இறந்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தார். 5,6) எலும்புகளில் பள்ளங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு அவள் மணமானவள், தாய் என்பதை அறிய முடிந்தது. 7) வலது இடுப்பு எலும்பு இடப்பக்கத்தை விட பளுவாகவும், பெரியதாகவம் இருந்தது. அதனால் வலது பக்கம்தான் உடம்பின் பளுவைப் பல வருடங்களாகத் தாங்கிக் கொண்டிருந்தது என்று முடிவு செய்தார். ஒரு பக்கமாகச் ‌சாய்ந்து நடந்தால்தானே அப்படி ஏற்படும்?  8) வலது பக்கத்து எலும்பில் துப்பாக்கியின் ரவை நன்றாகப் பதிந்திருந்தது. எடுத்துப் பரிசோதித்ததில் அது வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்று தெரிந்தது. 9,10) எலும்பில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து எந்தத் திசையில், எவ்வளவு தூரத்திலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று யூகித்தார். 11) காயம் எலும்பில் நன்றாக ஊடுருவிப் பரவியிருந்ததால் அவள் சுடப்பட்டவுடனேயே இறக்கவில்லை என்றும் ஒரு வாரம் கழித்துத் தான் இறந்திருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார்.

                                    எலும்புக் கதைக்கு மூலம் / நன்றி : குமுதம் 1963 இதழ்!

Thursday, August 16, 2012

சுஜாதாவின் போதை அனுபவம்!

Posted by பால கணேஷ் Thursday, August 16, 2012

மீபத்தில் வீட்டிலிருந்த பழைய குமுதம் இதழ்த் தொகுப்பு ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு விஷயம் கண்ணில் பட்டது.  1970களில் சுஜாதா குமுதம் இதழில் ‘கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து வாரம் ஒரு பக்கம் எழுதி வந்திருக்கிறார். அதில் இரண்டு கட்டுரைகளைப் படிக்க முடிந்தது. சுஜாதா இவற்றில் எழுதியிருப்பதை எந்தப் புத்தகத்திலும் படித்ததாக எனக்கு நினைவில்லை. (சுஜாதாவின் தீவிர விசிறியான நண்பர் பாலஹனுமான் தான் சொல்ல வேண்டும்) அவற்றில் ஒன்று இங்கே :

                                               போதும்!

ரு வட இந்திய நகரில் நண்பர்கள் இருவருடன் இரவில் கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு கடையில் கறிவேப்பிலைத் துவையல் போல ஏதோ பச்சிலை அரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். பலர் வந்து ஆளுக்கு ஒரு பெரிய கோலி அளவுக்கு வாங்கி வாயில் அடக்கிக் கொண்டு, ஒரு கிளாஸ் தண்ணீருடன் மளக்கென்று விழுங்கி விட்டுக் காசு கொடுத்துவிட்டுத் தம் வழியே சென்றார்கள்.

இது என்ன? ஸீனியர் நண்பரைக் கேட்டபோது, ‘‘சாப்பிட்டுப் பார்க்கிறீர்களா?’’ என்றார்.

‘‘என்ன செய்யும்?’’ என்றேன்.

‘‘வேலை செய்யும்’’ என்றார்.

அதையும் பார்த்து விடலாம் என்று ஸ்பெஷலாகப் பாதாம் பால் கலந்து ஆளுக்கு ஓர் உருண்டையை விழுங்கினோம். விழுங்கிவிட்டு நடந்தோம். அரை மணி ஆயிற்று. ஒன்றுமே ஏற்படவில்லை. சாப்பிட்ட அளவு போதாது, இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் (வேண்டாம்! சுத்தும்!) என்று பிடிவாதமாக மறுபடி அந்தக் கடைக்குச் சென்று அதே அளவு துவையலை .உட்கொண்டோம்.

நேராக ஓர் ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு ஓர் ஓட்டைத் தியேட்டரில் போய் உட்கார்ந்தோம். ம்ஹும்... ஒன்றும் நிகழவில்லை எங்களுக்கு. அமெரிக்க கட்டிடக் கலை பற்றி ஒரு டாக்குமெண்டரி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு காட்சியில் ஒரு ஃப்ரேம் சட்டென்று மாறியது. அவ்வளவுதான். என்னுள் ஸ்விட்ச் போட்டாற் போல் மருந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

முதன்முதலில் உடம்பெல்லாம் சூடாயிற்று. ஜப்பானிய நீராவிக் குளியல்போல், காது நுனியிலிருந்து ஆரம்பித்து உடம்பு பூராவும் சூடு. நாக்கு உலர்ந்து எதிரே திரைப்படம் தூர தூரச் செல்ல ஆரம்பித்தது. இந்த வேக்காட்டில் இனி உள்ளே உட்கார முடியாது என்று எழுந்து வெளிவந்தால் நடக்க முடிகிறதா? முழங்காலுக்குக் கீழ் பஞ்சு ‌போலவும், பூட்ஸுக்குள் மேகம் போலவும் ஒரே தொள தொள. ஒரு கடைக்குச் சென்று ஆரஞ்சு ஜூஸ் உறிஞ்சிப் பார்த்தோம். நாக்கு நனையவில்லை.

மனத்திற்குள் பயம் ஏற்பட்டது. திரும்பப் போய்விடலாம் என்று டாக்ஸியைக் கூப்பிட்டேன். நண்பர்களில் ஒருவன், ‘‘என் பல்ஸைப் பார். என் பல்ஸைப் பார்’’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பது தூரத்தில் கேட்டது. என்னை விட்டு நானே ரொம்பத் தொலைவில் நடந்து கொண்டிருப்பது போன்ற .உணர்ச்சி.

எப்படியோ டாக்ஸி பிடித்தோம். டாக்ஸியில் செல்லும் போது நகரமே துப்புரவாக அலம்பி விட்டிருப்பது போலத் தெரிந்தது. நியான்கள் பளிச்சென்று ஒளிர்ந்தன. உடன் ஒரு பயம். ‘நீ காலி, நீ காலி’ என்று ஒரு கோரஸ் (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்). டாக்ஸியில் மூன்று மாதம் பிரயாணம் செய்து எங்கள் விடுதியை அடைந்தோம். யார் பணம் கொடுத்தார்கள்? எப்போது படுக்கையில் விழுந்தேன்..?

என்னைப் பொறுத்த வரை ஒரு தடவை போதும்.

=================================================

பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை. நண்பர்கள் குறிப்பிட்டுச் சொன்னால் ஒன்றிரண்டு மட்டும் பார்ப்பேன். நேற்று சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சிகள் ‌கொஞ்சம் பார்க்கலாமே என்று வைத்தேன். விஜய் டிவியில் தன் டிரேட்மார்க் கண்ணாடியுடன் மிஷ்கின் பேசிக் கொண்டிருந்தார். தான் ‘Bar Anthem’ என்கிற ஒன்றை இயற்றியிருப்பதாகச் சொல்லி பாடிக் காட்டினார். அடாடா1 பாடலின் கருத்தாழத்தில்(?) புல்லரித்துப் போனேன். எந்தமிழ்நாட்டுக் குடிமக்கள் இனி இதைப் பாடிப் பரவசித்து, நிறையக் குடித்து, இந்த அரிய சேவை(!)க்காக மிஷ்கினுக்கு கடற்கரையில் ஒரு சிலை வைப்பார்களாக!

மாலையில் ‘வேங்கை’ என்று ஒரு படம் சன் டிவியில் போட்டார்கள். கஞ்சா கருப்பு என்கிறவர் காமெடி என்கிற பெயரில் அடித்திருக்கும் கூத்து.... விரசத்தின் உச்சம்! எனக்கு வந்த வெறிக்கு அந்த ஆசாமி மட்டும் என் கைல கிடைச்சிருந்தான்.... இப்படி நொந்து நூடுல்ஸாகிப் போயி எதேச்சையா மெகா டிவி வெச்சப்ப, முனைவர் கு.ஞானசம்பந்தன் காமராஜர் அவர்களைப் பத்தி ஒரு அருமையான உரை நிகழ்த்திட்டிருந்தாரு. பல அரிய தகவல்களோட அவர் நடத்தின அந்த நிகழ்ச்சி தென்றல் வீசின மாதிரி மகிழ்ச்சியைத் தந்தது. இப்படி ஒண்ணு ரெண்டு நல்ல நிகழ்ச்சிகள் கண்ல படறதாலதான் அந்த இடியட் பாக்ஸை இன்னும் தூக்கிப் போட்டு உடைக்காம வெச்சிருக்கேன்.

=================================================

Tuesday, August 14, 2012


1947 ஆகஸ்ட் 14 இரவு 11 மணிக்கு அரசியல் நிர்ணய சபை கூடியது. அந்த உன்னத சபையிடம்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க உள்ளனர். அன்றைய இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அச்சபையில் இருந்தனர். நள்ளிரவை நெருங்கி்க் கொண்டிருந்த நேரத்தில் மூன்று தலைவர்கள் எழுந்து சுருக்கமாக உரையாற்றுகின்றனர். புதிய பாரதம் எப்படி இருக்க வேண்டுமென்று அவர்கள் கண்ட கனவு உரையில் வெளிப்படுகிறது. நீங்களும் கேளுங்கள்...

அரசியல் நிர்ணய சபையின்
தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் :

து மகிழ்வுடன் கொண்டாட வேண்டிய நாள் என்பதை விட நம் கனவுகளில் உள்ள இந்தியாவை உருவாக்க நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய நாள் இது. கடந்து போன காலத்திலிருந்து நம் கண்களைத் திருப்பி எதிர்காலத்தில் நம் பார்வையையும் பதிக்க வேண்டும். மற்ற நாடுகளோடு நமக்கு எந்த சச்சரவும் கிடையாது. அவர்களும் நம்மோடு எந்த சச்சரவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நாம் நம்பலாம். சரித்திர பூர்வமாகவும், கலாச்சார பூர்வமாகவம் நாம் அமைதியை விரும்புபவர்கள். இந்தியா உலகத்தோடு சமாதானமாக இருக்க விரும்புகிறது.

தன் எல்லைகளு்கு வெளியே இந்தியா வென்றது ஆன்மாக்களைத்தான். இரும்பினாலோ தங்கத்தாலோ ஆன அடிமைச் சங்கிலியிடும் சாம்ராஜ்ய வெற்றிகள் அல்ல அவை. பிற நாடுகளையும், மக்களையும் கலாச்சாரம், நாகரிகம், சமயம், ஞானம் என்கிற தங்கப்பட்டு கொண்டு பிணைத்த வெற்றிகள். இந்தப் பாரம்பரியத்தை நாம் தொடர்வோம். அகிம்சை எனும் ஆயுதத்தால் அமைதியும் விடுதலையும் நிறைந்த உலகைப் படைப்போம்.

ஜவஹர்லால் நேரு :

சுதந்திரமும் அதிகாரமும் பெரும் பொறுப்பைத் தருகின்றன. இந்தியக் குடிமக்களின் பிரதிநிதியாகிய சர்வ வல்லமை உள்ள இந்தச் சபையின் தோள்களில் அந்தப் பொறுப்பு அமர்ந்திருக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு நாம் எவ்வளவோ வேதனைகளைத் தாங்கியிருக்கிறோம். துயரின் நினைவுகளால் நம் இதயங்கள் கனக்கின்றன. சில வேதனைகள் இன்றும் தொடர்கின்றன. எனினும் கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். எதிர்காலம் நம்மை அழைக்கிறது.

ஒவ்வொரு விழியிலுள்ள கண்ணீரையும் துடைப்பதுதான் இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த மனிதரின் பேராவலாக உள்ளது. கண்ணீரம் துயரும் உள்ளவரை நம் பணி முடிந்ததாகக் கொள்ள முடியாது. எனவே நம் கனவுகளை நனவாக்க நாம் உழைக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும்.

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் :

மக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பங்களோ ஏராளம். ஆனால் திறமையை அதிகாரம் மீறும் போது நாம் தீமையில் வீழ்ந்து விடுவோம் என்று எச்‌சரிக்க விரும்புகிறேன். நாளை முதல்- இன்றிரவு முதல் -நாம் பிரிட்டிஷ்காரர்கள் மீது பழி சுமத்த முடியாது. நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். சாதாரண மனிதனின் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சமுதாயத்தின் பிற தேவைகளை அளிப்பதன் மூலம்தான் நாம் மதிப்பிடப்படுவோம்.

மேலிடங்களில் உள்ள ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை, அதிகார மோகம், கொள்ளை லாபம், கறுப்புச் சந்தை இவை இந்த உன்னதமான நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை நாம் ஒழிக்கவில்லையானால் நம் திறமையை உயர்த்திக் கொள்ள முடியாது.

-டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பேசி முடித்ததும் நள்ளிரவு பன்னிரண்டு மணி அடித்தது. ஆகஸ்ட் 15 பிறந்தது. தொடர்ந்து சபையில் இருந்த உறுப்பினர்கள் யாவரும் எழுந்து நின்று நாட்டுக்குச் சேவை செய்ய உழைப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

                                                                                             -நன்றி : தினமணி 14.8.2011

Monday, August 13, 2012

நடை வண்டிகள் - 30

Posted by பால கணேஷ் Monday, August 13, 2012

                        நானும் அனுராதாரமணனும்-3

னும்மாவின் தாத்தா அந்நாளில் பிரபலமான நாடக/திரைப்பட நடிகர். அம்மாவழிப் பாட்டியும், அப்பாவழிப் பாட்டியும் தன் பேத்தி சங்கீதம் கற்றுக் கொண்டு கச்சேரிகள் செய்ய வேண்டும் என்கிற ஆசையுடன் சங்கீத வாத்தியாரை வீட்டுக்கு வரச்செய்து சங்கீதம் கற்றுத்தர ஏற்பாடு செய்திருந்தார்கள். அரியக்குடி ஐயங்கார் வேறு அவர்கள் இருக்கும் அதே தெருவிலேயே குடியிருந்தவர். இப்படியான சங்கீத சூழ்நிலையில் வளர்ந்து சங்கீதம் படித்தவராக இருந்ததால் ராகங்கள் அனைத்தும் அவருக்கு அத்துபடி. குங்குமம் இதழில் டிசம்பர் மாதத்தில் சங்கீத விமர்சனங்கள் எழுதிவந்த ‘காமேஸ்வரி ஐயர்’ அனுராதா ரமணன் அவர்கள்தான். சகுந்தலா பாலு (பெண்கள் துப்பறியும் பாக்டரி - அவள் விகடன்), சாரதா நடராஜன் (வரம் தரும் விரதங்கள் - குங்குமம்) இப்படிப் பலபெயர் மன்னியாக எழுதிக் குவித்தவர் அனும்மா.

நான் சொல்ல வந்த விஷயம் அதில்லை. சங்கீதத்தில் நிறைய ஈடுபாடும் ஞானமும் உள்ள அவரை அந்த ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலருக்காக இளம் திரைப் பாடகர்கள் அனைவருடனும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்து விரிவான ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். அந்த கலந்துரையாடல் முடிந்ததும் வந்திருந்த இளம் பாடகர்கள் அனைவருக்கும் சிநேகிதியாகி விட்டார் அனும்மா. தன்னுடன் பழகும் எவரையும் தன் இனிய சுபாவத்தில் நண்பர்களாக்கி விடுவதுதானே அனும்மாவின் சிறப்பம்சம்! அவருடைய தொ.பே. எண்ணை வாங்கிக் கொண்டு, அவ்வப்போது பேசி அவருடன் தொடர்பில் இருநத அந்த ‘இளம் குயில்’களை தன் பிறந்த நாள் விழாவில் பாடுவதற்கு அழைத்திருந்தார் அனும்மா.

அனும்மாவின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக் கொள்வது எளிது. அவரின் பிறந்த நாளுக்கு அரசாங்க விடுமுறைகூட உண்டு. ஏனென்றால் ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர் அவர். அனும்மா பிறந்ததினக் கொண்டாட்டத்தை கலாக்ஷேத்ரா காலனியில் ஒரு திறந்தவெளி தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அதிவேகமான பீட்டில், இரைச்சலான குரலில் இன்றைய திரைப்பட சங்கீத(?)த்தைப் பாடும் அந்த இளம் கலைஞர்கள் அனைவரும் அனும்மா தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த பழைய பாடல்களைப் பாடியபடி இருந்தது ஒருபுறம் கேட்கவே ரம்மியமாக இருந்தது. ஓவியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்ட பிரபலங்களும் வந்திருந்ததில் எனக்குப் பிடித்த பல பிரபலங்களை நான் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது இரண்டாவதான கூடுதல் மகிழ்ச்சி. விழாவிற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் ஓரிரு வார்த்தைகள் பேசியதைக் கேட்டு மகிழ்ந்தது அன்றைய தினத்தின் மூன்றாவது மகிழ்ச்சி. விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் அவர் எழுதிய ‘உறவுகள்’ புத்தகத்தை கையெழு்த்திட்டு அவர் வழங்கியிருந்தார் என்பது நான்காவது போனஸ் மகிழ்ச்சி.

அந்தப் பிறந்ததினக் கொண்டாட்டத்தின் பின்னர் நண்பர் பி.கே.பி.யின் மகள் ஸ்வர்ண ரம்யாவின் திருமணத்தில் அனும்மாவை மீண்டும் சந்தித்தேன். அதற்குப் பின்னர் அவர் வீட்டுக்குச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவரிடம் சொன்னேன். ‘‘ஒரு பத்திரிகையாசிரியர் காஞ்சி ஸ்வாமிகள் சர்ச்சை பலமாக அடிபட்ட சமயத்தில் உங்களைப் பற்றி ஒரு மோசமான கருத்துச் சொன்னார். அவர் உங்கள் பிறந்த நாளிலும், ரம்யாவின் கல்யாணத்திலும் உங்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு ரொம்ப ஆச்சரியம்ங்க’’ என்றேன். பட்டென்று அந்த பத்திரிகை ஆசிரியரின் பெயரைச் சொன்னார் அனும்மா. நான் வியந்தேன். ‘‘மனுஷங்களை என்னால புரிஞ்சுக்க முடியும் கணேஷ். ஒரு பெண் தன்னந்தனியா கணவன் இல்லாம ரெண்டு பெண்களை வளர்த்து ஆளாக்கி, கல்யாணம் செஞ்சு வெக்கறான்னா இந்த சமூகம் பின்னால என்னென்ன பேசும்கறது எனக்கு நல்லாவே தெரியும். அது அவங்க இயல்பு. பேசிட்டுப் போகட்டும். நாம நல்லவிதமாவே நடந்துப்போம்’’ என்றார் அந்த பெரியமனதுக்காரி.

அதன்பிறகு வந்த காலத்தில் நான் நிறையப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டதால் அடிக்கடி அவரைப் பார்க்க முடிந்ததில்லை. எப்போதாவது சந்திக்கும் சமயங்களில் புன்னகை பூத்த முகத்துடன் அன்பாய்ப் பேசுவார். மறக்க இயலாத ஒரு தினத்தில் நான் அலுவலகம் போய்க் கொண்டிருந்த வழியில் கைபேசி ஒலித்தது. மறுமுனையில் பேசிய பாலா ஸார் அனும்மா உறவுகளையும் நட்புகளையும் விட்டு உலகை விட்டுப் பிரிந்து விட்டதாக சோகச் செய்தி சொன்னார். பதறியடித்து உடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அனும்மாவைத் தெரிந்தவர்கள் ஒரு விஷயத்தை நன்கு அறிவார்கள். அவர் உடலில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், வியாதிகளுடன் போராடினாலும் எப்போதும் அழுது வடியும் முகத்துடனோ, கசங்கிய சேலையுடனோ அவரைப் பார்ப்பது இயலாது. உறுத்தாத மெல்லிய மேக்கப்புடன் புன்னகை முகமாய்த்தான் எப்போதும் இருப்பார்.

அன்றைக்கு நான் கண்ணாடிப் பெட்டிக்குள் அவரைப் பார்த்தபோதும் அப்படித்தான் இருந்தார். உறங்குவது போலத்தான் இருந்ததே தவிர, அந்த உடலிலிருந்து ஜீவன் பிரிந்து விட்டது என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மிகவும் சிரமப்பட்டது. அவரைப் பார்த்து நான் கதறி அழுதேன் என்று சொன்னால் அது பச்சைப் பொய். பழகிப் பேசிய நாட்களும், அவரின் அன்பான புன்னகை முகமும் நினைவில் நிழலாட, அப்போதைய கோலத்தைக் கண்டதும், கண்கள் தளும்பி, இரு சொட்டு நீர் வழிந்தது என்பதே உண்மை. அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தி விட்டு வந்து சில வருடங்கள் கழித்து இதை நினைவுகூர்ந்து ‘டைப்’பும் போதும்கூடக் கண்கள் பனிக்கிறது எனக்கு என்பது நிஜமான நிஜம். மனதிற்கினிய அந்தத் தோழியின் புகழ் வாழி!

                                                                                       -தொடர்கிறேன்...

Saturday, August 11, 2012

மொறு மொறு மிக்ஸர் - 9

Posted by பால கணேஷ் Saturday, August 11, 2012

முதல்ல கொஞ்சம் யோசிங்க...!

ராணுவ முகாமில் மில்கா சிங்குக்கு காவல் வேலை தரப்பட்டிருந்தது. சிங் கொஞ்சம் தூக்கப் பிரியர். மத்தியான நேரத்தில் ஒரு நாள் நன்றாக அசந்து விட்டார். அப்போது ஒரு சூப்பர் கனவு வந்தது. மில்காசிங் அயல்நாடு ஒன்றில் உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். வீர சாகசத்துடன் அயல்நாட்டு மண்ணில் ஒளிந்து மாறவேடம் போட்டு பல ரகசியங்களைத் தெரிந்து கொண்டு விட்டார். ஆனால் வெண்ணெய் திரளும் போது எதிரிகளிடம் பிடிபட்டு விட்டார். எதிரி ராணுவ கோர்ட் அவரை விசாரித்து மரண தண்டனை வழங்கி விட்டது. சிங்கைச் சுட்டுத் தள்ள துப்பாக்கி ஏந்திய நாலு வீரர்கள் தயாராக நின்று குறி பார்க்கிறார்கள். கவுண்ட் டவுன் நடக்கிறது.

சிங் இந்த மாதிரி கனவு ‌கண்டு கொண்டிருக்கும்போது முகாமின் தளபதி அந்தப் பக்கமாக வந்தார். வந்தவர் சிங் செளகரியமாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் கடுங்கோபம் கொண்டு அருகிலிருந்த வேலியில் தன் கைப் பிரம்பால் தடதடவென்று தட்டினார்- இதுதான் காவல் காக்கிற லட்சணமா என்று. அந்தச் சத்தம் தன்னைச் சுடத் தயாரான துப்பாக்கிகளிலிருந்து தோட்டா வெளிப்பட்ட சத்தம் என்று மில்கா சிங் அதிர்ந்து போய், அந்த அதிர்ச்சியிலேயே இதயம் நின்று இறந்து விட்டார்.

-கதையப் படிச்சாச்சா? இந்தக் கதையில் ஓர் அபத்தம் ஒளிந்துள்ளது. அது என்னவென்று சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள், பார்க்கலாம்!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

அடுத்து ஆன்மீகக் கரையில கொஞ்சம் ஒதுங்கலாமே...!

ரம்பமும் முடிவும் இல்லாத துன்பத்தை நீ உன் பழைய பிறவிகளில் அனுபவித்திருக்கிறாய். அந்தத் துன்பங்கள் கடலுக்குச் சமமானது. அவ்வளவு பெரிய துன்பத்தில் பிரியமானவர்கள் இறந்து விட்டால் அந்தத் துன்பம் கடலிலள்ள ஒரு துளி நீருக்குச் சமம். மரணம் சத்தியமானது; பிறவியும் அப்படியே! மனதைத் திடப்படுத்திக் கொண்டு யோகமார்க்கத்தில் ஈடுபடு! வாழ்வு நிலையற்றது என்று அடிக்கடி எண்ணு! -இப்படி போதித்தவர் புத்தர் பெருமான்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

இப்ப... கொஞ்சம் ஹி... ஹி...ங்க...!

‘‘டேய்,.. என்னடா அப்படிக் கப்பல் கவுந்துட்ட மாதிரி சோகமா உக்காந்துட்டே? வாடா பீச்சுக்குப் போயிட்டு வரலாம்’’ என்றார் நண்பர்.

‘‘அடப்போடா... ஏகப்பட்ட கடன்ல மாட்டிட்டு முழிச்சுட்டிருக்கேன்.எனக்கிருக்கும் கவலைக்கு பீச் ஒண்ணுதான் குறைச்சல்’’ என்றேன் சோகமாக

‘‘அப்படியென்னடா கவலைகள் .உனக்கு இருக்கு? அதைச் சொல்லு... கவலைகள் குறைய நான் வழி சொல்றேன்...!’’

‘‘ஒண்ணா, ரெண்டா சொல்வதற்கு? டூ வீலர் வாங்கின வகையில கட்ட வேண்டிய கடன் அஞ்சாயிரம் இருக்குடா....’’

‘‘சரி...!’’

‘‘தங்கச்சி கல்யாணத்துக்காக வாங்கின முப்பதாயிரம் ரூபாய்ல இன்னும் பத்தாயிரம் கொடுக்க வேண்டியிருக்குடா...’’

‘‘சரி...!’’

‘‘இன்சூரன்ஸ் ட்யூ கட்டறதுக்கு ரெண்டாயிரம் ரூபாய் வேணும்...’’

‘‘அவ்வளவு தானே...?’’

‘‘என்னடா அவ்வளவு தானே? இவ்வளவு கடன் தொல்லைகள் போறாதா? எல்லாத்தையும் சொன்னா கவலைகள் குறைய வழி சொல்றேன்னு சொன்னியே... சொல்லுடா... என்ன பண்ணனும்?’’

‘‘இப்ப நீ சொன்ன கடன்களையெல்லாம் மொத்தமாக் கூட்டி எவ்வளவு தொகை வருதுன்னு சொல்லு எனக்கு...’’

மனக்கணக்காகக் கூட்டிச் சொன்னேன். ‘‘டேய், பதினேழாயிரம் ரூபாய் வருதுடா...’’

‘‘இப்ப உன்கிட்ட மொத்தமா பதினேழாயிரம் ரூபாய் இருந்தா உன் கடன் எல்லாம் தீர்ந்துடும் தானே...?’’

‘‘ஆமாம்டா...’’

‘‘‘பைத்தியக்காரா.... இதுக்காடா ஏகப்பட்ட கடன்னு சொல்லி மனசைப் போட்டுக் குழப்பிட்டிருக்கே? எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து பதினேழாயிரம் ரூபாய் வேணும்னு ஒரே கவலையாப் பட வேண்டியதுதானேடா...! ‌கவலைகள் குறைஞ்சு இப்ப ஒரு கவலை ஆயிடுச்சா இல்லையா...! நான் வரட்டா...’’

‘‘அவ்வ்வவ்வ்வ்வ!’’

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

அடுத்ததா கொஞ்சம் பொது அறிவைக் கூட்டிக்கங்க...!

புகையி‌லையின் பயன்பாடு இன்று மிக அதிகமாகி விட்டது. அது ஒரு உயிர்க்கொல்லி என்பதை நன்கு அறிந்தும்கூட பலர் பயன்படுத்தி வருகின்றனர். புகையிலைச் செடியி்ன் தோற்றுவாய் அமெரிக்காதான். அந்த நாட்டுச் சிவப்பிந்தியர்கள் அதை மந்திர மூலிகையாகப் பயன்படுத்தி வந்தனர். 1492ல் கொலம்பஸ் அமெரிக்காவில் புகையிலையைக் கண்டுபிடித்தார். 1502ல் ஸ்பெயினுக்கு அந்தச் செடி கொண்டு வரப்பட்டது. மெல்ல மெல்ல அதன் உபயோகம் ஐரோப்பாவில் பரவிற்று. 1508ல் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்குப் புகையிலை, உருளைக்கிழங்கு, தக்காளி இவைகளைக் கொண்டு வந்து பயிர் செய்ய ஆரம்பித்தனர். அப்படித் துவங்கியது இன்று பல லட்சக்கணக்கான ஏக்கர்களில் புகையிலை இந்தியாவில் பயிரிடப்படுகிறது. ஆடம்பரப் பொருளாக ஆரம்பித்த புகையிலையின் உபயோகம் இன்று ஆளைக் கொல்லும் நச்சுப் பொருளாக உருவாகி விட்டது!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

ரைட்டு, இப்ப ஒரு வினோதத்தை தெரிஞ்சுக்கங்க...!

மெரிக்காவில் டெஸ்மாயின் என்ற ஊரில் மாவட்ட நீதிபதி தியோடர் மில்லர் அவரது நீதிமன்ற அறைக்கு வெளியே காத்திருந்தார். அறை பூட்டப்பட்டிருந்தது சாவியைக் காணோம். காவலாட்கள் வந்து என்னென்னமோ செய்து பார்த்தார்கள். பூட்டைத் திறக்க முடியவில்லை. நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்தவர்களில் அன்றைக்கு வழக்கு நடத்த வேண்டிய வக்கீலும் ஒருவர். அவர் நீதிபதியைப் பணிவுடன் அணுகி, ‘‘தாங்கள் அனுமதித்தால் என் கட்சிக்காரர் வில்சன் பூட்டைத் திறந்து தருகிறேன் என்கிறார்’’ என்றார்.

நீதிபதியும் அனுமதி தரவே, ஒரு சாதாரண பேப்பர் க்ளிப்பைக் கொண்டு மூன்றே நிமிடத்தில் பூட்டைத் திறந்து விட்டார் வில்சன். நீதிபதி அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே சென்று தம் ஆசனத்தில் அமர்ந்து வில்சனின் வழக்கில் தீர்ப்பளித்தார். பத்தாண்டுகள் சிறைவாசம்! வில்சனின் மீதிருந்த வழக்கு: ஒரு லாண்டரியில் பூட்டை உடைத்துத் திருடினாரென்பது!

                                                                          -1985 ‘நியூஸ்வீக்’ இதழிலிருந்து

.=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

ஆச்சா...? இப்ப சில அரிய யோசனைகள்...!

ங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி வளரணும்னு நினைக்கறீங்களா...? ரொம்ப ஸிம்பிளான வழி இதோ: உங்கள் மனைவி அல்லது சகோதரியின் தங்கச் சங்கிலியை கையில் வாங்குங்கள். அது நகை. அதை வாயில் வைத்துச் சப்புங்கள். அதன் சுவையை அனுபவியுங்கள்... இதுதான் நகைச்சுவை! ஹி... ஹி...! என்ன முறைக்கறீங்க...? சரி, சரி... இப்ப நீங்க ஜாலியாக இருக்கறதுக்கான வழியச் சொல்றேன். இது இன்னும் ஸிம்பிள்ங்க. நேராப் போய் கெஸட்டுல உங்க பேரை ‘ஜாலி’ன்னு ரிஜிஸ்டர் பண்ணிடுங்க. இப்ப எல்லாரும் உங்களை ‘ஜாலி’ன்னுதானே கூப்பிடுவாங்க. நீங்களும் ஜாலியா இருப்பீங்கல்ல...! ஹய்யோ... ஒரு கூட்டமே கெளம்பிடுச்சு போலருக்கே... மீ எஸ்கேப்!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

சீரியஸா ஒரு மேட்டரோட முடிச்சுப்பமா..?

செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2011ல் நான் பதிவு எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கி இரண்டு மாதங்களின் பின் எனக்கு பதிவு எழுதக் கற்றுத் தந்த என் நண்பரான சீனியர் பதிவரைச் சந்தித்தபோது, ‘‘பெரிய ப்ளாகர்ஸ்லாம் உங்களைப் படிக்கறாங்க. கமெண்ட்ஸ்ல பாத்தேன். அதனால நீங்க நல்லா எழுதணும்...’’ என்று அட்வைஸினார். ‘‘நான் நல்லா எழுதறேனான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? ஸிம்பிளான வழி சொல்லுங்க’’ என்று கேட்டேன். ‘‘ஸிம்பிளாவா? நீங்க எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகறப்ப உங்களைப் பின்தொடர்றவங்க எண்ணிக்கை 200ஆ இருக்கணும். அப்புறம்... தமிழ்மணம்னு எல்லாரும் மதிக்கற ஒரு திரட்டி இருக்கு. அதோட ரேங்கிங்ல முதல் அம்பதுக்குள்ள உங்க ப்ளாக் இருக்கணும்,’’ என்றார்.

அதுமுதல் நான் எப்போதும் போல எழுதி வந்தாலும் இந்த இரண்டும் ஓராண்டுக்குள் நடக்குமா என்று ஒரு சிறு பையனின் ஆர்வத்துடன் அவ்வப்போது கவனித்து வந்தேன். இப்போது... முதல் வருடப் பிறப்பிற்கு இன்னும்  30 நாட்கள் இருக்கும் நிலையில் என்னைப் பின்தொடரும் நண்பர்கள் 200க்கும் மேல், முதல் 50க்குள் வந்தால் பெரிதென்பதற்குப் பதிலாக 5வது இடத்திலேயே இருக்கிறேன். இதெல்லாம் உங்கள் அனைவரின் அன்பினாலும் ஆதரவினாலும் தான் சாத்தியமாயிற்று. எத்தனை உறவுகள், எத்தனை நட்புகள் கிடைத்திருக்கின்றன என்னை அரவணைக்க! உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து கரங்கூப்பிய என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

Thursday, August 9, 2012

அன்புக்குரிய நண்பர்களே...

பதிவர் திருவிழாவுக்கான முழுமை பெற்ற அழைப்பிழ் இது. அனைத்துப் பதிவர்களும் நமக்கான இந்தத் திருவிழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.


Wednesday, August 8, 2012

‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றத்ம் இருப்பதாக அழைத்ததால் வந்திருந்தேன். பஃபே விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் விதி: முன்னோர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே செய்ய வேண்டியது. அதன்படி பார்க்காத மாதிரி பார்த்து வைத்துக் கொண்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டேன்.

முதல் பாத்திரத்தில் மஞ்சள் நிறத்தில் ரசமலாய் மிதந்து கொண்டிருந்தது. ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்ற பெரியவர்கள் சொல்லியிருந்த போதிலும் எந்தச் சர்க்கரை வியாதிக்காரனுக்கும் இனிப்பு ஆசை மட்டும் விடுவதில்லை. வசதியான கரண்டியால் லாகவமாக எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டேன். அடுத்து பொங்கல் (ரவா உப்புமாவாகவும் இருக்கலாம்) அதில் முக்கால் கரண்டி. பிறகு அழகிய, சிவப்பான இளம் வடைகள்- வடை சைஸில் பெரிதாகவே இருந்தது. அடுத்த பாத்திரம் இட்லி. அதன் பிறகு பளபளவென்ற ஜொலிப்புடன் மடித்து வைக்கப்பட்டிருந்த தோசை- அதில் ஒன்றையும் பக்கத்திலேயே தொட்டுக் கொள்ள வைத்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவில் அரைக் கரண்டியும் போட்டுக் கொண்டேன்.

இனி, பத்திரமாக ஒரு மேஜையை அடைய வேண்டியதுதான் என்று தீர்மானித்த போதுதான் அதிர்ச்சி. உட்கார்ந்து சாப்பிடுவதற்கான மேஜை எதுவும் காணோம். என்னைத் தவிர மற்ற எல்லோரும் அனுபவஸ்தர்கள். பஃபேக்கு பழக்கப்பட்ட புத்திசாலிகள். தட்டை லாகவமாகப் பிடித்துக் கொண்டு ஸ்பூனையோ, விரலையோ உபயோகித்து ருசித்துக் ‌கொண்டிருந்தார். ஜாடியில் கைவிட்ட குரங்கு மாதிரி நான்தான் அத்தனை ஐட்டங்களையும் சின்னத் தட்டில் வைத்துக் கொண்டு முழித்தேனே தவிர, அவர்கள் முதலில் ரஸமலாய் சாப்பிட வேண்டியது; அதன்பின் பொங்கல்; அதன் பின்னர் வடை -இப்படி அவ்வப்போது விழுங்கிக் கொண்டிருந்தார்கள். (கணக்குப் பார்த்தால் நான் எடுத்துக் கொண்டதை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கூட இருக்கும்.)

‘‘என்ன, செளக்கியமா?’’ என்று முதுகுப் பக்கமாய் யாரோ விசாரித்தார்கள். ‘‘ஓ, நீங்க எப்படி இருக்கீங்க?’’ என்றபடி திரும்பினேன். தட்டின் அபாயமான முனையில் ரிஸ்க்கான விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த சாம்பார் சற்றே வெளியுலகத்தைப் பார்க்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது. ஒரு குண்டு அம்மையாரின் காஞ்சிபுரத்தில் ஒர துளி பட்டதோ- அல்லது பட்டதாக அவர் நினைத்துக் கொண்டாரோ- ஒரு முறைப்பு முறைத்தார். ‘‘ஹி.... ஹி...’’ என்றேன். (தர்மசங்கடமான கட்டங்களி்ல கைகொடுக்கும் வடமொழி தமிழ்ச் சொல். கண்டுபிடித்தவர்: எஸ்.ஏ.பி.)

அந்தக் கணத்தில்தான் எப்படிப்பட்ட பயங்கரமான போர்க்களத்தின் நட்டநடுவே நான் இருக்கிறேன் என்று புரிந்தது. கூட்டம் எக்கச்சக்கமாய் உள்ளது. எல்லோருமே தீனிப் பண்டாரங்கள். எல்லாத் தட்டுகளிலும் வழிய வழியச் சாம்பார், சட்டினி. ஆரம்பத்தில் நான் கண்ட நாசூக்குக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. பேச்சும் வேகம்; அசைவுகளும் வேகம். ‘‘ஆயிரம் சொல்லுங்க... டோனி செய்தது மடத்தனம்தான்’’ என்று அடித்துப் பேசினார் ஒருவர். எனக்கும் அவருக்கும் சில அங்குலமே இடைவெளி. வேறொருத்தர், ‘‘அவளைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு’’ என்று சொல்லி நெற்றியில் படீரென்று அடித்துக் ‌கொண்டார். ஒரு கறுப்புக் கண்ணாடிப் பெண், ‘‘ஈஸி இன்ஸ்டால்மெண்ட்’’ என்று தன் கையை நீட்டி வளையலை இன்னொரு பெண்ணிடம் காட்டிக் கொண்டிருந்தார்.

நின்று கொண்டே, தட்டில் இருப்பதைத் தின்று கொண்டே, மறு கையையும் ஆட்டியபடி பேச சிலரால் எப்படி முடிகிறது என்ற வியப்புடன் நான் சாப்பிடவும் முடியாமல், கையை நீட்டவும் முடியாமல், தட்டைப் பிடித்துக் கொள்ளவும் முடியாமல் கோமாளி மாதிரி தடுமாறினேன். ஒன்றுமில்லாததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் தமிழர்கள் என்ற அவப்பெயர் உண்டு. ஆனால் அத்தனை உணர்ச்சி வசப்படுகிறவர்களும் இங்கே குழுமியிருந்ததுதான் ஆச்சரியம்! எனக்கு இன்விடேஷன் கொடுத்த செல்வராமன் கண்ணில் பட்டிருந்தால் நானும் உணர்ச்சிவசப்பட்டிருப்பேன். படவில்லை. இவ்வளவு அமளிகளுக்கு நடுவே ஒரு சர்வர் நீள அகலமான பெரிய ட்ரேயில் இரண்டு குடம் சாம்பாரை நிரப்பிக் கொண்டு வேகமாக நீந்தி என்னைக் கடந்து சென்றார். எனக்குக் குலை நடுங்கியது.

கொஞ்சம் சாம்பாரோ, இட்லி விள்ளலோ மேலே விழுந்துவிட்டால்தான் என்ன, அதற்கு இப்படி அலட்டிக் கொள்ள வேண்டுமா என நீங்கள் நினைப்பது புரிகிறது. காரணம் என்னவெனில் இந்த மாதிரி விசேஷ வைபவங்களுக்குப் போவதற்காகவே நான் வைத்திருந்த தும்பைப் பூ வெள்ளை கதர் வேட்டியும் கதர் சட்டையும் அன்றைக்கு அணிந்து கொண்டிருந்தேன். துளி கறை பட்டாலும் அக்கிரமப் பளிச்செனத் தெரியும்; ஒரு ட்ரே சாம்பார் கொட்டினால்..?

அங்கிருந்து நகர்ந்து தளத்துக்கு வரும் மாடிப்படியின் கைப்பிடி ரெய்ல்ஸில் சாய்ந்தாற்போல் நான் நின்றிருந்தேன். இறங்கிச் செல்வோரும், ஏறி வருவோரும் என் முதுகைச் செல்லமாய் உரசிக் கொண்டே போனார்கள் அல்லது வந்தார்கள். ‘‘சீச்சீ1 அங்கே போய் வாங்கித் தர்றேன். அங்கிள் வச்சிருக்கிறதை எடுக்கக் கூடாது’’ என்று ஒரு தாயின் குரல் கேட்டது. பார்த்தால் அவள் தோளிலிருந்த இரண்டு வயதுக் குழந்தை என் தட்டை- தட்டில் இருந்த எதையோ எட்டிப் பிடிக்க, தட்டிப் பறிக்க- முயன்று கொண்டிருந்தது. தாய் அதன் கையை மடக்கி மடக்கி அடக்கிக் கொண்டிருந்தாள். முள்ளின் மீது துணி விழுந்தாலும் துணியின் மீது முள் விழுந்தாலும் துணிக்குத்தான் ஆபத்து என்று ஏதோ ஒரு பழைய சினிமாவில் கேட்ட வசனம் ஞாபகத்துக்கு வந்தது. குழந்தைக்கும் தாய்க்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெற்றி பெற்றாலும் என் வேட்டி சட்டைக்குத்தான் அபாயம் என்பதை உணர்ந்தபோது என் கை மேலும் அதிகமாக நடுங்கியது. காலில் எதுவோ தட்டுப்பட, கீழே பார்த்தேன். சாப்பிட்ட தட்டுகளைப் போடுவதற்காக நீல நிறத்தில் பெரிய பிளாஸ்டிக் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. தட்டை அதில் வைத்தேன். கடவுளுக்கு நன்றி சொன்னேன். நடையைக் கட்டினேன்.

யிற்றெரிச்சலான பின்கதை ஒன்று இதற்கு உண்டு. அடு்த்த வாரத்தில் ஒரு நாள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் செல்வராமனைப் பார்க்க நேரிட்டது. ‘‘சுஜியின் டான்ஸ் புரோகிராம் எப்படியிருந்தது?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அருமையாயிருந்தது. ஆனால் எனக்குத்தான் டயமில்லை. மாமனாரை ரயிலேற்றிவிட வேண்டியிருந்ததால் சும்மா அஞ்சு நிமிஷம் இருந்துவிட்டு புறப்பட்டு விட்டேன்’’ என்றேன். ‘‘நீங்க வந்ததே பெரிய சந்தோஷம்! டிபன் சாப்பிட்டேளோல்லியோ?’’ என்றார். ‘‘சாப்பிட்டேனே...’’ என்றவன் அதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். ‘‘பஃபேயானதால சாப்பிடச் சிரமப்பட்டு விட்டேன்’’ என்று சொல்லி விட்டேன். ‘‘பஃபேயா? டைனிங் டேபிள் போட்டு, வந்தவர்களை உட்கார்த்தி வைத்து சர்வர்கள் பரிமாறும்படியான்னா ஏற்பாடு பண்ணினேன் ஸ்வாமி? போளி, பாதாம்கீர், ஸமோஸா’’ என்றவர் என் முகத்தைப் பார்த்து, ‘‘நீங்க பாலாம்பிகா ஹாலுக்குத்தானே வந்தேள்?’’ என்றார்.

‘‘ஆமாம்’’ என்றேன்.

‘‘எந்த ஃப்ளோர்?’’

‘‘இரண்டாவது ஃப்ளோர்!’’

‘‘அட ராமா! எங்காத்து ஃபங்ஷன் மூணாவது ஃப்ளோர்லன்னா நடந்தது? ரெண்டாவது ஃப்ளோர்ல ஒரு...’’

நான் மடையன்தான். ஆனால் செல்வராமன் சொல்லும் மீதியையும் கேட்டுக் கொண்டு நிற்கும் அளவுக்கு அல்ல.

                                                           -‘அம்பலம்’ மின்னிதழில் இக்கட்டுரையை
                                                              எழுதியவர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube