Saturday, June 30, 2012

சரிதாவும், வால்களும்!

Posted by பால கணேஷ் Saturday, June 30, 2012

ஷாப்பிங் மாலில் சரிதாவும் நானும் தேவையானவற்றை எடுத்துக் கூடையில் போட்டபடி நகர்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிரே உற்பத்தியானான் அவன். ‘‘நீங்க... கணேஷ் தானே?’’ என்றான். தலையசைத்தேன்.

‘‘என்னைத் தெரியுதா?’’

‘‘நான் கண்ணாடி போட்டிருக்கறதால சரியாப் பாக்க முடியாதுன்னு நினைச்சுட்டிங்களா? ப்ளூ கலர் ஷர்ட் போட்டிருக்கீங்க. ப்ரவுன் கலர் பேண்ட் போட்டிருக்கீங்க. நல்லாவே தெரியுது உங்களை...’’

நோகாமல் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, அதில்லை நான் கேட்டது. என்னை யாருன்னு உனக்கு அடையாளம தெரியுதா?’’

‘‘எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு... ஆனா சட்னு நினைவுக்கு வரலை. ஏதாவது க்ளூ கொடேன்...’’

‘‘தே ப்ரித்தோ ஸ்கூல்ல உன்னோட படிச்சவன் நான்...’’

கூர்ந்து கவனித்தேன். அலைபாயும் தலைமுடியும், கூரான நாசியும், துறுதுறு கண்களும்... ஆஹா! நினைவு வந்துவிட்டது. ‘‘டேய், நீயாடா? மறக்க முடியுமா உன்னை? ஸ்கூல் டேஸ்ல ரெண்டு பேரும் சேர்ந்து கொஞ்சநஞ்ச லூட்டியாடா அடிச்சிருக்கோம். ஆமா, உன் பேர் என்ன?’’ என்றேன்.

இம்முறை வலிக்கிற மாதிரியே தலையிலடித்துக் கொண்டான். ‘‘சிவநாத்டா! சிவான்னு கூபபிடுவியே...’’ என்றான். ‘‘ஸாரிடா சிவா. சில விஷயங்கள் மட்டும் மறந்து போகுது. நல்லாயிருக்கியா? எங்க இருக்‌க இப்ப?’’

‘‘மயிலாப்பூர்லடா...’’ என்றான்.

‘‘அடப்பாவி! நான் மாம்பலத்துல இருக்கேன்டா. ஒரே ஊர்ல பக்கத்துல இருந்தும் தெரியாமப் போய்டுச்சே. மயிலாப்பூர்ல நீ எங்க இருக்க?’’ என்று‌ கேட்டேன்.

‘‘நடுத்தெருவுலடா...’’

‘‘சின்ன வயசுலயே உங்கப்பா கொடுக்கற பாக்கெட் மணியையெல்லாம் செலவு பண்ணித் தீத்துடுவ. நீ ஒருநாள் நடுத்தெருவுலதான் நிப்பேன்னு அப்பவே எனக்குத் தெரியும்டா...’’

‘‘அடேய் பாதகா! நான் குடியிருக்கற வீடு இருக்கற தெருவுக்குப் பேர் நடுத்தெருடா.’’ என்றான் கோபமாக. சரிதா குபுக்கென்று சிரித்துவிட, நான் அவளை முறைத்தேன். நாங்கள் பரஸ்பரம் நலம் விசாரிப்புகள், விசிட்டிங் கார்டுகளைப் பரிமாறிக் கொண்டபின் நான் சொன்னேன்: ‘‘டேய், வர்ற ஞாயித்துக்கிழமை மனைவிகள், குழந்தையக் கூட்டி்கிட்டு... ஸாரி, மனைவி, குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு சாப்பிட வந்துடு’’ என்றேன்.

‘‘வார்த்தைய மாத்திப் பேசற வழக்கம் இன்னும் உன்னைவிட்டுப் ‌போகலையா? சரி, வந்துடறேன்’’ என்று புன்னகைத்துவிட்டுச் சென்றான் சிவா.

ஞாயிற்றுக்கிழமை மனைவி யசோதாவுடனும், மூன்று குழந்தைகளுடனும் வந்தான் சிவா. அமைதியான முகத்துடன் புன்னகைத்த அவன் குழந்தைகளைப் பார்த்து பரம சாதுக்கள் என்று நான் நினைத்தது எவ்வளவு தவறு என்பது சற்று நேரத்தில் புரிந்து விட்டது. பரம வானரங்கள் அவை!

சிவாவை ரொம்ப நாள் கழித்து சந்தித்ததில் நாங்கள் ஹாலில் உட்கார்ந்து பழைய கதை பேசிக் கொண்டிருந்தோம். சமையலறையில் சிவாவின் மனைவியுடன் சமையலில் ஈடுபட்டிருந்த சரிதா, சமையல் மேடைக்கு கீழேயிருந்த எண்ணைத் தூக்கை எடுப்பதற்காகக் குனிய, அதைக் கண்டதும் வேகமாக ஓடிவந்த சிவாவின் மூத்த பெண் அவள் மேல் கை வைத்து பச்சைக் குதிரை தாண்டியது.

அந்த வேகத்தில் சரிதா கவிழ்ந்து உருண்டுவிட, அவள் மேல் பாத்திரங்கள் டமடமவென உருள, எண்ணை தூக்கிலிருந்து கொட்ட... சமையலறையிலிருந்து வந்த களேபரமான சத்தத்தைக் கேட்டு தன் வாரிசுகளில் ஒன்றின் கைங்கரியமாயிருக்கும் என்றபடி ஓடிய சிவா, எண்ணெயில் கால் வைத்து ராபணாவென்று மல்லாந்து விழுந்து வைத்தான் பின்னந்தலை ‘ணங்’கென்று தரையில் மோதியது. நான் பதறி, அவனை கை பிடித்துத் தூக்கி நான் சோபாவில் உட்கார வைக்க, சோபா உறையெல்லாம் பாழ், எண்ணைக் கறை!

மல்லாக்க விழுந்து தலையில் அடிபட்ட தாக்கத்தில் அவன் இ.தி.கு.‌ போல விழித்தபடி இருக்க, ஹாலுக்குள் நுழைந்த சரிதா, ‘குறைவு குறைவு’ என்று (அதாங்க... லோ லோன்னு) அலறினாள். திரும்பிப் பார்த்தேன். சிவாவின் இரண்டாவது வாரிசு என் டேபிளில் இருந்த பென் ஸ்டாண்டில் இருந்து எடுத்த மார்க்கர் பேனாவை வைத்து சுவரில் சித்திரம் வரைந்து பழகிக் கொண்டிருந்தது. ஒரு பக்கச் சுவரில் பாதியளவில் மாடர்ன் ஆர்ட் மங்காத்தாவாக மாறி கிறுக்கித் தள்ளியிருந்தது.

வேகமாக சமையலறையிலிருந்து வந்த யசோதா அதன் முதுகில் ஒன்று வைத்து, மார்க்கர் பேனாவைப் பிடுங்கி வைத்தாள். ‘‘சின்னவன் எங்கடி காணோம்?’’ என்று முனகினான் சிவா ஈனஸ்வரத்தில். அனுபவ தோஷத்தால் யசோதா நேராக ஃப்ரிட்ஜின் அருகில் சென்று, பாதி திறந்திருந்த அதன் கதவை முழுவதுமாகத் திறந்தாள். யசோதா பெற்ற மூன்றாவது தவப்புதல்வன் உள்ளே சரிதா வைத்திருந்த கேக், சாக்லெட், தயிர் வகையறாக்களை வாயில் அடக்கி மென்று கொண்டு சாக்ஷாத் கண்ணன் போல சிரித்தான். சரிதாவின் கண்களில் தெரிந்த அனலுக்கு, பாத்திரத்தை அவள் முகத்தில் வைத்திருந்தால் சமையலே பண்ணியிருக்கலாம்.

ஒரு இடத்தில் நிற்காத அந்தக் குழந்தைகளை ஒரு வழியாக கண்ட்ரோல் செய்து சிவாவையும் யசோதாவையும் சாப்பிட வைத்து வழியனுப்பினேன். அவன் காரைக் கிளப்பிச் சென்றதும், உள்ளே வரத் திரும்பிய என்னை மாடிப்படி வளைவில் சோளக்கொல்லை பொம்மை போல கைகளைப் பரப்பி நின்று மறித்தார் வீட்டுச் சொந்தக்காரர்.

‘‘என்ன சார், டிராஃபிக் கான்ஸ்டபிள் மாதிரி போஸ் கொடுக்கறீங்க..? வழியை விடுங்க’’ என்றேன்.

‘‘இந்தாப்பா... வர்ற மாசம் அட்வான்ஸைக் கொடுத்துடறேன். நீ வேற வீடு பாத்துக்கோ...’’ என்றார்.

‘‘ஏன் ஸார்...? வாடகைல்லாம் ஒழுங்காக் குடுத்துடறேனே...’’

‘‘அதெல்லாம் சரிதான். நீ குடிவரும்போது என்ன சொன்னே...? ஒரு புருஷன் பொண்டாட்டி மட்டும்தான்னு தானே சொன்னே?’’

‘‘இப்ப மட்டும் என்ன மூணு பொண்டாட்டியா வெச்சிருக்கேன்? ஒண்ணையே சமாளிக்க முடியலையே’’ என்றேன் கோபம் பாதியும், பரிதாபம் பாதியுமாக.

‘‘அசிங்கமாப் பேசாதய்யா... ஞாயித்துக்கிழமை ஒரு நாள் மனுஷன் நிம்மதியா வீட்ல இருக்க விடறீங்களா? உன் வீட்லருந்து ஒரே கூசசல், குழப்பம். என்னன்னு ‌போய்ப் பாத்தா... வீடெல்லாம் கன்னாபின்னான்னு கிறுக்கல். யுத்தகளம் போல வீடே கன்னாபின்னான்னு இருக்கு. நீ முதல்ல வேற வீடு பாரு...’’

அவரைச் சமாதானப்படுத்திவிட்டு வருவதற்குள் விழி பிதுங்கி விட்டது எனக்கு. வீட்டினுள் வந்து பார்த்தபோது... புயல் கடந்த பூமி போல இருந்தது. ‌தலையில் கை வைத்துக் கொண்டு வீட்டின் நடுவில் உட்கார்ந்திருந்தாள் சரிதா. ஐயோ பாவம்... எந்தப் பொருளும் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு வீடு நீட்டாக இருக்க வேண்டும் அவளுக்கு. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் என்னையே (வழக்கம்போல) சரமாரியாகத் திட்டுவாள்.

 ‘‘ஹப்பா... இனிமே யாரையாவது வீட்டுக்கு இன்வைட் பண்ணினா, குழந்தைங்களைப் பத்தி விசாரிச்சுட்டுத்தான் இன்வைட் பண்ணனும் போல...’’ என்று நான் சொன்ன அதே நேரம், அவளின் மொபைல் மெஸேஜ் வந்ததற்கு அடையாளமாய், ‘கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்கய்யா...’ என்று வடிவேலுவின் குரலில் அலறியது. மொபைலின் இன்பாக்ஸைத் திறந்து எஸ்.எம்.எஸ்ஸைப் படித்தவள் சொத்தைக் கடலையை மென்று விட்டவள் போல முகத்தைச் சுளித்தாள். திருதிருவென்று விழித்தாள்.

‘‘என்னாச்சு சரி? ஏன் அப்படி ‘‌ஙே’ன்னு முழிக்கிறே?’’

‘‘உங்கண்ணன் நாளைக்கு அவர் குழந்தைகளோட வரப்போறதா மெஸேஜ் குடுத்திருக்கார்... உங்கண்ணன் பசங்க ரெண்டும் சரியான ரெட்டை வாலாச்சே...’’

‘‘அதுக்கென்ன பண்ணச்‌ சொல்ற இப்ப...?’’

‘‘நிப்பாட்டணும். எல்லாத்தையும் நிப்பாட்டணும்’’ என்றாள். (நேற்று டிவியில் ‘தளபதி’ பார்த்த பாதிப்பு)

‘‘எங்கண்ணன் எதுக்கு எனக்கு போன் பண்ணாம உனக்கு மெ‌ஸேஜ் கொடுக்கறார்..?’’ என்றபடி அவள் மொபைலை வாங்கிப் பார்த்த நான் குபீரென்று சிரி்த்து விட்டேன்.

‘‘ஏன் சிரிக்கறீங்க?’’

‘‘கண் செக்கப் பண்ணி கண்ணாடி போடணும் உனக்குன்னு சொன்னா கேக்கறியா? மெஸேஜ் குடுத்திருக்கறது எங்கண்ணன் பாரதி இல்லடி. உங்கண்ணன் சாரதி. வரவேண்டாம்னு போன் பண்ணிச் சொல்லி நிப்பாட்டிரலாமா?’’ என்றேன்.

‘‘எங்கண்ணன் எப்பவோ ஒரு தரம் வர்றார். அது உங்களுக்குப் பொறுக்கலியா? அவரோட நாலு குழந்தேளையம் கூட்டிட்டு ஊரைச் சுத்திக் காட்டிட்டுத்தான் அனுப்பணும்’’ என்றாள்.

‘‘சரியாச் சொன்னே... அதுங்க குழந் தேளுங்கதான்! அதுங்கல்லாம் வாலில்லா ‘முன்னோர்கள்’ ஆச்சே! நாலு வாண்டுகளும் நாப்பது குழந்தைங்க பண்ற அட்டகாசத்தைப் பண்ணிடுமே.. இப்பவே வீட்டுக்காரரை தாஜா பண்றதுக்குள்ள ‌போறும் போறும்னு ஆயிடுச்சு. அந்த கும்பல் வேற வந்துச்சுன்னா... வேற வழியேயில்ல... நாம வேற வீடு பாக்க வேண்டியதுதான்!’’ என்றேன். ‘ஙே’ என்று விழிக்க ஆரம்பித்தாள் சரிதா.


Friday, June 29, 2012

நடை வண்டிகள் - 23

Posted by பால கணேஷ் Friday, June 29, 2012

கடுகு அவர்களும் நானும் - 1
கைச்சுவையாக நடிப்பதன் மூலம் சிரிப்பை வரவழைப்பதை விட பலமடங்கு கடினமானது நகைச்சுவையான எழுத்தின் மூலம் சிரிப்பை வரவழைப்பது. மனதை உருக்கி அழ வைக்கும்படி கதைகளை சற்று முயன்றால் எவரும் எழுதிவிட முடியும். நகைச்சுவையாக எழுதுவது அத்தனை சுலபமில்லை. (சிலபேர் நகைச்சுவையாக எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதியே நம்மை அழ வைத்து விடுகிறார்கள் என்பது வேறு விஷயம்). நகைச்சுவை எழுத்தில் ஒரு ஜித்தர் கடுகு என்கிற அகஸ்தியன் என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள்.

என்னுடைய பள்ளி நாட்களிலேயே அகஸ்தியனின் எழுத்து எனக்கு அறிமுகம் ஆனது. அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் எந்தப் பத்திரிகையும் வாங்குவது கிடையாது. விகடன், குமுதம், கல்கி போன்ற வார இதழ்கள் எதுவும் எனக்குத் தெரியாது. செய்தித்தாள்கள் மட்டுமே அறிந்திருந்தேன். என் அத்தையின் கணவர் தினமணி நாளிதழில் ‘நேரக்காப்பாளர்’ பணியில் இருந்தார். ஆகவே தினமணி வெளியிடும் தினமணி கதிர், சினிமா எக்ஸ்பிரஸ் ஆகிய புத்தகங்கள் Complimentary ஆக அவருக்கு வந்து விடும். அவற்றைப் படிபபதற்காகவே ஞாயிறு வந்தால் அத்தையின் வீட்டிற்கு ஓடுவேன்.

அப்போது தினமணி கதிர் இதழில் ‘பெரியசாமி ஒளிக்கதிர்’ என்கிற அவரின் சிறுகதை ஒன்று வெளியாகியிருந்ததைப் படித்தேன். பேராசிரியர் பெரியசாமி ஒரு லேசர் மிஷினைக் கண்டுபிடிப்பார். அந்த ஒளிக்கதிரைப் பாய்ச்சினால் ஒரு பொருளை டெம்பரரியாக மறைய வைக்கவும், மீண்டும் தோன்றச் செய்யவும் முடியும் என்பது அவர் கண்டுபிடிப்பு. அதை ஒரு காலேஜில் டெ‌மோ காட்டுவதற்காக ‌மேஜையில் இருக்கும் டீ கப்பின் மேல் லேசரைப் பாய்ச்சி அதை மறைய வைப்பார். பின் வேறொரு விசையை முடுக்கி லேசர் மூலம் அதை மீண்டும் வரவழைப்பார். இதே பரிசோதனையை ஒரு கல்லூரி மாணவன் மேல் அவர் பிரயோகிக்க, மாணவன் காணாமல் போய் விடுவான். ஆனால் மீண்டும் வரவழைக்காது மிஷின்.

பெரிய கலாட்டாவாகி, பெரியசாமியின் நண்பர் மயக்கமடைந்து மிஷினின் மேல் விழ, ஏதோ ஒரு பட்டன் முடுக்கப்பட்டு பையன் மீண்டும் வந்து விடுவான். அனைவரும் அந்த ஹாலை விட்டே ஓட, மிஷின் வெடித்து தன்னையே அழித்துக் கொண்டு விடும். இந்தக் கதையை வரிக்கு வரி நகைச்சுவை ததும்ப அவர் எழுதியிருந்தார். சத்தம் போட்டுச் சிரித்துப் படித்து மகிழ்ந்தேன். அதன்பின் வந்த வாரங்களில் பேராசிரியர் பெரியசாமியை வைத்து ‌தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார். (பேராசிரியர் பெரியசாமி கதைகள், சாமுவேல் சார் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்து ‘ரொட்டி ஒலி’ என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.)

அதன் பின்னர் நான் படித்த அகஸ்தியனின் எழுத்துக்களில் வந்த கமலாவும், தொச்சுவும், அங்கச்சியும் முழுமையாக என்னை ஆட்கொண்டு ரசித்துச் சிரிக்க வைத்தனர். கடுகு என்ற பெயரில் சின்னச் சின்ன துணுக்குச் செய்திகளும், சுவாரஸ்யமான கட்டுரைகளும் வெளியானதை படித்திருந்தேன் நான். அகஸ்தியன்தான் கடுகு என்பது மட்டும் அப்போது எனக்குத் தெரியாது. அப்போதைய தினமணி கதிரின் ஆசிரியர் சாவி ஸார் 128 பக்கங்களுக்கும் அதிகமாக கனமான மாத நாவல் ஒன்றும் தினமணியிலிருந்து வெளியிட்டு வந்தார். அந்த மாத இதழில் படித்த ‘மிண்ட்டா ரோடு’ மற்றும் ‘சொல்லடி சிவசக்தி’ ஆகிய அகஸ்தியனின் நாவல்கள் நினைவை விட்டு நீங்காகதவை.

மதுரையை விட்டுச் சென்றதும் இந்த படிப்புத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் கல்லூரி நாட்களில்தான் படிக்கும் பழக்கத்தை புதுப்பித்துக் ‌கொண்டேன். அச்சமயம் சாவி இதழிலும் மோனாவிலும் அகஸ்தியனை மீண்டும் படித்தேன். மோனா மாத இதழில் ‘கொல்லவல்லாயோ கிலியே’ என்ற தலைப்பில் ஒரு க்ரைம் கதை அவர் எழுதியிருந்தது என்னை விழி உயர்த்த வைத்தது. அவர் எழுதிய ‘அலைபாயுதே கண்ணா’ நாவல் என் ஆல்டைம் ஃபேவரைட்களில் ஒன்று.

பின்னாளில் வெளிவந்த பாரதிராஜா இயக்கிய ‘புதுமைப் பெண்’ படத்தின் கதை பல அம்சங்களில் இந்த நாவலை ஒத்திருந்தது. (நோ... நோ... பாரதிராஜா சுட்டு விட்டார் என்றெல்லாம் உடனே நினைத்துவிட வேண்டாம். கடுகு ஸாரே அப்படி நினைக்கவில்லை.) வியக்கத் தக்க பல ஒற்றுமைகள் இரண்டுக்கும் இருந்ததை ஒரு கடிதமாக பாரதிராஜாவுக்கு கடுகு ஸார் எழுத, அதற்கு அவர் தந்த பதிலையும் ‘பாரதிராஜாவும் நானும்’ என்ற தன் பதிவில் எழுதியிருக்கிறார் கடுகு அவர்கள்.

இப்படி என் பள்ளி நாட்களிலும், சற்றே இடைவெளிக்குப் பின் கல்லூரி நாட்களில் தொடங்கி இன்று வரை ரசித்துப் படிக்க வைக்கும் எழுத்துக்குச சொந்தக்காரரான கடுகு என்கிற அகஸ்தியனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று மட்டும் எனக்குத் தோன்றியதில்லை. காரணம்... அவர் கட்டுரைகளைப் படித்ததிலிருந்து டெல்லியில வசிக்கிறார் என்பதை புரிந்து கொண்டிருந்தேன். ‘சுபா’வுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு, சென்னைவாசியாக நான் ஆகிவிட்ட ஒரு காலச்சதுரத்தில் சுபா சொல்லித்தான் கடுகு ஸார் சென்னைவாசியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன என்கிற விஷயம் தெரிந்தது.

பிற்பாடு சுபாவின் மூலமாகவே கடுகு அவர்களுடனான என் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது. (ஒரு பள்ளி மாணவன் தென்னை மரத்தைப் பற்றிய கட்டுரைக்கு மனப்பாடம் செய்து கொண்டு போக, பரீட்சையில் பசுவைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்டிருக்க, இவன் படித்த தென்னை மரத்தைப் பற்றி விரிவாக எழுதி கடைசியில், ‘இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னை மரத்தில் பசுவைக் கட்டுவார்கள்’ என்று எழுதினான் என்ற துணுக்குச் செய்தி இந்தக் கட்டுரையைப் படிக்கையில் உங்கள் நினைவில் இடறினால் நான் பொறுப்பல்ல.) அந்த முதல் சந்திப்பில் துவங்கி...

                                                                          -தொடர்கிறேன்...

==================================================

                               சென்னையில் பதிவர் சந்திப்பு - ஆகஸ்டு-19 

லையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. 

கவிரயங்கம், கருத்தரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பன உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமுள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். பட்டியல் தயாரிக்க வசதியாயிருக்கும்.

                                   நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமை)  
                                 இடம் : மாணவர் மன்றம், சென்னை.

தங்களின் வருகையை 98941 24021(மதுமதி), 73058 36166(பா.கணேஷ்), 94445 12938(சென்னைப்பித்தன்), 90947 66822(புலவர்.சா.இராமநுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்.

==================================================

Monday, June 25, 2012

மொறு மொறு மிக்ஸர் - 8

Posted by பால கணேஷ் Monday, June 25, 2012

முதல்ல ஒரு சின்னப் புதிரோட ஆரம்பி்க்கலாம். இங்க தீக்குச்சிகளால ஒரு மீன் உருவம் செஞ்சிருக்கேன். இதுலருந்து மூணே மூணு குச்சிகளை மட்டுமே நகர்த்தி, வலது பக்கம் பார்த்திட்டிருக்கற இந்த மீனை இப்படி இடது பக்கம் பாக்கற மாதிரி பண்ணனும். எப்படி சாத்தியம்னு யோசிங்க. யாரும் விடை சொல்லாட்டி அடுத்த பதிவில் விடை சொல்லப்படும்.

===========================================

கோபம், சந்தோஷம் ‌சோகம் -இந்த மாதிரி பல .உணர்ச்சிகளின் கலவையாதான் மனுஷன் வாழ வேண்டியிருக்கிறது. இந்த எழில்மிகு சென்னையில சின்னச் சின்ன விஷயங்கள்கூட எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது. 

போன வாரம் என் நண்பன் ஒருவனுக்காக மே‌.சைதாப் பேட்டையில் வீடு பார்க்கப் போயிருந்தோம். வீட்டுக்காரர் வாடகை, அட்வான்ஸ் போன்ற விவரங்களைச் சொல்லிவிட்டு, ‘கரண்ட் சார்ஜ் ஒரு யூனிட்டுக்கு நாலு ரூபாய் கொடுத்துடுங்க’’ என்றார். ‘ஈ.பி. ஆபீசுக்கு அவ்வளவா கட்ட வேண்டியிருக்கு்ம்’ என்ற எண்ணம் மனதில் ஓட, நான் கேள்வியாக அவரைப் பார்க்க, ‘‘மத்தவங்கல்லாம் 5 ரூபா, 6 ரூபான்னு வாங்கறாங்க... நான்தான் நியாயமாக் கேட்டிருக்கேன்’’ என்றார். இது எப்படி இருக்கு? ‘‘அவனவன் கொலையே பண்றான். நான் கையத் தானே வெட்டறேன். எவ்வளவு நல்லவன் நான்?’’ என்கிற மாதிரி இல்லை..? குறைந்தபட்ச அயோக்கியனாய் இருப்பது என்பதே நல்லவனுக்கான அளவுகோலாய் மாறி விட்டதா என்ன?

இன்னொரு ‌எரிச்சல் இந்த ஏ.டி.எம். இயந்திரங்கள் படுத்தும் பாடு. குறிப்பாக நான் கணக்கு வைத்திருக்கும் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மிஷின்கள். ஏதாவது அவசரத்துக்கு 100 அல்லது 200 எடுக்கலாம் என்று நினைத்தால், 500க்கு குறைந்து பணம் தர மாட்டேன் என்று அடம் பிடிககின்றன. தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களை அதிகப் பணம் ‌எடுத்து நிறைய செலவு பண்ண வைத்துக் காலியாக்குவதில் இந்த மிஷின்களுக்கு என்ன அற்ப சந்தோஷமோ?

===========================================


ஸார்..! உங்க ஸ்பிரிங் நாற்காலியிலே ஏதோ ரிப்பேர்னு சொன்னீங்களாமே மானேஜர்கிட்டே? அதுக்கு தச்சனைக் கூப்பிட்டு வந்திருக்கேன். என்னங்க ஸார் ரிப்பேர் அதிலே..?’’

===========================================

ரு சம்பவம் என்னால் மறக்க முடியாதது. மழை பெய்து ஓய்ந்து தண்ணீர் ஆங்காங்கே தேங்கியிருந்த ஒரு மழை நாளில் நான் காலை ஜாகிங் போய்கொண்டிருந்தேன். ஒரு பெரிய கார்  என்னைக் கடந்து வேகமாய் போனது. நான் ஓடிக்கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கியிருக்க அந்தக் கார் போன வேகத்தில் என் மேல் நீரை இறைத்துவிட்டு போனது. நான் ஓடுவதை நிறுத்திவிட்டு அந்தக் காரை வெறித்துப்பார்த்தேன். அந்தக் கார் நிற்பதுபோல வேகம் குறைந்தது  ஆனால் அது சிக்னலுக்கு அருகில் இருந்ததால் உடனே விரைந்து சென்றுவிட்டது. நான் கார் காரனை உரக்கத்திட்டிவிட்டு ஓடுவதைத் தொடர்ந்தேன்.

அன்றைக்கே  அதைப் பற்றி மறந்தும் போனேன். அந்த வாரம் முழுக்க அவ்வப்போது மழை பெய்ததால் தினமும் காலையில் ஓடும் பழக்கம் நின்றுபோய் ஒரு நான்கைந்து  நாட்களுக்குப் பிறகு மழை நின்ற அன்று  மறுபடி ஜாகிங் போனேன்.  என் மேல் தண்ணீர் இறைத்துவிட்டுப் போன அதே ஸ்தலத்தில் ஒருவர் என்னை வழிமறித்தார். நான் இந்தியன் என்பதை கண்டுபிடித்தவர் போல ரொம்ப பிரயத்தனப்பட்டு ”நமஸ்தே” என்று கைக்கூப்பினார். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்ல அவர் உடனே “ என்னை மன்னிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு முன்பு இந்தச் சாலையில் காரில் போகும்போது உங்கள் மேல் தண்ணீர் இறைத்துவிட்டுப் போயிட்டேன். சிக்னலைக் கடப்பதிலேயே கவனமாய் இருந்ததால் உங்களை கவனிக்கவில்லை. தண்ணீர் பீச்சியடிக்கும் சப்தம் வந்தபின் கவனித்தேன் என் பின்னால் கார்கள் வந்து கொண்டிருந்ததால் உடனே காரை நிறுத்த முடியவில்லை. மன்னிக்கணும்” என்றார்.

நான் வியந்து போனேன். அவர் என்னைவிட இருபத்து ஐந்து வருடங்கள்  மூத்தவர். அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட விதமும் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்பதற்காக அந்த சாலையில் கடந்த நான்கு நாட்களாய் அதே நேரத்தில் காத்திருந்து என்னை சந்தித்திருக்கிறார் என்பதும் என்னை மிகவும் நெகிழ்வித்தது. நான் மிகுந்த பெருந்தன்மை உணர்வுள்ளவனாய் “ பரவாயில்லை சார். கார் ஓட்டும் போது இது சகஜம். உங்கள் கனிவுக்கு நன்றி” என்று அவரை சமாதானம் செய்தேன். என்னுடன் இரண்டு நிமிடம் பேசிவிட்டு மறுபடி ஒரு நமஸ்தே சொல்லிவிட்டு அவர் மனநிறைவோடு காரில் ஏறிப் போனார்.

-‘கதவுகள் திறக்கும்’ அனுபவத்தொடரில் ஆனந்த்ராகவ்

பி.கு.: ஆ.ரா. வசிப்பது இந்தியாவில் அல்ல... வெளிநாட்டில்

===========================================

ரு மலையின் உசசியில ஒருத்தர் கைய ஒருத்தர் பிடிச்சிட்டு ஒரு காதல் ஜோடி நிக்கறாங்க. நோ... நோ... புன்னகை மன்னன்ல மாதிரி குதிக்கப் போறாங்கங்கற உங்க கற்பனையை கட்... கட்! அவங்க அங்க நின்னபடி பேசிக்கறாங்க.

ஆனந்த்: ‘‘ரேணு! இந்த மலையோட ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? ஒரு மலை உச்சியில நின்னு நாம சத்தமா நம்ம பேரைச்‌ சொன்னா எதிரொலியா அதே குரல்தான் திரும்ப வரும். இந்த மாலையில மட்டும் நம்ம பேரை கத்திச் சொன்னா, நம்ம லவ்வரோட பேரைச் சொல்லும்...’’

ரேணு: ‘‘‘ரியல்லி? நான் ட்ரை பண்ணிப் பாக்கறேன்... ரோமியோ...’’ என்று கத்துகிறாள். மலை ‘ஜுலியட்’ என்று குரல் தருகிறது. ரேணு ‘அட’ என்று வியந்து போனவளாய், ‘‘ஆனந்த்!’’ என்று சத்தமாய்க் கத்துகிறாள். மலை ‘‘ரேணு’’ என்கிறது. ரேணு குதூகலமாய் ஆனந்தைக் கட்டிக் கொள்கிறாள். ஒன்றிரண்டு நொடிகள் கழித்து மலை ‘‘ப்ரியா, தீபா, திவ்யா’’ என்று சொல்லிக் கொண்டே போகிறது. ஓ நோ..! அதன்பின் அங்கு என்ன நடந்திருக்குமென்பது உங்கள் கற்பனைக்கே!

===========================================

டி.எம்.எஸ். சிவாஜிக்கு ஒரு மாதிரியும், எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் பாடுகிறார் என்று சில பதிவுகளுக்கு முன்னால் எழுதியிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் பழைய குமுதம் புத்தகம் ஒன்றைப் புரட்டுகையில், குமுதத்தில் அந்நாளிலேயே (1965-70) இதே கேள்வியை எழுப்பியிருந்ததை கவனித்தேன். அந்தப் பகுதியை ஸ்கேன் செய்துவிட்டேன் உடனே. இதோ அது...



புதிரின் விடை :


அடுத்த பதிவுல சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனா... மக்களை அதிகம் வெய்ட் பண்ண வைக்க விரும்பாம சொல்லிட்டேன்.
கத்தரித்தவை-5 கண்டு புன்னகைக்க... மே.மை. செல்க!

Saturday, June 23, 2012

நடை வண்டிகள் - 22

Posted by பால கணேஷ் Saturday, June 23, 2012

இந்திரா சௌந்தர்ராஜனும் நானும் - 5
அதன் பின்னர் நெல்லையில் இருந்து மதுரை வரும் போதெல்லாம் தவறாமல் அவரைச் சந்தித்து உரையாடுவது என்பது நிகழ்ச்சி நிரலில் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சிறிது காலத்தில் நெல்லையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. சென்னை வந்த பின் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வதோடு சரி. சென்னை வரும் சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் ‘ப்ளையிங் விசிட்’டாகத்தான் வருவார் என்பதால் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்து‌ போனது.

ஜி.அசோகன் அவர்களின் க்ரைம் நாவல் அலுவலகத்தில் நான் பணியில் இருந்த சமயம் ‘பாக்கெட் நாவல்’ இதழில் மாதந்தோறும் அவரது நாவல்தான் வெளிவந்து கொண்டிருந்தது. அதனால் ஒவ்வொரு மாதமும் நாவல் அனுப்பியது்ம் கருத்துக் கேட்பார். பாராட்டுதலோ, குறைகளோ மனதில் தோன்றியதை மறக்காமல் ‌சொல்வேன்.

அந்தப் பணியிலிருந்து விலகிய பின்னர் பணத்தேவை எனக்கு அதிகம் இருந்த ஒரு காலகட்டத்தில் அவரது நூல்களை மாதந்தோறும் வெளியிட்டு வந்த பதிப்பாளர் பொன்.சந்திரசேகர் என்பவரை அறிமுகம் செய்வித்தார் இந்திராஜி. (பொன்.சந்திரசேகர் இன்றளவும் என் நல்ல நண்பர்களில் ஒருவர்.) அவர் வெளியிட்டு வந்த இந்திராஜியின் நாவல்களை வடிவமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறத்தாழ ஓராண்டு காலம் அதை மகிழ்வுடன் செய்து கொண்டிருந்தேன். அதன்பின் வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்து கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்த காலகட்டத்தில் அந்தப் பணியைத தொடர இயலாமல் விட்டுவிட்டேன். சமீபத்தில் நண்பர் சந்திரசேகர் மீண்டும் தொடர்பு கொண்டு எனக்கு அந்த வாய்ப்பைத் தந்ததால் இப்போது தொடர்ந்து அதில் ஈடுபட்டிருக்கிறேன்.

தினம தவறாமல் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் கொண்ட ஆன்மீகவாதி அவர். ஜோதிடம், ஜாதகம் இவற்றில் எல்லாம் துளியும் நம்பிக்கையற்றிருந்த எனக்கு அவை முறைப்படி பயின்று செய்தால் அரிய‌ கலைகளே என்பதை விளக்கிப் புரிய வைத்தவர் அவர். இப்படி அவருடன் பழகி வருவதில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம். இன்றளவும் எங்களி்ன் நட்பு தொடர்ந்து கொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

                                              -‘இந்திரா செளந்தர்ராஜனும்’ நானும் நிறைகிறது;
                                                             ‘கடுகு அவர்களும் நானும்’ துவங்குகிறது.

======================================================================

                         அரிய(க்குடியின்) நகைச்சுவை!

ந்த நாளில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இசை மேதை. நாங்கள இருந்த தெருவில்தான் அவரும் அப்போது இருந்தார். ஐயங்காருக்கு ‌சிலேடையும், கிண்டலும் ரொம்பத்தான் உண்டு. ஒரு சிஷ்யன் அவரெதிரில் பவ்யமாக வந்து நின்றான்.

‘‘எங்கேடா உன்னை ரொம்ப நாளாக் காணும்?’’

‘‘காசிக்குப் போயிருந்தேன்...’’

‘‘அப்படியா? உனக்கெதுக்குடா காசி?’’

‘‘ஏதோ போனேன். அங்கேயும் ஒரு நல்ல குரு ‌கிடைச்சர். நாலு கீர்த்தனை கத்துக் கொடுத்தார்.’’

‘‘பரவாயில்லையே... எங்கே... ஒண்ணு பாடு!’’

சிஷ்யன் அப்படியே .உட்கார்ந்து பாடத் தொடங்கினான். சங்கீதத்தில் அரைகுறையான எனக்கே கேட்கச் சகிக்கவில்லை. ஆனால் ஐயங்காரோ புன்னகை மாறாமல் உட்கார்ந்திருந்தார். இளைஞன் பாடி முடித்ததும், நக்கலாக ஒரு கேள்வி கேட்டார்:

‘‘ஏண்டா அம்பீ! காசிக்குப் போறவா, போயிட்டு வந்ததுக்கு அடையாளமா காயை விடுவா, கனியை விடுவா. நீ சுருதியையே விட்டுட்டியேடா...’’

அ...ப்....பா... அன்றைக்குச் சிரித்த சிரிப்பில் வயிற்று வலியே வந்து விட்டது.

                                                            -‘சிரிக்கப் பழகு’ நூலில் அனுராதா ரமணன்

மேய்ச்சல மைதானத்தில் - கேப்ஸ்யூல் நாவல்-1

Thursday, June 21, 2012

சரிதாவின் செல்ல ‘டார்லிங்!’

Posted by பால கணேஷ் Thursday, June 21, 2012

ரு வாரமாக அலுவலகத்தில் நிறைய ஆணி பிடுங்க வேண்டிய நிலை எனக்கு. காலையில் போனால் வருவதற்கு இரவாகியதில் மூட் அவுட்டாகி சோர்ந்து போயிருந்த சரிதாவைக் கவனிக்கவே முடியவில்லை. அன்று இரவு உணவு பரிமாறியபடி சொன்னாள். ‘‘என்னங்க... இது கொஞ்சம்கூட நல்லால்லை...’’

‘‘கேரட் பொறியல்தானே? நிறைய உப்பு சேர்த்துட்டே... அதான்...’’ என்றேன். கோபமாய் முறைத்தாள். ‘‘அதில்லை. நீங்களானா காலையில போனா நைட்தான் வர்றீங்க. வீட்ல போரடிக்குது. புத்தகம் படிச்சா சோம்பலா, தூக்கம்தான் வருது. இருக்கற டிவிடி எல்லாத்தையும் ரெண்டு போட்டுப் பாத்துட்டேன். ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போலாம்னா, அவஅவ ஸம்மர் வெகேஷன்னுட்டு ஊருக்குப் போயிட்டாளுங்க. ப்ளாட் சிஸ்டத்துல மத்தவங்கட்ட அரட்டை அடிக்கவும் முடியலை. வாழ்க்கையே வெறுத்துப் போகுதுங்க...’’

‘‘வாழ்க்கை வெறுத்துடுச்சா? தற்கொலை பண்ணிக்கறதுல்லாம் சட்டப்படி தப்புடி’’

‘‘எனக்கென்ன தலையெழுத்தா? நான் எங்கம்மா வீட்டுக்குப் போய் ஒரு வாரம் இருந்துட்டு வர்றேன்...’’

‘‘ஒரு வாரம் நிம்மதி’’ என்று நான் முணுமுணுத்தது அவள் காதில் விழுந்து தொலைத்தது. ‘‘என்னா...து? என்ன சொன்னீங்க?’’ என்று தோள்கள் ஏறி இறங்க, ஜல்லிக்கட்டில் சார்ஜ் செய்த காளை மாதிரி புஸ் புஸ்ஸென்று கோபப் பெருமூச்சு விட்டபடி கேட்டாள்.

‘‘ஐயோ, நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட சரி. ஒரு வாரம் வீட்டு வேலை எதுவும் செய்யாம, நிம்மதியா அம்மா வீட்ல நீ என்ஜாய் பண்ணுங்கறதைத்தான் சுருக்கமா நான் சொன்னேன்... ஹி... ஹி...’’ என்றேன்.

ரு வாரம் சந்தடியில்லாமல் சந்தோஷமாகப் போனது. திரும்பி வந்த சரிதா கொண்டு போயிருந்த சூட்கேஸுடன் சேர்த்து ஒரு கூடையையும் கொண்டு வந்திருந்தாள். ‘‘என்னங்க... இந்தக் கூடைல என்ன இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்...’’

‘‘என்ன.. . உங்கம்மா முறுக்கும், லட்டும் பண்ணிக் குடுத்து விட்ருப்பாங்க. சரியா...?’’ என்றபடி கூடைக்குள் கை விட்டவன் சுருக்கென்று கையை வெளியே எடுத்தேன். கையில் ஏதோ ஈரமாகப் பட்டது போலில்லை? கூடைக்குள் எட்டிப் பார்க்க, நாக்கை நீட்டியபடி மினியேச்சர் போல குட்டி நாய் ஒன்று வாலாட்டியது. ‘‘ஐயய்யே... என்னம்மா இது?’’ என்றேன் முகத்தைச் சுளித்தபடி. எனக்கு செல்லப் பிராணிகள் என்றாலே அலர்ஜிதான்.

 ‘‘அதுங்களா.. அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு ரோஸி குட்டி போட்டிருந்துச்சு. ரொம்ப அழகா இருந்துச்சா... அதான் ஒண்ணை எடுத்துட்டு வந்துட்டேன்’’ என்றாள். அது வேண்டாம் என்று நான் மறுக்க, அவள் வாதாட, நாய் இடையில் குலைக்க, கடைசியில் (வழக்கம் போல) என் குடும்பத்தை அவள் வம்புக்கிழுத்துவிட பேசாமல் வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று நான்.

‘நாய் படாத பாடு’ என்கிறார்களே... சரிதாவின் ‘டார்லிங்’(நாயின் பெயர்)கைப் பார்த்திருந்தால் பழமொழியை மாற்றி ‘மனுஷன் படாத பாடு’ என்று சொல்லி விடுவார்கள. அடுத்த நாள் டார்லிங்குக்காக ஷாப்பிங் போய்விட்டு அவள் வாங்கி வந்திருந்தவைகளைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன். நாய்க்குக் கூட இவ்வளவு வெரைட்டியாக சோப், ஷாம்பு, பிஸ்கட் எல்லாம் இருக்கிறதா என்ன? 

‘‘சரி... உனக்குக் கூட அழகுபடுத்திக்க இவ்வளவு ஐட்டம்லாம் வாங்கின மாதிரி தெரியலையே...’’ என்றேன். ‘‘சும்மா இருங்க... எப்பப் பாரு கண்ணு போட்டுக்கிட்டு’’ என்றாள். அதற்கு குளியல், அலங்காரம், கழுத்துப் பட்டை என அமர்க்களப்பட்டது. அது சொகுசாக மனுஷப்பாடு பட்டு வீட்டில் இருக்க நான் தான் அதற்கான செலவுகளால் விழி பிதுங்கி ‘நாய்படாத பாடு’ பட்டேன். அது இருக்கும் திசைப் பக்கமே போகாமல் வேறுபுறமாக ஓடிச் சென்று கொண்டிருந்தேன்.

‘‘என்னங்க... நைட்ல டார்லிங் சரியாவே தூங்க மாட்டேங்குது’’ என்றாள் ஒரு முறை. ‘‘நீ வேணா தாலாட்டுப் பாடித் தூங்க ‌வையேன்...’’ என்றேன் கேலியாக. ‘‘ஏன்... அது ஒழுங்கா இருக்கறது பிடிக்கலையாக்கும்? அது ஓடிப் போகறதுக்கு வழி சொல்றீங்க?’’ என்று கோபத்தில் ‌தான் ‘ஸேம் ஸைடு கோல்’ போடுவதை அறியாமல் அவள் பேச, நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். அதன்பின் தானே புரிந்து கொண்டு அமைதியாக அப்பால் சென்றாள்.

‘நாய் ஜாக்கிரதை’ என்று ஒரு சின்ன போர்டை வாசலில் பொருத்த வேண்டுமென்றாள் சரிதா. ‘‘அடியே... உன் ‘டார்லிங்’கெல்லாம் ஒரு நாய்ன்னு இந்த போர்டை வெச்சேன்னா வர்றவங்கல்லாம் சிரிப்பாங்க...’’ என்றேன். ‘‘வாயை மூடுங்க... போர்டு வெச்சாத்தான் நம்ம வீட்ல இது இருக்கறது எல்லாருக்கும் தெரியும்’’ என்றாள். ஒன்றிரண்டு முறைகள் சரிதா வீட்டில் இல்லாதபோது அதை வேறிடத்தில் கொண்டு விட்டும்கூட எப்படியோ வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டது அது

தெல்லாம் பற்றாதென்று, ஒருநாள் ஏதோ விசாரிக்க ஒரு போலீஸ்காரர் வர, சரிதா அவரை வீட்டில் உட்காரச் சொல்லி காபி எடுத்துவர உள்ளே செல்ல, தெரிந்து செய்ததோ... தெரியாமல் செய்ததோ... டார்லிங் அவர் காலில் கடித்து வைத்திருக்கிறது. அவர் அலறிய அலறலில் அக்கம்பக்கத்தினர் ஓடிவர, அவர்களில் ஒருவராக பக்கத்து வீட்டு சுஷ்மாவின் பாஸ்போர்ட் என்கொயரிக்காக வந்திருந்த போலீஸ்காரர். அந்த போலீஸ், இந்த போலீஸைக் கண்டதும் பாய்ந்து ஓடி கையில் விலங்கை மாட்ட... அப்போதுதான் தெரிந்திருக்கிறது எங்கள் வீட்டுக்கு வந்தது போலீஸ் வேடத்திலிருந்த கேடி என்று!

ன்ன்ததைச் சொல்ல... விலைவாசியின் வேகத்தில் ‘டார்லிங்’கின் மதிப்பு எங்கள் அபார்ட்மெண்ட்டில் ஏறி விட்டது. அதை விரட்டும் என் எண்ணத்தில் மண்! அலுவலகம் செல்ல நான் பைக்கை உதைக்கும் நேரம் என் பேகைத் தந்தபடி, ‘‘என்னங்க... இப்பல்லாம் டார்லிங்கைச் சகிச்சுட்டு வாழப் பழகிட்டீங்க போல...’’ என்றாள் சரிதா. ‘‘உன்னையே சகிச்சுட்டு வாழப் பழகலியா... அதுமாதிரித்தான்...’’ என்றவன் அடுத்த ஸெகண்ட் எஸ்கேப்பாகி விட்டேன்.

ண்மையில் இப்போது (வேறு வழியில்லாமல்) அதைச் சகித்து வாழப் பழகி விட்டேன். இருந்தாலும் அதை டிஸ்போஸ் பண்ணிவிடும் ஆசை இருக்கத்தான் செய்கிறது. டியர் சார்/மேடம்...! உங்களுக்கு சமர்‌த்தான குட்டி நாய் வேண்டுமா? திருடனைக்கூட பிடித்துத் தரும் புத்திசாலியாக்கும். முற்றிலும் இலவசம்! உடனே என்னைத் தொடர்பு கொள்ளுங்களேன் - சரிதாவுக்குத் தெரியாமல் - ஹி... ஹி...!

=================================================================

                  வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு

ரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில், திரு,சென்னைப பித்தன் அவர்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும். 

முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..

இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்.

=================================================================

Wednesday, June 20, 2012

பயன்தரும் ‘பேசும்’ புத்தகம்!

Posted by பால கணேஷ் Wednesday, June 20, 2012

னம் அடங்குவது ஒரு வரம் என்றால், அடங்காமல் சிறகு விரிப்பதும் ஒரு வரம்தான். சிந்தனை வயப்படும் போது எண்ண ்லைகள் ஒன்றோடொன்று மோதும் போது- உலகம் புரியம். உலகம் புரியும் போது எண்ணங்கள் கருவாகும்; உருவாகும்; விரியும்; ஆழமாக உட்செல்லும் என்பதும் சரியே.

உலகின் நடப்புகள் நல்லவை, அல்லவை என்னும் பிரிவில் அடங்குகின்றன. சிலபோது அவை நம் சொந்த அனுபவம்; சிலபோது நாம் அறியும் அனுபவம். நம் அனுபவம் நமக்கு ஒரு வகையான சிந்தனையையும் பிரச்னைக்குரிய அணுகுமுறையையும் காட்டும். மற்றவர் அனுபவம் அதே மாதிரியான பிரச்சினை குறித்து சிந்திப்பது மாறலாம். அதேபோல மற்றவர்க்குரிய பிரச்னை குறித்த நமது அணுகுமுறையம் வேறாக இருக்கலாம்.

உண்மை! நம் மனம் ஒரு புள்ளி. நம்மைப் பற்றிய சிந்தனையே அந்தப் புள்ளி. புள்ளியிலே ஆரங்கள் பல கோணத்தில் நீண்டு வட்டமாகும். ஆரத்தின் அளவுக்கு ஏற்ப வட்டம் பெரியதும் சிறியதும் ஆகும். உலகப் பார்வையும் அத்தகையதுதான். மனம் நம்மைச் சார்ந்த புள்ளியாக இருப்பினும் ஆரங்கள் சமுதாயம் சார்ந்த சிந்தனைக் கோடுகளாகி உலகப் பார்வையை விரிக்க வேண்டும். இவ்வகையில்...

தன்னைத்தான் உலகம் கவனிக்கிறது என்னும் நினைப்பு மாறித் தன்னத் தான் அறியும் லாவகம் கைவந்து விட்டால் நலமெலாம் கூடி வருமே! விடா முயற்சியின் வலிமை தன்னையும் உயர்த்தும், தரணியையும் உயர்த்தும். இளைஞர் என்னும் தூண்கள் இந்தியாவை உலக அரங்கி்ல் முன்னிலைப்படுத்த அவர்களுக்குள் தளும்ப வேண்டியவை தன்னைப் பற்றிய உறுதியும் சமுதாய உறவும் அல்லவா?

விடுதலை பெற்று விட்டோம்! உண்மைதான்! ஒற்றுமையின் வெற்றி இது. முழுமையான விடுதலை தானா? இன்னும் முற்றுப்புள்ளியைத் தேடும் கேள்விக்குறிகள் எத்தனை எத்தனை!

சமுதாயப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணக்கூடிய வல்லமை இளைஞர்களுக்குள் உண்டே. புதைந்து கிடக்கும் அந்த ஆற்றலை இந்த மாநிலம் பயனுறச் செய்யுமாறு பயன்படுத்த உருவாக்கும் மந்திரக்கோல் ஆசிரியர்களிம் உள்ளதே. அந்தக் கோலின் சக்தி முழு வீரியத்துடன் இருந்தால் வீசும் மந்தமாருதம் எத்தகைய சுகத்தைத் தரும்!

எதிர்பார்ப்பே வாழ்க்கை! கனவின் உறுதி நனவின் இறுதி! இளைஞர் குறித்த எதிர்பார்ப்பே, சோதனைகளைச் சாதனைகளாக்கிச் சிகரத்தைத் தொட முடியும் அவர்களால் என்னும் நம்பிக்கையே இந்தச் சிந்தனை மலரக் காரணம். சிந்தனைகள் சொல் மாலையாகி இளைஞர் சிந்தனைக் கட்டுரைகள் என்னும் நூலாக உங்கள் முன்1 சூடியும் சூட்டியும் மகிழுங்கள். அணிய விரும்பி ஆவலுடன் கையில் எடுத்திருக்கும் வாசகர்கள் வந்தனைக்கு உரியவர்கள். நட்புறவு தொடரட்டும்!

-‘இளைஞர் சிந்தனைக் கட்டுரைகள்’ என்ற நூலில் அதன் ஆசிரியர் டாக்டர் கமலம் சங்கர் எம்.ஏ.பி.எட்., பி.எச்டி. அவர்களின் முன்னுரைதான் இது. (இவர் எனக்குத் தமிழமுதை ஊட்டிய முதல் ஆசிரியையும், உறவுமுறையில் எனக்கு சித்தியுமாவார்) வருங்காலத் தூண்களாகிய இளைஞர்கள் தங்களின் சக்தியை உணரவும, இனிமையான இளமைக் காலத்தில் விடாமுயற்சியுடன் போராடி தொழில் அல்லது வேலையில் முன்னேறி மனநிறைவு பெறுவதற்கான நற்கருத்துக்களைச் சொல்லும் நூலாக அமைந்திருந்தது அந்த நூல்.

இப்போது அந்த நூ‌ல் ஒரு ஆடியோ புத்தகமாக வடிவெடுத்திருக்கிறது. ‘இளைஞர் சிந்தனைக்கு...’ என்ற தலைப்பில் மதுரை ராஜாமணி அவர்களின் அழுத்தமான, தெளிவான குரலில் தரமான ஒலிப்பதிவில் வெளிவந்திருக்கிறது. பயனுள்ள இந்த ஆடியோ புத்தகத்திற்கு விலை ரூ.100 நிர்ணயித்திருக்கிறார்கள். நான் கீழே கொடுத்துள்ள முகவரியில் அல்லது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் 20 சதவீதம் தள்ளுபடியில் பெறலாம். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எனில் கூரியர் செலவுக்கு ரூ.15ம, தமிழகத்திற்கு வெளியில் வசிப்பவர்கள் ரூ.35ம் புத்தக விலையுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

தொடர்பு முகவரி: Kamalam Shankar, 2C, Tudors Place, 134, Rajamannar Salai, K.K.Nagar, Chennai - 600 078. Ph : 98404 23569

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : கத்தரித்தவை-4

Monday, June 18, 2012

சென்னையில் பதிவர் சந்திப்பு!

Posted by பால கணேஷ் Monday, June 18, 2012
துவங்குவதற்கு முன்...

விஞர் மதுமதி எழுதிய இரண்டு நாவல்கள் இந்த மாதம் வெளியாகியிருக்கின்றன. அவற்றை வாங்கிப் படித்தேன்; ரசித்தேன். ‌என் தோழி ‘தென்றல்’ சசிகலாவிடம் கேட்டு மதுமதியின் தொ.பே.எண் பெற்று அவரைப் பாராட்டினேன். ஒரு மின்மடலும் அனுப்பினேன். மதுமதியின் திருமதி என் எழுத்துக்களுக்கு ரசிகை என்பது அப்போதுதான் தெரியவந்ததில் மிகமிக மகிழ்ந்தேன் நான். மதுமதியிடம் நான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருந்ததாலும், அவர் இருக்கும் ஏரியா என் வீட்டுக்கு அருகில்தான் என்பது தெரிந்ததாலும் ‘‘நாம சந்திச்சுப் பேசலாமே’’ என்றார் அவர்.  ‘‘ஞாயிற்றுக்கிழமை கோகுலோட ரிசப்ஷனுக்கு புதுச்சேரி போறதா இருந்தேன். எதிர்பாராத சொந்த வேலை ஒண்ணு வந்திட்டுது. ஞாயித்துககிழமை ஈவ்னிங் வரை ஃப்ரீதான் நான். அன்னிக்கு சந்திக்கலாம்’’ என்றேன். கவிஞரிடம். மகிழ்வுடன் சம்மதித்தார்.

இனி... பதிவர்கள் சந்திப்பு!

நேற்று காலை மதுமதிக்கு ‌போன் செய்து, ‘‘கிளம்பட்டுமா?’’ என்று கேட்க, ‘‘நான் புறப்பட்டாச்சு. உங்க வீ்ட்டுக்கு வழி சொல்லுங்க’’ என்று கேட்டு என் இல்லம் வந்தார் கவிஞர். அவருடன் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கையில் புலவர் சா.இராமாநுசம் மற்றும் சென்னைப் பித்தன் ஆகியவர்களைச் சந்திக்க நீண்டநாள் விருப்பம் என்றார் மதுமதி. சரி, சந்திக்க வைத்துவிடலாம் என்று போன்‌ செய்தால் புலவர் ஐயா போனை எடுக்கவே இல்லை. சில முறை முயற்சித்து, சலிப்பாகி செ.பி.க்கு போன் செய்தேன். உடனே போ‌னை எடுத்து, விஷயம் கேட்டதும், ‘‘வீட்லதான் இருக்கேன். உடனே கிளம்பி வாங்க’’ என்றார்.

என் வீட்டிலிருந்து கிளம்பிப் போகையில் மதுமதி, சசிகலாவுக்கு போன் செய்து, நாங்கள் இருவரும் செ.பி.யை சந்திக்கச் செல்வதைச் சொல்ல, அவரைப் பார்த்துவிட்டு தன் வீட்டுக்கும் அவசியம் வர வேண்டுமென்றும், எங்களுக்கு மதிய உணவு தயாரித்து வைப்பதாகவும் சசிகலா சொல்லியிருக்கிறார். மதுமதி விஷயத்தைச் சொல்லிவிட்டு என்னிடம் போனைத் தந்தார் மதுமதி.

‘‘அதில்லை சசி. நான் வீட்ல சொல்லிட்டு வரலை. அதான் யோசனையாயிருக்கு...’ என்றேன். ‘‘என்னது...?’’ என்றார் சசி. ‘‘இல்ல... மதிய சாப்பாட்டுக்கு தேடாதீங்கன்னு வீட்ல சொல்லிட்டு வரலையேங்கற அர்த்தத்துல... ஹி... ஹி...’’ என்றேன். ‘‘போன் போட்டு சொல்லிக்கலாம். பயப்படாம வாங்க, உங்க உயிருக்கு நான் கேரண்டி’’ என்றுவிட்டு போனை வைத்து விட்டார் சசி.

சென்னைப் பித்தன் எங்களை வரவேற்பதற்காக வாசலிலேயே காத்திருந்தார். சென்னையில் வெயிலில் காய்ந்து போய் வந்திருந்த எங்களுக்கு ‘ரெட் வைன்’ போன்றதொரு குளிர்பானம் தந்து குளிர்வித்தார். சென்னைப் பித்தனைப் பார்த்துப் பேசுவதென்றாலே பயம் எனக்கு. அவருடன் உரையாடும் விஷயத்தில் ஒரு ஆபத்து உண்டு. 

அவரிடம் எந்த விஷயமும் பேசலாம். படிப்பனுபவமும், வாழ்க்கையனுபவமும் சேர்ந்து வரும் அவர் கருத்துக்களைக் கேட்டுக கொண்டிருந்தால் நேரம் போவதை மறந்து விடுவோம் என்பதே என் பயத்துககான காரணம். நேற்றும் அப்படியே. மூவருமாகப் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ‘‘போட்டோல பாக்கறதை விட நேர்ல இளமையா இருக்கீங்க’’ என்றார் மதுமதியைப் பார்த்து செ.பி. ‘‘நான் போட்டோல இளமையா இருப்பேன். நேர்ல பாத்தா வயசுகூடின மாதிரி தெரியும். அவர் எனக்கு நேரெதிர்’’ என்று நான் சொல்ல, எங்கே சிரிக்கா விட்டால் நான் அழுதுவிடுவேனோ என்று பயந்து சிரித்து வைத்தார் மதுமதி.  திடீரென்று செல்லைக் கவனித்தால் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. மனமேயில்லாமல் எங்கள் உரையாடலுக்கு ‘தொடரும்’ போட்டுவிட்டு இருவரும் புறப்பட்டோம்.

தாம்பரத்திலிருந்து கொஞ்சம் தூரத்தில் தன் வீடு என்று சொல்லி, வழி சொல்லியிருந்தார் சசி. அது கொஞ்சம் தூரம் இல்லீங்க... கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் தூரம்! தாம்பரத்திலிருந்து பிரிந்த கிளைச சாலையில் போனோம், போனோம், வாழ்க்கையின் ‌ஓரத்துக்கே போய்விட்டோம் போலிருந்தது. இடையில் இரண்டு முறை மதுமதி ‌போன் செய்து, ‘ஏஙக, சரியாத்தான் வந்துட்டிருக்கனா?’ என்று சசியிடம் கேட்டுக் கொண்டார். ஒருவழியாக வீட்டைக் கண்டுபிடிச்சுப் போயிட்டோம்ங்க.

 சசியின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டோம். அநாயசமாக எழுதித் தள்ளும் கவிதைக்காரிக்கு சமையலும் கைவந்த கலை என்பது புரிந்தது.  நாங்க மூணு பேரும் சுவாரஸ்யமா பேசிக் கொண்டிருக்க, சசியின் இரண்டு பையன்களும் பேசுவதற்கே தயங்கினார்கள். ரொம்ப சாதுப் பிள்ளைகள் போலிருக்கிறதே என்று தோன்றியது. இல்லை... சரியான வால்கள் என்பது சற்று நேரம் பழகியபின் அவர்கள் பேச ஆரம்பித்ததும் புரிந்தது. சசியின் கல்யாண ஆல்பம் மற்றும் குழந்தைகளின் பிறந்ததின ஆல்பங்களைப் பார்த்தோம்.

மாலை சசியின் வீட்டிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தபோது ‘‘இப்ப ஒரு தடவை புலவருக்கு ட்ரை பண்ணிப் பாருங்களேன்’’ என்றார் மதுமதி. நான் முயற்சிக்க, புலவர் பேசினார். ‘‘புது ஃபோன் மாத்தியிருக்கேன் தம்பி. இதுல ரிங் சவுண்டே சரியாக் கேக்க மாட்டேங்குது. பித்தன் போன் பண்ணி நீங்க வந்துட்டுப் போனதை ‌சொன்னார். நான் எப்பவும் வீட்லதான் இருப்பேன். உடனே ரெண்டு பேரும் வாங்க’’ என்றார். விடு ஜூட் தாம்பரம் to கோடம்பாக்கம் புலவர் வீட்டுக்கு! அதிகம் சிரமப்படாமல் புலவரின் வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம். புலவரும் நண்பர் செ.பி. போல வாசலிலேயே காத்திருந்தார் எங்களுக்காய்.

கொஞ்சம் கவிதை, கொஞ்சம் பதிவுகள், கொஞ்சம் புலவரின் அனுபவங்கள் என்று பேசிக் கொண்டிருந்தோம். முதுமையின் காரணமாகவும், மருத்துவர் அறிவுரையினாலும் ‌முன்புபோல கணிப்பொறியில் அதிகநேரம் செலவிட முடியவில்லை என்றும், நிறையப் பேரின் தளங்களுக்குச் செல்வதுகூட இப்போது அதனால்தான் குறைந்து விட்டது என்றும் குறிப்பிட்டார் புலவர்.

 தனக்கும் டைப்பிங் செய்வதுதான் பிரச்னை என்றும், கீ போர்டில் நான்கு விரல்களால் ‘குதிரை ஓட்டுபவர்’தான் என்றும் மதுமதி சொன்னபோது வியப்பாக இருந்தது எனக்கு. ஆறு மணிக்கு எனக்கு வீட்டுவேலை இருந்ததால் கிளம்ப வேண்டியிருந்தது. இதுபோன்ற பதிவர் சந்திப்புகள் உற்சாகம் தருபவை என்றும் மாதம் ஒரு முறையாவது நிறையப் பேரை வரவழைத்து கலந்துரையாட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் தன் விருப்பத்தை புலவர் வெளியிட்டார். முயற்சிப்பதாகக் கூறி இருவரும் புறப்பட்டோம். அதன்பின் என் சொந்தப் பணியை நிறைவாய் முடித்தேன் நான்.

இப்படியாக... ஒரு திட்டமிடாமலே ஒரு ‘பதிவர்கள் சந்திப்பு’ நிகழ்ந்து ஞாயிற்றுக்கிழமை பொழுது இனிமையாகப் போனது மதுமதியின் உபயத்தால்! அன்னாருக்கு நன்றி! ‘‘வரலாறு ரொம்ப முக்கியம் நண்பரே. இந்த பதிவர்கள் சந்திப்பை பதிவாப் போடணும். நான் டி.என்.பி.எஸ்.சி. போடறதால நீங்கதான் நாளைக்கு உங்க வலையில போடணும்’’ என்று கட்டளையிட்டார் கவிஞர். உங்க விருப்பப்படி பப்ளிஷ் பண்ணிட்டேன் கவிஞரே..!

Thursday, June 14, 2012

நடை வண்டிகள் - 21

Posted by பால கணேஷ் Thursday, June 14, 2012

இந்திரா செளந்தர்ராஜனும், நானும் - 4

திருநெல்வேலி தினமலரில் எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு இணைப்பிதழ்களை வடிவமைப்பது. சிறுவர் மலர், திரை மலர், வார மலர், கதை மலர் போன்ற இணைப்பிதழ்களை தயாரித்து வடிவமைப்பது நான், ஒரு உதவி ஆசிரியர், ஒரு பிழை திருத்துபவர் கொண்ட குழுவின் பொறுப்பு. என்னுடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நபர் (பெயர் வேண்டாமே...) இனிமையாகப் பேசினார். நன்கு பழகினார்.

ஒரு சமயம் கதை மலர் இதழில் பிரபல எழுத்தாளர்களிடம் எட்டு சிறுகதைகள் வாங்கி சிறுகதைத் தொடராக வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். நண்பர் ராஜேஷ்குமாரிடம் நான் போனில் தொடர்பு கொண்டு கேட்க, ‘‘நீங்களே என் சிறுகதைகள்ல எதை வேணும்னாலும செலக்ட் பண்ணிப் போட்டுக்கங்க கணேஷ். எதெது போடறீங்கன்னு ஒரு லிஸ்ட் மட்டும் அனுப்பிடுங்க’’ என்றார். ரா.கு.வுக்கு நன்றி சொல்லிவிட்டு அலுவலக பொறுப்பாளரிடம் போனை நான் தர, அவர் ரா.கு.விடம் சன்மானம் தொடர்பான விஷயங்களை பேசி முடிவு செய்து கொண்டார்.

இப்படி நான் செயல்பட்டதையும், மதுரை போய் வரும் போது இந்திராஜியை சந்தித்துப் பேசியதைப் பற்றியும், சுபாவிடம் எனக்குள்ள நட்பையும் கூடவே பணிபுரிவதால் நன்கறிந்த அந்த உதவி ஆசிரியர் என்னிடம் ஒரு யோசனை சொன்னார். ‘‘மாத நாவல்கள் முன்ன மாதிரி நிறைய வர்றதில்லன்னாலும் ஒருசில நாவல்கள் நல்லாத்தான் போயிட்டிருக்கு. உங்க நண்பர்கள்கிட்ட பேசி கதைகளை வாங்கினீங்கன்னா, கட்டுரைகள், ஜோக்ஸ் மாதிரி மத்த விஷயங்களை நான் தயார் பண்ணிடுவேன். நாமளே ஒரு மாத நாவல் நடத்தலாம்’’ என்றார். அதற்கான பண வசதி என்னிடம் இல்லையென்றும், பிரிண்டிங் வசதி திருநெல்வேலியில் இ‌ல்லையென்றும் கூறித் தயங்கினேன் நான். அதற்கு மாற்று யோசனைகளை முன் வைத்தார் அவர்.

பேசிப் பேசி திட்டம் இறுதி வடிவம் பெற்றது. பிரபல எழுத்தாளர்களின் ஏழு சிறுகதைகளும், ஒரு குறு நாவலும் மற்ற பல்சுவைப் பகுதிகளும் வெளியிடலாம் என்பது திட்டம். இதையும் ராஜேஷ்குமாரிடமிருந்‌தே துவங்கினேன். அவரின் ஏழு சிறுகதைகளை தேர்வு செய்து, அவரிடம் பேசி அனுமதி பெற்றபின் இதழ் தயாரித்தோம். ப்ரிண்டிங் செய்யும் போது சைஸ் சற்றே பெரிது, ரெட்யூஸ் பண்ண வேண்டும் என்று ப்ரஸ்ஸில் சொன்னதால், ஃபிலிமில் அளவைக் குறைக்கும் படி ஆனது. இதனால் எழுத்துக்கள் சின்னதாக, படிப்பவர் கண்ணை உறுத்தும் வண்ணம் ஆகிவிட்டது. அட்டைப்படம் வேறு லேமினேஷன் இல்லாமல் சுமாராக வந்திருந்தது. ஏதோ புத்தகம் தயாரித்தோம் என்று பெயரே தவிர, திருப்தி தரவில்லை அந்த முயற்சி.

ஆனாலும் ராஜேஷ்குமார் என்ற மந்திரப் பெயர் புத்தகத்தின் பிரதிகள் நிறைய விற்பதற்கு உதவியிருந்தது. இரண்டாவது இதழில் இந்திரா செளந்தர்ராஜனின் கதைகள் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம் நாங்கள். மதுரை சென்று இந்திராஜியைச் சந்தித்து, இதுபற்றிப் பேசினேன். அவருடைய ஏழு சிறுகதைகளைத் தேர்வு செய்து கொடுத்துவிட்டுச் சொன்னார்: ‘‘கணேஷ்! இந்தச் சிறுகதைகள் அனைத்தும் அந்தந்த இதழ்களில் வெளிவந்த போதே அதற்குரிய சன்மானத்தை எனக்கு வாங்கித் தந்து விட்டன. அதனால, நீங்க இதுக்கு எந்த சன்மானமும் தர வேண்டாம். இதழை நல்லபடியா வெளிக் கொண்டு வாங்க அது போதும்’’ என்றார். பெருந்தன்மையான அவரின் இந்த வார்த்தைகளில் பிரமித்துப் போனேன் நான்.

‘‘இந்தச் சிறுகதைகளை எந்த சந்தர்ப்பத்துல எழுதினீங்க, எப்படி இந்தக் கரு மனசுல தோணிச்சு? இப்படி ஏதாவது சுவாரஸ்யமான விஷயத்தை ‘கதையின் கதை’ன்னு சில வரிகள்ல எழுதிக் கொடுங்க ஸார்’’ என்று நான் கேட்க, அழகாய் அதையும் உடனே எழுதித் தந்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டு நெல்லை வந்ததும் இதழ் தயாரிக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் இதழ் வடிவமைப்பில் இருக்கும் சந்தர்ப்பத்திலேயே ஒரு விஷயம் தெரிந்தது. முதல் இதழ் தயாரித்ததில் என் உதவி ஆசிரிய நண்பர்(?) கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்து அவரின் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டதைக் கண்டுபிடித்தேன். ஜோக்குகள், மற்ற மேட்டர்கள் வெளியிடுவதிலும் அவர் பதவியை துஷ்பிரயோகம்‌ செய்ததும் எனக்குத் தெரிய வந்தது. உடனே அவரிடம் சுமுகமாக, உறுதியாக மாத இதழிலிருந்து நான் விலகுவதாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன்.

இந்திராஜி எனக்‌காக உட்கார்ந்து ‘கதையின் கதை’ எழுதித் தந்தும், சன்மானமாக ஒரு பைசா வேண்டாமென்று சொல்லியும் அதைப் பயன்படுத்த முடியாமல் போனதில் மிகமிக வருத்தம் எனக்குள் இருந்தது. உடனே மீண்டும் மதுரை போய் அவரைச் சந்தித்து நிகழ்ந்தவற்றை விளக்கினேன்; அவரின் சிறுகதைகளை அவரிடம் திருப்பித் தந்தேன். பொறுமையாய் எல்லாவற்றையும் கேட்ட அவர், ‘‘ஆரம்ப கட்டத்துலயே நீங்க பாத்துட்டது நல்லதாப் போச்சு. பின்னால பெரிய ஆபத்துல மாட்டிக்காம இப்பவே விலகிட்டது நல்லதுன்னு பாஸிட்டிவா நினைச்சுக்கங்க. இப்ப இல்லாட்டி என்ன... இன்னொரு சந்தர்ப்பத்துல உங்களுக்கு ஏத்த வாய்ப்பு வரும்’’ என்றெல்லாம் பேசி எனக்கு உற்சாகமூட்டினார். புதிதாய் வெளிவந்திருந்த அவரின் நூல் ஒன்றை ஆட்டோகிராஃபித் தந்தார். மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு நெல்லை திரும்பினேன் நான்.

                                                                             -தொடர்கிறேன்...

கத்தரித்தவை-3 கண்டு புன்னகைக்க... மே.மை

Monday, June 11, 2012


நீண்ட நாட்களாகவே அந்தச் சந்தேகம் எனக்கு இருந்து வந்தது. சமீபத்தில ரமணி ஸாரின் திரைப்பட அலசலில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு சிகரங்களைப் பற்றி பலரும் கருத்துத் தெரிவித்திருந்ததைப் பார்த்ததும்தான் அதைக் கேட்டுவிட்டால் என்ன என்று தோன்றியது. சிவாஜியும் எம்ஜிஆரும் இருவருமே திறமையாளர்கள், அவரவருக்கென்று ஒரு தனித்தன்மை வைத்துக் கொண்டு ஜொலித்த சாதனையாளர்கள்.

பொதுவாவே எம்.ஜி.ஆரின் படங்களில் பாடல்கள் இனிமையாக அமைந்திருக்கும். தன் படப் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாக வேண்டும் என்பதில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர். ஆனால் சிவாஜி அவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. இயல்பாகவே அவரின் படப் பாடல்கள் ஹிட்டானது அதிர்ஷ்டம்தான்.

நான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகன். எந்த சானல்களில் அவரின் பாடல்கள் ஒளிபரப்பானலும் அதை மாற்றாமல் பார்ப்பவன். எம்.ஜி.ஆரின் பாடல்கள் என்றால் அவ்வளவு இஷ்டம் எனக்கு. ஆனாலும் ஒரு சில எம்.ஜி.ஆர். பாடல்கள் வந்தால் மட்டும் உடனே சானல் மாற்றி விடுவேன். அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். அல்ல, அவருக்கு குரல் கொடுத்திருந்த டி.எம்.செளந்தர்ராஜன்தான்!

இதுக்கெல்லாம் மூட்அவுட்டா தம்பி? கவலைய விடுப்பா, கணேசா!

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இரண்டு திலகங்களின் படங்களுக்கும் அவரின் இசைதான். போட்டி அதிகம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் இரண்டு திலகங்களுக்குமே குரல் கொடுத்திருக்கிறார் டி.எம்.செளந்தரராஜன். டி.எம்.எஸ்ஸின் குரல் அனாயாசமாக மேல் ஸ்தாயியில் சஞ்சரிக்கக் கூடியது. சீர்காழி கோவிந்தராஜனுக்கு இணையாகப் பாடக் கூடிய ஒரே குரல் இவருடையதுதான். இவரின் குரலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. எனக்கும் இவரின் பாட்டுக்கள் பிடிக்கும்.

ஆனால் பாருங்கள்... இவர் சிவாஜி என்ற கண்ணுக்கு வெண்ணையும், எம்.ஜி.ஆர். என்ற கண்ணுக்கு சுண்ணாம்பும் வைத்து விட்டார் என்பதுதான் என் சந்தேகம். எம்.ஜி.ஆருக்கு இப்படிப் பாடுகிறார்: ‘‘பாலும் வெல்ல்ண்ண்மை கள்ளும் வெல்ல்ண்மை பருகிடும் வேளை, புரிந்திடும் உண்மை’’ என்று. மற்றொரு பாடலில் ‘‘உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும். அதை பூங்க்க்உயில் கூவ்வ்ட்டங்கள் கேட்டு வரும்’’ என்று பாடியிருப்பார். முழுக்க முழுக்க மூக்கினாலேயே கொனஷ்டை செய்து.

இதுதான் அவர் ஸ்டைல் என்றால் சிவாஜிக்குப் பாடும்‌ போது ‘‘கல்ண்ண்ணில் தெரியும் வல்ல்ண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’’ என்றுதானே மூக்கால் ‌பாடியிருக்க வேண்டும்? அங்கே தெளிவாக ‘கண்ணில் தெரியும் வண்ணப் பறவை’ என்று உச்சரித்துப் பாடியிருககிறார். ஏன்...? சிவாஜி ஸார் வீட்டுக்குக் கூப்பிட்டு உதைப்பார் என்று பயமா? தவிர, எல்லாம் தெரிந்த ஜித்தரான எம்.ஜி.ஆர். எப்படி இப்படி மூககால் பாடுவதை அனுமதித்தார் என்பதும் தெரியவில்லை.

சிவாஜியிடமோ வாத்யாரிடமோ இனி இதுபற்றிக் கேட்க முடியாது. எனவேதான் உங்களுடன் பகிர்ந்து கொண்டு விட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Saturday, June 9, 2012

நடை வண்டிகள்-20

Posted by பால கணேஷ் Saturday, June 09, 2012

 இந்திரா செளந்தர்ராஜனும் நானும் - 3

ச்சமயத்தில் மாதா மாதம் இந்திரா செளந்தர்ராஜனின் நாவல்களைத் தாங்கி ‘க்ரைம் ஸ்டோரி’ என்ற மாத நாவல் வெளிவந்து கொண்டிருந்தது. இந்திராஜியின் வாசகர்களுடன் பேசும் கடிதமும், கேள்வி பதில்களும், நாவலும் வரும். அடுத்து வந்த இதழில் வாசகர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு ஒன்றிரண்டு பாராக்கள் எழுதியிருந்தார்.

‘இந்த மாதம் சில வாசக நெஞ்சங்களை சந்தித்தேன். அவர்களில் முக்கியமானவர் நெல்லை கணேஷ். இவர் திருநெல்வேலி தினமலரில் பணி புரிந்து வருகிறார். என் முதல் நாவலான ‘கோடைகாலக் கொலைகள்’ தொடங்கி சமீப நாவலான ‘பொன் மழை’ வரையில் ஒன்றையும் அவர் விட்டு வைத்திருக்கவில்லை’ என்று (என் நினைவிலிருந்து. இதழ் என்னிடமில்லை) தொடங்கி தன் மகிழ்வைக் குறிப்பிட்டிருந்தார். நான் திருநெல்வேலி தினமலரில் பணி புரியும் சமயத்தில் அவருக்கு அறிமுகம் ஆனதால் மதுரைக்காரனாக இருந்தாலும், இப்போது சென்னையில் வசித்தாலும் அவருக்கு மட்டும் ‘நெல்லை கணேஷ்’ தான்!

அவர் எழுதியதைப் படித்ததும் மிகமிக மகிழ்ச்சியுடன் என் நண்பர்களுக்கு அதைக காண்பித்து விட்டு மதுரைக்கு வந்ததும் அவர் வீட்டைத் தேடிச் சென்றேன். அவரின் குடும்பத்தினரை அறிமுகம் செய்தார். என்னை அறிமுகம் செய்வித்தார். என்னைப் பற்றிச் சில வரிகள் எழுதியதற்கு நன்றி ‌சொன்னேன். அவரது எழுதும் அறைக்கு அழைத்துச் சென்றார். முதல் சந்திப்பில் பேச அவகாசம் கிடைக்காததை எல்லாம் அன்று பேசித் தீர்த்தேன். கதைகள் தவிர்த்தும் பல விஷயங்களில் அவருடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டார். அபிமான எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து நெருக்கமானவராக உணரத் தொடங்கியது அந்தச் சந்திப்பிலிருந்துதான்.

அதன்பின் மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் அவரைச் சந்தித்து உரையாடுவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாகிப் போனது. அப்போது அவர் ‘விக்ரமா விக்ரமா’ என்கிற தொடர் நாவல் எழுதிக் கொண்டிருந்தார். விக்கிரமாதித்தனும், வேதாளமும் இன்றைய உலகில் வந்தால் எப்படியிருக்கும் என்பதை வைத்து அதை எழுதத் துவங்கி இரண்டு நாவல்கள் வெளியாகியிருந்தன. அந்தச் சமயத்தில் சன் டிவியிலும் இதே கருத்தில் ‘விக்கிரமாதித்தன்’ தொடர் வெளியாவதற்கான அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிப் பேசும்போது ‘இப்படிப் ஒரு போட்டி ஏற்படுவது நல்லதுதான். .நாவலைப் படித்து விட்டு, அதேபோன்ற கதையை தொலைக்காட்சியிலும் பார்ப்பவர்களுக்கு உங்களின் தனித்தன்மை நன்கு புலப்படும்.’ என்றேன். இந்தக் கருத்தை ரசித்து, அடுத்த வந்த இதழில் எழுதினார்.

இவற்றை நான் சொல்லக் காரணம், ஒரு வாசகனாக என் மதிப்பீடு சரியாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைச் சொல்வதற்காகத்தான். நான் ‘க்ரைம் நாவல்’ அலுவலகத்தில் ஜி.அசோகன் அவர்களின் கீழ் பணி செய்தபோது, அங்கே‌ வெளிவந்து கொண்டிருந்த ‘பாக்கெட் நாவல்’ இதழில் மாதந்தோறும் இந்திரா செளந்தர்ராஜன்தான் நாவல்தான் வெளிவந்து கொண்டிருந்தது. அச்சமயங்களில் ஒவ்வொரு மாதமும் நாவலின் முடிவுப் பகுதியை அனுப்பியதும், போன் செய்து, ‘எப்படி இருந்தது?’ என்று கருத்துக் கேட்பார். மனதில் படும் நிறை குறைகளைத் தயங்காமல் சொல்வேன். ஏற்றுக் கொள்வார். ஏன் கதையை அப்படி முடிக்க வேண்டியிருந்தது, ஏன் அப்படி ஒரு திருப்பத்தை வைத்தேன் என்பதற்கான விளக்கங்களையும் ‌சொல்வார். அதைக் கேட்டுக் கொள்வதில் எனக்கு தனி மகிழ்ச்சி. (மற்றெந்த வாசகருக்கும் கிடைக்காத வாய்ப்பாயிற்றே!)

பொதுவாக அவரின் கதைகளும், அதில் சொல்லப்படும் கருத்துக்களும் எந்தக் குழப்பமுமின்றி தெளிவாக இருக்கும். என்றாலும் நிறைய இதழ்களுக்கும். தொலைக்காட்சித் தொடர்களுக்கும் ஒரே நேரத்தில் எழுதி வருகின்ற காரணத்தால், சில சமயங்களில் கதாபாத்திரப் பெயரை மாற்றி எழுதி விடுவார் என்பது அவரது பலவீனம். உதாரணமாக, முதல் ஐந்து அத்தியாயங்களில் பத்மினி என்று எழுதிவிட்டு ஆறாவது அத்தியாயத்தில் அதே கேரக்டரை பாரதி என்று எழுதி விடுவார். இதுபோன்ற விஷயங்களைக் கவனித்துக் குறிப்பிட்டால் என்னையே மாற்றிக் கொள்ளச் சொல்லி விடுவார். வேறு சில பதிப்பகங்களில் இப்படி வாசகர் நிலையில் படித்துக் கவனித்து மாற்றாமல் விட்டதால் பெயர் மாறி வந்த கதைகளும் உண்டு.

நெல்லையில் இருந்த காலகட்டத்தில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட விரும்பி அதற்கான உதவி கேட்டு அவரிடம் சென்றபோது, எதிர்பாராத அளவில் எனக்கு உதவினார். ஆனால் என்னால்தான் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விட்டது. அதைப் பற்றி...

                                                                             -தொடர்கிறேன்...

ரங்கராட்டினத்தில் சுற்ற... மேய்ச்சல் மைதானம்

Thursday, June 7, 2012

கொன்னவன் வந்தானடி!

Posted by பால கணேஷ் Thursday, June 07, 2012
‘மறுபடி க்ரைம் கதையா?’ன்னு சலிச்சுக்காதீங்க? அடுத்து வர்ற பதிவுகள்ல ட்ராக் மாறிடலாம். இப்ப சமர்த்தா இந்த மினிக்ரைம் கதையைப் படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க...!



‘‘சொல்லுங்க ஸார்! What can I do for you?’’ என்றான் அவன். என்றவன் உயரமாயிருந்தான். சிவப்பாயிருந்தான். நீள்வட்ட முகத்தில் ப்ரென்ச் தாடி வைத்திருந்தான். பெண்களை ஒரு கிழமைக்குள் கணக்குப் பண்ணி விடுவது போன்ற அழகுடன், பர்ஸனாலிட்டியாக இருந்தான். அவனானவன் பிரபு. ‘சன்ரே டிடெக்டிவ் ‌ஏஜென்ஸி’ நடத்தி வருபவன்.

‘‘எனக்காக நீங்க ஒரு கொலை பண்ணனும்’’ என்றார் அவர். என்றவர் குள்ளமாயிருந்தார், குண்டாயிருந்தார். தினசரி குடித்த உற்சாக பானங்களின் உபயத்தில் கன்னங்கள் கொழுத்திருந்தன. ஒரு தக்காளிப் பழத்துக்கு கண், மூக்கு, வாய் வைத்தது போன்ற தோற்றம் காட்டினார். அவரானவர் லக்ஷ்மி நாராயணன். பல பிசினஸ்களில் ஈடுபட்டுள்ள பெர்ரிரிரிரிய கோடீஸ்வரர்.

‘‘பார்டன் மீ! நீங்க தப்பான இடத்துக்கு வந்திருக்கீங்க. I'm not a professional killer you know... I'm a private deductive’’ என்றான். ‘‘Yes, You are a private duductive. அதுதான் வாசலில் போர்டே போட்டிருக்கிறாயே... நன்றாகத் தெரியும் இளைஞனே! என்னை சங்கரதாஸ் அனுப்பினார்...’’ என்றார்.

‘‘ஓ! Then no problem...! ‌சொல்லுங்க ஸார்... கொ‌லை பண்ணனும்னு சொன்னீங்க. சரி, யாரைப் பண்ணனும்?’’

‘‘என் மனைவியை!’’

‘‘நினைத்தேன் இந்த பதில்தான் வருமென்று. என் நிழல் வேலையில் வரும் க்ளையன்ட்களில் நூற்றுக்கு 90 பேர் மனைவியைத் தீர்த்துக் கட்டத்தான் வருகின்றனர். உங்கள் மனைவியைக் கொல்லச் சொல்வதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? சரியான காரணமின்றி நான் செயலில் ஈடுபடுவதில்லையென்பதை சங்கரதாஸ் சொல்லியிருப்பாரே...’’

‘‘துரோகம் மிஸ்டர் பிரபு! சாதனா! உறவினர் வீட்டுக் கல்யாணத்தில் அவளை முதல்முறை பார்த்தபோதே வசீகரித்தாள். அவளைத்தான் திருமணம் செய்வதென்று அடுத்த நிமிடமே முடிவு செய்து விட்டேன். பெண் கேட்டேன். அவள் தனக்கு ஒரு காதலன் ‌‌இருப்பதாகவும், வெளிநாட்டு வேலைக்குப் போயிருக்கும் அவன் அடுத்த ஆண்டு கான்ட்ராக்ட் முடிந்து வருவான் என்றும், தன்னை விட்டு விடும்படியும் கேட்டாள். எனக்கும் அவளுக்குமுள்ள வயசு வித்தியாசத்தைப் பேசிய அவள் வீட்டினர் வாயை வெள்ளமாகப் பணத்தை வீசி அடைத்தேன். சுற்றி வளைப்பானேன்... என் செல்வாக்கால் அவளைக் கவர்ந்து வந்து கல்யாணம் செய்து கொண்டேன். நான்கு நெடிய வருடங்கள்! இன்று வரைக்கும் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறேன். ஒரு குறையுமில்லாமல்தான் பார்த்துக் கொள்கிறேன் பிரபு! இருந்தும் அவள் எனக்கு துரோகம் செய்வதை சமீபத்தில் கண்டுபிடித்தேன்...’’

‘‘எப்படி...?’’

‘‘அவள் டைரியில் நிறையப் பக்கங்களில் ‘கிருஷ்ணா’ என்று எழுதி வைத்திருக்கிறாள். கேட்டால் கடவுளின் பெயரை எழுதினேனென்கிறாள். அது அவள் காதலனின் பெயர் என்பதை நான் அறிவேன். அடிக்கடி வரும் ஃபோன் கால்கள்! ஒரு சதிப் பார்வையுடன் ‘சொல்டி’ என்று பெண்ணுடன் பேசுவது போல பேசுவாள். ஒருமுறை அவள் பேசியதை மிக முயன்று ஒட்டுக் கேட்டதில் அந்தக கிருஷ்ணா என்பவன் காதல் பேசிக் கொண்டிருந்தான். அதுமட்டுமில்லை... சீக்கிரத்திலேயே என்னை தீர்த்துக் கட்டி விடுவதாகவும், என்னுடைய சொத்தை அவளுடன் சேர்ந்து அனுபவிககப் போவதாகவும் அவன் ‌சொன்னதற்கு, என்னால வெயிட் பண்ண முடியலை, சீக்கிரம் என்று அவள் ‌பதிலளித்ததை என் காதால் கேட்டேன் மிஸ்டர் பிரபு! ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்தவளை மாளிகையி்ல் வைத்து அன்பு செய்தவனுக்கு என்ன ஒரு துரோகம்! இனியும் அவள் உயிருடன் இருக்கலாமா? நான் முந்திக் கொள்ள வேண்டாமா? முதலல எனக்கு துரோகம் பண்ணின பாதகி! பிறகு அந்த கிருஷ்ணாவைக் கண்டுபிடி்ச்சு... அவன்!’’

கோ‌பாவேசமாகப் பேசிய அவருக்கு மூச்சிரைத்தது. அருகிலிருந்த மினி ஃப்ரிஜ்ஜிலிருந்து ஒரு மிரிண்டா பாட்டிலை ஓபன் செய்து நீட்டினான் பிரபு. ‘‘ரிலாக்ஸ் சார்...’’ வாங்கி கடகடவென்று ஒரே மூச்சில் காலி பண்ணிவிட்டுக் கீழே வைத்தார். ‘‘ரைட்! ;நான் ‌சொல்கிறபடி செய்தீர்களெனில் உங்கள் மனைவியை உங்கள் கையாலேயே கொல்லலாம்’’ என்றான் பிரபு. கேள்விக் குறியுடன் பார்த்தார் அவர்.

தன் மேஜை டிராயரில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்துக் காட்டினான் அவன். ‘‘ஸார்! இது நான் ஜெர்மன் போயிருந்தபோது வாங்கி வந்தது. இந்த மாத்திரையை இரவு உங்கள் மனைவி குடிக்கும் பாலில் கலந்து கொடுத்தீர்களென்றால் போதும். அடுத்த நாளே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்து விடுவாள். மாத்திரையின் தடயம் உடலில் தங்கியிராமல் மூச்சுக் காற்றிலேயே வெளியேறி விடுமென்பதால் எவ்வளவு பெரிய டாக்டர் போஸ்ட் மார்ட்டம் செய்தாலும், கொலை என்று கண்டுபிடிக்க முடியாது. ஹார்ட் அட்டாக்கில் இறந்தாள் என்றுதான் எழுதுவார்கள்...’’ என்றான்.

‘‘ரொம்ப தாங்க்ஸ் பிரபு’’ என்று கை நீட்டினார் அவர். ‘‘அதுசரி... இதை சும்மா உங்களிடம் தர நான் என்ன விரல் சூப்பும் பாப்பாவா? இதன் விலை இரண்டு கோடி ஸார்’’ என்றான். ‘‘என்னது...?’’ என்றார் அதிர்ச்சியுடன். ‘‘ஏன் ஸார் வியப்பு? உங்களுக்கு எந்த சிரமமும் தடயமும் இன்றி வேலையை முடித்துத் தரும் என் புத்திசாலித்தனத்தின் விலை இது! உங்களிடமிருக்கும் பணத்திற்கு இதெல்லாம் ஒரு பெரிய தொகையே இல்லை என்பதை நானறிவேன்’’ என்று சிரித்தான்.

‘‘ஆல்ரைட்...’’ என்று செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு நீட்டினார். ‘‘ஸாரி ஸார்! பணக்காரர்களை ஒரு சதவீதம்கூட நான் நம்புவதில்‌லை. நாளைக் காலை 10 மணிக்கு வாருங்கள். இரண்டு கோடியைத் தந்துவிட்டு, மாத்திரையைப் பெற்றுச் செல்லுங்கள். முடிந்தது விஷயம்’’ என்று கண்டிப்புடன் பிரபு சொல்ல, விடைபெற்றுச் சென்றார் லக்ஷ்மி நாராயணன்.

றுதினம் காலை 10 மணி. ‘ஸன்ரே டிடெக்டிவ் ஏஜென்ஸி’க்குள் தளர்ந்து போன நடையுடன் மெதுவாக வந்தார் லக்ஷ்மி நாராயணன். சேரில் அமர்ந்தவுடன், ‘‘கொஞ்சம் தண்ணி தர்றீங்களா?’’ என்று கேட்டு, அவன்தந்த ஒரு பாட்டில் தண்ணீரையும் குடித்துத் தீர்த்தார். ‘‘என்னாச்சு ஸார்?’’ என்றவனிடம் ‘‘என்னமோ தெரியல பிரபு... காலையிலருந்து ஒரே கால் வலி. நடக்கவே கஷ்டமாயிருக்கு. எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்க மாட்டேங்குது. இந்தாங்க நீங்க கேட்ட ரெண்டு கோடி’’ என்று ஒரு ப்ரீஃப்கேஸை மேஜை மேல் வைத்தார். பணத்தை எடுத்து ட்ராவில் பதுக்கி விட்டு, மாத்திரையை எடுத்துத் தந்தான் அவன்.

‘‘தாங்க்யூ மிஸ்டர் பிரபு! இந்த மாத்திரையை இன்னிக்கு ராத்திரியே அவளுக்கு பால்ல கலந்து தந்துடறேன். ஆனா, இது வேலை செய்யுதான்னு எப்படி நான் உறுதிப்படுத்திக்கறது?’’ என்று கேட்டார் சந்தேகமாக.

‘‘ஸிம்பிள் ஸார்! இன்னிக்கு இதைக் குடிச்சாங்கன்னா, அடுத்த நாள் காலையில அவங்களுக்கு கால் மரத்துப் போகறதால கால் வலி வந்து நடக்கவே கஷ்டப்படுவாங்க. எவ்வளவு குடிச்சாலும் தீராம தண்ணி தாகம் எடுத்துட்டே இருக்கும். இது ரெண்டும் இருந்தா ஈவ்னிங் மாஸிவ் ஹார்ட் அட்டாக் வர்றதையும், அவங்க சாகறதையும் யாராலயும் தடுக்க முடியாது...’’ என்று உரக்கச் சிரித்தான் பிரபு.

துணுக்கென்று உள்ளே ஏதோ பளிச்சிட, அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டார் லக்ஷ்மி நாராயணன். ‘‘மிஸ்டர் பிரபு... நீங்க சொல்றது...? யார்றா நீ?’’ என்றவரிடம் புன்னகை மாறாமல் பதிலிறுத்தான் அவன்: ‘‘என் முழுப் பேர் பிரபு கிருஷ்ணா!’’

Tuesday, June 5, 2012

நடை வண்டிகள் - 19

Posted by பால கணேஷ் Tuesday, June 05, 2012

இந்திரா செளந்தர்ராஜனும், நானும் - 2

ராஜேஷ்குமாரிடம் இந்திராஜியைப் பற்றிக் கேட்பதை நிறுத்திவிட்ட பின் பல மாதங்கள் கழித்து என்று சொல்லியிருந்தேன் இல்லையா... பல மாதங்கள் அல்ல, ஒன்றரை வருடங்கள் கழித்துத்தான் சந்‌தித்தேன். அந்த இடைக்காலத்தில் நான் திருநெல்வேலிக்கு மாற்றலாகிச் சென்று விட்டிருந்தேன். சுபாவின் சிறுகதைகளை டைப் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.

 முடித்தவற்றைக் கொடுத்து, அடுத்த செட் பெறுவதற்காக அவ்வப்போது சென்னை விஸிட் அடிக்க வேண்டியிருந்தது என்று ‘சுபாவும் நானும்’ பகுதியில் குறிப்பிட்டிருந்தேனல்லவா... அப்படி ஒரு முறை சென்னை செல்வதற்கு முதல்நாள் ரா.கு.வுடன் போனில் உரையாடி‌ய போது, சனி, ஞாயிறு சென்னையில் இருப்பேன் என்று சொன்னேன்.

‘‘நானும் சனி, ஞாயிறு சென்னைலதான் இருப்பேன் கணேஷ்.’’ என்றார் ராஜேஷ்குமார். தொடர்ந்து, ‘‘எழுத்தாளர் தேவிபாலா தொலைக்காட்சித் தொடர்ல 1000 எபிஸோட் எழுதிட்டதைப் பாராட்டி சனிக்கிழமை சாயங்காலம் காமராஜர் அரங்கத்துல ஃபங்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. சனிக்கிழமை சென்னைல இருப்பீங்கன்னா, விழாவுக்கு வாங்களேன். என் கெஸ்டா முன்னால உக்காந்து பாககலாம்’’ என்று அழைப்பு விடுத்தார். மிகுந்த மன மகிழ்வுடன் நான் அவசியம் வருவதாக அவரிடம் கூறினேன்.

சனிக்கிழமை சென்னை வந்ததும் சுபாவைச் சந்தித்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்ற பின், மாலை விழாவுக்குச் செல்வதைப் பற்றிக் குறிப்பிட்ட போது, அவர்களும் வருவதாகவும், பி.கே.பி. ஸாரும் வருவார் என்றும் சொன்னார்கள். 

கரூரிலிருந்து என் நண்பன் ஸ்ரீதரன் அப்போதுதான் சந்தையி்ல் பிரபலமாகியிருந்த, ஃபிலிம் போடாமல் ஃபைல்களாக சேமிக்கும் டிஜிட்டல் காமிரா என்ற வஸ்துவை எடுத்து வந்திருந்தான். நாங்கள் இருவருமாக மாலை விழாவுக்குச் சென்றோம். விழா துவங்குவதற்கு முன்பு வந்திருந்த பல வி.ஐ.பிக்களை சுட்டுத் தள்ளினேன் -காமெராவால். எஸ்.வி.சேகருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வந்தால் ரா.கு. வந்திருந்தார். அவருடன் வந்திருந்த ரவி தமிழ்வாணன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் தேவிபாலா வசனம் எழுதி‌ய சில எபிஸோடுகள் திரையிடப்பட்டு, அதில் நடித்த நடிகர்கள், புரொட்யூஸர்கள் மற்றும் அனைத்து எழுத்தாளர்களும் பாராட்டிப் பேசினார்கள். (விழா நிகழ்வை நான் எழுதப் போவதில்லை. பயப்படாதீர்கள்...) அந்த விழாவில் இந்திரா செளந்தர்ராஜன் வந்திருப்பதைப் பார்த்தேன். இந்த ஒன்றரை வருட காலத்தில் விகடனில் தொடர்கதை எழுதி பெயர் தெரிந்த எழுத்தாளராகியிருந்தார் இ.செள.ராஜன்.

நேராக ராஜேஷ்குமாரிடம் சென்று, ரவி தமிழ்வாணனிடம் பேசிக் கொண்டிருந்த அவர் தோளைக் கொத்தினேன். இந்திராஜியிடம் என்னை அறிமுகம் செய்து வைக்கும்படி ‌கேட்டேன். உடன் எழுந்து வந்து இந்திராஜியிடம், ‘‘இவர் உங்க தீவிர வாசகர். என் நண்பர். பேர் கணேஷ். தினமலர்ல வேலை பார்க்கறார். உங்களை அறிமுகம் செய்து வைக்கச் சொல்லி வருஷக்கணக்கா என்கிட்ட கேட்டுட்டிருக்கார்...’’ என்று அறிமுகப்படுத்திவிட்டு மீண்டும் அவர் இருக்கைக்குச் சென்று விட்டார்.

இந்திரா செளந்தர்ராஜன், ‘‘வாங்க, உக்காருங்க... என் கதைகள் படிச்சிருக்கீங்களா?’’ என்று கேட்டார். அவருடைய கம்பீரமான, அழுத்தமான குரல். அதனால் எனக்குத் தெளிவாகக் கேட்டது அவர் பேசியது. என் குரல் அப்படியல்லவே... நான் சொன்ன பதில் அவருக்கு சரியாகக் கேட்கவில்லை. சற்று உரக்க, ‘‘சார், உங்ககிட்ட விரிவாப் பேசணும். இது சமயமில்ல. நாளைக்கு பூரா சென்னைலதான் இருப்பேன். எப்ப ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொன்னா வந்து சந்திக்கறேன்’’ என்றேன். லஸ் கார்னரில் ஒரு ஹோட்டலின் பெயரும் அறை எண்ணும் குறிப்பிட்டு, அங்கே மறுநாள் மாலை ஐந்து மணிக்கு வரச் சொன்னார். விழா நிகழ்வுகள் முடிய இரவாகி விட்டதால், ரா.கு.விடம் சொல்லிவிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று விட்டோம்.

றுதினம் சரியாக மாலை ஐந்து மணிக்கு நானும் ஸ்ரீதரனும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக் கதவைத் தட்டினோம். நான் முன்பே சொன்னது போல அவருடைய முதல் நாவலைக் குறிப்பிட்டு, அதில் செக்ஸ் அதிகம் எழுதியிருந்ததற்கு என் கோபத்தை வெளியிட்டேன். கதைக் கரு அப்படி அமைந்து விட்டதால் வேறு வழியில்லை என்றும், இனி அப்படி அவர் எழுத்தில் வராது என்றும் தெரிவித்தார். (இன்றுவரை அவர் எழுத்தில் ஒரு துளியளவும் ஆபாசம் இருக்காது.)

அவர் எழுதிய இரண்டாவது நாவலான ‘பதுங்கும் நாகங்கள்’ நாவலைப் பாராட்டி விட்டு, அதில் ஓவியர் ஜெ. போட்டிருந்த நிர்வாணப் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்றும், அப்படி வருவது இந்திராஜியின் பெயரையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டேன். இந்த இடத்தில் ‘தாழம்பூ நாகங்கள்’ நாவலின் கதையைப் பற்றிச் சொன்னால் வியப்பீர்கள். ஒரு நடிகை பாத்ரூமில் குளிப்பதை யாரோ வீடியோ படம் எடுத்து வெளியிட்டு விட, அதை யார் என்று இன்ஸ்பெக்டர் ருத்ரா துப்பறிந்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுதான் கதை. (பல வருடங்களுக்குப் பின்னால் யாரோ ஒரு நடிகையின் குளியல் காட்சிகள் இணையத்தில் பரபரப்பாக உலாவியது; முன்பே அதை கற்பனையில் எழுதியிருந்தார் இந்திராஜி).

அதன் பிறகு, அதுவரை வெளியாகியிருந்த அவர் நாவல்களைப் பற்றி நான் விமர்சித்ததையும், அவர் பதிலளித்ததையும் விரிவாகச் சொன்னால் உங்களுக்குப் போர் அடிக்கும், வேறு தளத்திற்குத் தாவி விடுவீர்கள். எனவே... அப்போது அவர் எழுதிக் கொண்டிருந்த கான்ஸெப்ட் பற்றியும், இனி எழுதப் போகும் விஷயங்கள் பற்றியும் பேசினோம். அந்த முதல் சந்திப்பில் படைப்புலகம் தவிர்த்து வெளி விஷயங்கள் எதுவும் பேசவில்லை. கொஞ்சம் பேச்சில் கலந்து கொண்டும், நிறைய கவனித்துக் கொண்டும் இருந்தான் என் நண்பன் ஸ்ரீதரன். அதுவும் நல்லதாகப் போயிற்று..! பேச்சில் மூழ்கிவிட்ட எனக்கு, மணி எட்டைத் தாண்டி விட்டதை அவன் நினைவுபடுத்தினான்.

ஒன்பதரைக்கு எங்களுக்கு பஸ்! சாப்பிட்டு வி்ட்டு பஸ் பிடிக்க நேரமாகிவிடும் என்பதால் இந்திராஜியிடம், ‘‘உங்களை மாதிரி ஆள்கிட்ட எவ்வளவு நேரம் வேணாலும் பேசலாம் ஸார். ஆனா எனக்கு பஸ் பிடிக்க நேரமாயிடுச்சு. புறப்படறேன்’’ என்று விடைபெற்றேன். ஒரு பேப்பர் எடுத்து, நான் எங்கே வேலை செய்கிறேன், முகவரி எல்லாம் கேட்டு குறித்துக் கொண்டார். அவரின் முகவரியை எழுதிக் கொடுத்தார். ‘‘அட, பைக்காராலதான் இருக்கீங்களா? எங்க சித்தப்பா வீடு டி.வி.எஸ்.நகர்ல இருக்கு அடிக்கடி வருவேனே...’’ என்றேன். ‘‘டி.வி.எஸ். நகரா... ரயில்வே லைனை ஒட்டி நடந்தா, எங்க வீட்டுக்கு நடந்தே வந்துடலாமே... அடிக்கடி வாங்க...’’ என்றார்.

டுத்த முறை மதுரை சென்றால் அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு திருநெல்வேலிக்குப் ‌போய்ச் சேர்ந்தேன். என் வழக்கமான பணிகள் என்னை ஆட்கொண்டன. ஆனால் அடுத்த மாத‌மே இந்திராஜி எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தார். அதனால் உடனே மதுரைக்கு அவரைப் பார்க்க ஓடினேன். அது என்ன இன்ப அதிர்ச்சி என்பதை...

-தொடர்கிறேன்...!
கத்தரித்தவை-2 படித்துச் சிரிக்க - மே.மை

Sunday, June 3, 2012

‘நண்பேன்டா!’ன்னு சொல்லலாமா..?

Posted by பால கணேஷ் Sunday, June 03, 2012

நாகேஷ் எப்போதும் யாரையாவது கேலி செய்து கொண்டே இருப்பார். சிலருககு அதை ஜீரணித்துக் கொள்ளுவது பல நேரங்களில் கஷ்டமானதாகக் கூட இருக்கும். அதைப் பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதில்லை. தன்னைப் பிறர் அதே போல் கேலியோ, கிண்டலோ செய்தால்... ஆஹா! அதை அவரே ரசிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்து நாம் வாய்விட்டுச் சிரித்து மகிழலாம். ஒவ்வொருவராக அழைத்து, ‘‘இதோ பார்த்தீங்களா! இவர் என்னைப் பற்றி இப்படிப் பேசினார். எப்படி ஜோக்? புத்திசாலித்தனமாக மடக்கி விட்டார் பார்த்தீர்களா?’’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி ஆனந்தப்படுவார். அப்படிப்பட்ட பெருமனம் அவருக்கு.

ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகி விட்டார்கள் என்பதை வெளிக்காட்ட நமது பெரியவர்கள் எத்தனையோ சிறப்பான வழிகளைச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தத் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு சிலர் அவர்களுக்கென்றே ஒரு தனி வழியைக் கடைப்பிடிப்பதைக் காணுகின்றேன்.

அதாவது, நெருங்கிப் பழகியதும் தங்கள் இருவருக்குமிடையில் உள்ள வயது வித்தியாசத்தைக் கூட கவனியாது, ‘‘ஏண்டா... எப்படா வந்தே?’’ ‘‘ஏ கழுதே... என்னெப் பாக்காம எங்க போறே?’’ என்று இப்படி ஏக வசனத்தில் பேசுவதையும், வேறு யாரிடமாவது தனது நெருங்கிய நண்பரைப் பற்றி்ப் பேசும்போது கூட, ‘‘அவன் ஒரு ஃபூல்! (Fool).’’ ‘‘அவன் எப்பவும் இப்படித்தான்’’ என்றெல்லாம் குறிப்பிடுவதையும் தங்களுக்கிடையில் இருக்கும் நட்பை வெளிக்காட்டிக் கொள்வதாக எண்ணிக் கொள்கிறார்கள்.

னது நெருங்கிய நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னைக் காண என் வீட்டுக்கு வந்தான். அப்போது நான் குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். வந்த நண்பன் என் தாயாரிடம், ‘‘ஏம்மா, ராமச்சந்திரன் இருக்கானா?’’ என்ற கேட்டான்.

தாயார்: ‘‘ஏம்ப்பா... உன்னெ வரச் ‌சொன்னானா?’’

நண்பன்: ‘‘சுத்த மடப்பய! என்னெக் காலங்காத்தாலெ வாடான்னு சொல்லிட்டு இவன் பாட்டுக்கு எங்கேயோ போயிட்டானே... சேச்சே..!’’

தாயார்: ‘‘நீங்க ரெண்டு பேரும் சிநேகிதர்களா?’’

நண்பன்: ‘‘ஆமாம்மா. இவனெப் போய் சிநேகிதம் பண்ணிக்கிட்டேனே, என்னெ அடிக்கணும்!’’

என் தாயார் அவனை அதற்கு மேல் பேச விடாது தடுத்து, ‘‘ஏம்பா..! நான் சொல்றதைக் கவனி! உன்னுடைய சிநேகிதனைப் பத்தி நீயே தரக்குறைவாப் பேசினா, அவனை யார் மதிப்பா? நீ அவனெ மதிக்காதபோது அவனுடைய சிநேகிதனா உனக்கு எப்படி மத்தவங்க மரியாதை காண்பிப்பாங்க? உன் நண்பனுக்கு நீ பெருமை தேடித் தரணுமே தவி‌ர, அவனுககு இருக்கிற நல்ல பேரையும் கெடுத்துடக் கூடாது. உங்க சிநேகிதம் எப்படியோ இருக்கட்டும். அது நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது வெச்சுக்குங்க... ஆனா, பலர் முன்னிலையிலே இதெல்லாம் வேண்டாம்...’’ என்றார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... அன்று முதல் பிறர் முன்னிலையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் யாரைப் பற்றியும் ஏக வசனத்தில் பேசுவதே கிடையாது. பிறர் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்வதும் கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் இந்தச் சினிமா உலகத்தில் இப்படித் தரக்குறைவாகப் பிறர் முன்னிலையில் நடந்து கொள்வதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை என்று தோன்றுகிறது.

துவும் எனக்கு நினைவுககு வருகிறது. இதெல்லாம் தவறான வழியில் தன் மனத்தை வளர்த்துக் கொண்ட, நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு, மேலே மேலே செல்லும் துணிவில் ஏற்படுகின்ற விபரீதத்தினால்தான் என்பதை நாம் உணருகிறோம். நெருங்கிய நண்பர்களாகட்டும் அல்லது உரிமையோடு பழகும் தன்மை பெற்றவர்களாகட்டும், அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் தனிமையில் பேசிக் கொள்வதைப் ‌போல் பொது இடத்திலும் பேசுவது சரியாயிராது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இங்கே இதுபற்றி நான் நினைவுபடுத்திக் கொண்டதற்குக் காரணம் உண்டு. இந்தப் பயணத்தின்‌போது தம்பி நாகேஷ் எல்லோரிடத்திலும் பழகும் போது காட்டும் நல்ல பண்புகளைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் அவர் ஒரு சிலரிடம் மட்டும் உரிமையோடு பேசுாவதையும் கவனித்தேன். தம்பி அசோகன், ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவ் இந்த இருவரை மட்டும்தான் ‘டே’ போட்டுப் பேசினார்.

அந்தப் பேச்சு கீழ்த்தரமாகவோ, கேவலமாகவோ இல்லை. அவர் அப்படிப் பேசவும் மாட்டார். ஆனால் உரிமையுடன் அவர் அப்படிப் பேசும்போது புரியாதவர்களுக்கு அது வேறுவிதமாகத் தோ்ன்றிவிடக் கூடுமோ என்று நான் எண்ணினேன். தன்னால் அடக்கிக் கொள்ள முடியாத மகிழ்ச்சி ஏற்பட்ட போதுதான் அப்படி அவர் அந்த இருவரிடமும் நடந்து கொண்டாரே தவிர, வேறு எப்போதும் யாரிடமும் எத்தகைய மரியாதைக் குறைவான பேச்சையோ, கருத்தையோ வெளிப்படுத்தியதே கிடையாது என்பதையும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல... அவரால்தான் எங்களது பயணம் பெரும்பாலும் மகிழ்ச்சியோடும், வேடிக்கை, விளையாட்டு என்ற வகையிலும் கலகலப்பு கலந்ததாகவும் இருந்தது என்று சொல்லுவதுதான் மிகமிகச் சரியாக இருக்கும்.

ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம் ஜப்பான் கடலைக் கடந்து ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘‘ஏன் மிஸ்டர் நாகேஷ், நாம் இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்?’’ -இது கேள்வி. ‘‘கொஞ்சம் இரு. வெளியே எட்டிப் பார்த்தச் சொல்றேன். மைல்கல் வெளியேதானே நட்டிருப்‌பான்! பார்த்துட்டாப் போறது!’’ என்ற பதிலைச் சொன்னார் நாகேஷ். அவ்வளவுதான்... சொர்ணமும் மற்றவர்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர்.

சாகாவை நெருங்க நெருங்க விமானம் மேலும் கீழும் ஆடியது. அதுவரையில் வெளிப்படையாக உரத்துப் பேசாதிருந்த திரு.அசோகன் கேட்டார். ‘‘என்ன நாகேஷ்! கீழே கீழே அப்படி இப்படி இறங்கி பயமுறுத்தறான்?’’ திரு.நாகேஷின் பதில்: ‘‘ஒண்ணுமில்லே... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்!’’

-இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு யாரால்தான் சிரிக்காமல் இருக்க முடியும்?

-எம்.ஜி.ஆர். எழுதிய ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ நூலிலிருந்து.

Friday, June 1, 2012

துப்பாக்கி விடு தூது

Posted by பால கணேஷ் Friday, June 01, 2012
(1)

சிங்கப்பூர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். மக்கள் பரபரப்பாக நடமாடிக் கொண்டிருந்தனர். தான் வாங்கிய பொருட்களுக்கு கேஷ் கவுண்ட்டரில் பணம் செலுத்திக் கொண்டிருந்த செல்வம், பின்னால் கேட்ட சிரிப்புச் சத்தத்தினால் ஈர்க்கப்பட்டுத் திரும்பினான். அந்தச் சிரிப்பு... ரம்யாவா அவள்? பின்னால் இருந்த காஸ்மெடிக் செக்ஷனில் நின்றிருந்த அவள்... ரம்யாவேதான்! அவன் மனதில் பதிந்ததாயிற்றே அவளின் அந்தச் சிரிப்பு! ஒரு கண்ணாடி மேஜையில் கை நிறைய சில்லறைக் காசுகளை அள்ளி வீசிப் பாருங்கள்.... ‘கலகல’வென்ற வி்த்தியாசமான ஒரு ஒலி கேட்கவில்லை? அதுபோலத்தான் ரம்யாவின் சிரிப்பு! அந்தச் சிரிப்பினால் ஈர்க்கப்பட்டுத்தானே அவளைக் காதலிக்கவே ஆரம்பித்தான்.

கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் காதலித்த அவர்கள் மூன்றாம் ஆண்டு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். மூன்றாம் ஆண்டின் மத்தியில் செல்வத்தின் அப்பா இறந்துபோனதால் கிராமத்துக்குச் சென்று அப்பாவின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வந்தான் செல்வம். திரும்பி வந்த போது கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு ரம்யா சென்று விட்ட செய்திதான் கிடைத்தது. அதன்பின் அவள் கல்லூரியில் கொடுத்திருந்த அவள் சொந்த ஊர் அட்ரஸுக்குப் போய்ப் பார்ததான். வீட்டைக் காலி செய்துவிட்டு, ஊரை விட்டே போய் விட்டார்கள் என்ற தகவல்தான் கிடைத்தது.

அதன் பின் நான்கு ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இன்றுதான் அவளை மீண்டும் பார்க்கிறான். அருகில் நின்றிருந்த ஒரு நபருடன் சிரித்துப் பேசியபடி அவள் ஷாப்பிங் செய்து கொண்டிருக்க, மெல்ல அவளை நெருங்கினான். அருகில் நெருங்கியபோதுதான் அது கண்ணில் பட்டது. ரம்யாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் கண்ட செல்வம் அதிர்ந்து போனான்.

(2)

‘ரம்யாவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?’ அதிர்ச்சியோடு பார்த்தான் செல்வம். அருகில் நின்றிருந்த அவள் கணவன் உயரமாய், வழுக்கைத் தலையுடன், சற்று குண்டான ஓமக்குச்சி நரசிம்மனைப் போல இருந்தான். ரம்யா முன்பை விட சற்று கொழு கொழுவென்றிருந்தாள். அவன் அடிக்கடி கிள்ளி ரசித்த அவளின் கன்னங்கள் இப்போது இன்னும் சற்று பம்மென்று பணத்தின் செழுமையுடன் உப்பியிருந்தது. அவர்கள் வெளியே வர, செல்வம், பதுங்கியபடி அவர்களைத் தொடர்ந்து சென்று அவள் முகவரியைத் தெரிந்து கொண்டான். அதன்பின் அவள் கணவனைப் பற்றிய விவரங்களை சேகரிக்க அதிக நேரமாகவில்லை. அவள் கணவன் சிவராமன் அரசியல் செல்வாக்குப் படைத்த, மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதை அறிந்ததும் செல்வத்தின் மூளை துரிதமாக வேலை செய்தது.

டெலிபோனின் கதறலை ரிஸீவரை எடுத்து அடக்கினாள் ரம்யா. ‘‘ஹலோ... ரம்யா! செளக்கியமா...?’’ என்றது குரல். அந்தக குரல்...? ‘‘செ... செ... செல்வமா?’’ என்றாள். ‘‘பரவாயில்லையே... இன்னும் ஞாபகம் வெச்சிருக்கியே...’’ என்றான். ‘‘ப்ளீஸ் செல்வம்! அவர் வீட்ல இருககார். ஈவ்னிங் ஆறு மணிக்கு மத்ஸ்யா ரெஸ்ட்டாரண்ட் வா. அங்க பேசலாம்’’ என்றுவிட்டு போனை வைத்தாள்.

செல்வத்தை நேரடியாகப் பார்த்தாள் ரம்யா. ‘‘செல்வம்! இவ்வளவு தூரம் விளக்கிச் சொல்லியும் உனக்குப் புரியலையா? சூழ்நிலை‌க் கைதியா வேற வழியில்லாம நான் இவரைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சு. நீ வேற நல்ல பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்க. இனி நாம சந்திக்கிறதாலேயோ... பேசறதாலேயே... என்ன பிரயோஜனம்?’’ என்று கண்ணீருடன் கூறிய அவள், அவன் தந்த பதிலைக் கேட்டதும் அதிர்ந்து போனாள்.


(3)

‘‘பிரயோஜனம் இருக்கு ரம்யா. நீ என்னோட சேர்ந்து எடுத்து்க்கிட்ட போட்டோக்களும், எனக்கு காதல் ரசம் சொட்டச் சொட்ட நீ எழுதின கடிதங்களும் இப்பவும் பத்திரமா என்கிட்ட இருக்கு. அது சிவராமன் கைக்குப் போகணும்னு நீ நினைக்கிறியா?’’ என்றான். ‘‘செ...ல்...வ...ம்...’’ என்றாள் அதிர்ச்சியுடன். ‘‘திமிங்கிலத்தோட தோலை கொஞ்சமா சுரண்டினா அதுக்குத் தெரியாது ரம்யா. நீ என்ன பண்றே... அஞ்சு லட்ச ரூபாய் எடுத்துட்டு நாளைக்கு இதே ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வந்து கொடுக்கறே... இல்ல.... உனக்கே தெரியும்’’ என்றபடி அவன் எழுந்து நடக்க... பிரமிப்பாய் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.

ப்போது தொடங்கியது அந்தக் கொடூரமான ப்ளாக்மெயில் படலம். செல்வம் ஒவ்வொரு கடிதமாகக் கொடுத்து, அவளை பொ.மு.வாத்தாகப் பாவிததுப் பணம் கறந்தான். ‘‘செல்வம்! இதுக்கு மேல என்னை சித்திரவதை பண்ணாத. மொத்தமா ஒரு தொகைய வாங்கிட்டு என்னை விட்று’’ என்று கெஞ்சினாள் ரம்யா. ‘‘ஆமாம் ரம்யா. எனக்கும் இப்படி பணத்தை வாங்கி செலவு பண்ணி சலிச்சுப் போச்சு. அதுனால... நான் வேற ஒரு ஐடியா வெச்சிருக்கேன்....’’ என்றவன் சொன்ன யோசனையைக் கேட்டதும் அலறி விட்டாள். ‘‘நோ... செல்வம்!’’

‘‘எஸ்! அதான் சரியான வழி. இன்னிக்கு நைட் பத்து மணிக்கு உன் வீட்டு சுவரேறிக் குதிச்சு பெட்ரூமுக்கு வர்றேன். பால்ல தூக்க மாத்திரையக் கலந்து சிவராமனைத் தூங்க வெச்சிடு. நான் என் துப்பாக்கியில இருந்து தோட்டாவை அவர் உடம்புக்குத் தூது விடறேன். அவர் மண்டையப் போட்டதும் பாடிய டிஸ்போஸ் பண்ணிடறேன். நீ பணக்கார விதவையா சில மாசம் இருந்துட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும். எனக்கு என் காதலியும் கிடைப்பா, கோடீஸ்வரனாயும் ஆய்டுவேன். போடி... போய் நான் சொன்னதைப் பண்ணு கண்ணு!’’ என்றான் கோணலாய்ச் சிரித்தபடி. அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் ரம்யா.

(4)

ரவு. தேர்ந்த திருடனைப் போல, அவள் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து, ட்ரெய்னேஜ் பைப்பில் ஏறி, பால்கனியில் குதித்து... அவள் பெட்ரூம் ஜன்னலில் முகம் வைத்துக் குரல் கொடுத்தான் செல்வம். ரம்யா முகத்தில் பயத்துடன் அருகில் வர, கதவைத் திறக்கச் சொல்லி சைகை செய்தான். அவள் கதவைத் திறந்ததும், தன் பின்னால் தள்ளிவிட்டபடி, அடுத்த கணமே படுக்கையில் போர்த்திப் படுத்திருந்த சிவராமனைச் சுட்டான். சத்தமும் காணோம்; ரத்தமும் காணோம். சந்தேகமாக அருகில் சென்று போர்வையை விலக்கியவன் அதிர்ந்தன். உள்ளே வெறும் தலையணைகள்.

அதிர்ச்சியுடன் செல்வம், ரம்யாவின் பக்கம் திரும்ப, பளிச்சென்று விளக்குகள் எரிந்தன. ‘‘நான் இங்க இருக்கேன் தம்பி!’’ என்றார் அறைக் கதவின் அருகில் நின்றிருந்த சிவராமன். அதிர்ச்சியிலிருந்து மீண்டு செல்வம் துப்பாக்கியை உயர்த்துவதற்கு முன், அவரின் துப்பாக்கி பேசி, அடுத்தடு்த்து மூன்று தோட்டாக்களை அவன் உடலுக்கு தூது அனுப்பியது. அலறவும் நேரமின்றி சரிந்து விழுந்தான் செல்வம். ‘‘டோன்ட் வொர்ரி, ஹனி. இவன் பாடியை சத்தமில்லாம அப்புறப்படுத்த ஏற்பாடு பண்ணிட்டேன். செல்வம்னு ஒருத்தன் உலகத்துல வாழ்ந்த தடயமே இல்லாம துடைச்சு எடுத்துடுவாங்க என் ஆட்கள்!’’ என்றபடி அருகில் வந்து அவளை அணைதுக் கொண்டார் சிவராமன்.

‘‘முட்டாளே...! எப்படியும் கொலைதான் இறுதி வழின்னு ஆனப்புறம், உன்னோட சேர்ந்து என் புருஷனைக் கொன்னுட்டு டென்ஷனோடயும், பயத்தோடயும் வாழ நான் தயாரில்லை. பதிலா, அவர்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி, உன்னை அப்புறப்படுத்திட்‌டா, இவரோட நிம்மதியா வாழறது எனக்கு ஈஸி! நினைச்சேன்; செஞ்சுட்டேன்’’ என்றபடி செல்வத்தின் உடலை உதைத்துத் தள்ளிவிட்டு சிவராமனுடன் பெட்ரூமுக்குள் நுழைந்தாள் ரம்யா.
*
‘ரங்கநதி’யில் நீராட விரும்பினால் மேய்ச்சல் மைதானம் செல்க!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube