Saturday, September 20, 2014

விருது வாங்கலையோ... விருது..!

Posted by பால கணேஷ் Saturday, September 20, 2014
லையுலகில் இப்போது விருது வழங்கும் சீசன் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது. THE VERSATILE BLOGGER என்கிற விருதானது எங்கிருந்தோ துவங்கி, ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கி, விருது பெற்றவர்கள் நன்றிகூறி மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்து... என்று வலையுலகம் சுறுசுறுப்பாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் THE VERSATILE BLOGGER, AWSOME BLOGGER என்று விருதுகள் மழை அனைவரின் தளத்திலும் பொழிந்து ஓய்ந்திருந்தது.

எனக்குக் கிடைத்த பல விருதுகளை நான் என் தளத்தில் ஒட்டி அலங்கரிக்கவில்லை. அதற்குக் காரணம் இவை பற்றி எனக்கிருந்த மாறுபட்ட கருத்துக்களே.  அவற்றை விரித்துரைப்பதால் பலர் மனம் புண்படக் கூடுமே என்பதால் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. இப்போதும் அப்படியே இருந்துவிடலாம் என்று எண்ணினாலும் மனசு கேட்கவில்லை. மாறி மாறி வரும் + மற்றும்- சிந்தனைகளின் ஊசலாட்டத்தின் ஊடேதான் இப்போது டைப்பிக் கொண்டிருக்கிறேன்.

+ விருதுகள் பகிரப்படறதனால பதிவர்களுக்கு உற்சாகம் கிடைக்குதா இல்லையா...? நம் படைப்புக்கான அங்கீகாரத்துக்கு ஏங்கித்தானே நாமல்லாம் எழுதவே செய்யறோம். அதுமாதிரி நாம நல்லா செயல்பட்டுட்டிருக்கோம்கறதுக்கு இந்த விருது ஒரு சாட்சியில்லையா...?

- விருதுங்கறது என்ன...? ஏதாவது ஒரு துறையில சாதனை பண்ணினவங்களுக்கோ, இல்ல தனித்திறமை படைச்சவங்களுக்கோ அவங்களைப் பாராட்டி வழங்கப்படறது. இங்க ஒரு விருதை எடுத்துக்கிட்டு பெருமாள் கோயில் புளியோதரை மாதிரி ஆளாளுக்கு பகிர்ந்துட்டிருந்தா அந்த விருதுக்கு என்ன  மரியாதை? அத்தனை பேர் ப்ளாக்லயும் இந்த விருது ஒட்ட வைக்கப்பட்டிருந்தா அதுக்கு என்ன வேல்யூ? ஒரு ஊர்ல இருக்கறவன் பூரா ரஜினிகாந்தா இருந்துட்டா ரஜினிக்கே வேல்யூ கிடையாதே....?

+ நான் விருதைக் குடுத்தவங்க அதை இன்னொரு அஞ்சு பேருக்கு பகிர்ந்தா, அந்த அஞ்சு பேர்ல எனக்கும் தெரியாதவங்க யாராச்சும் இருந்தா இப்ப அறிமுகமாயிடுவாங்கல்ல... இப்படி தொடர்ந்து போற சங்கிலியக் கவனிச்சா நிறையப் பதிவர்களோட அறிமுகம் கிடைச்சு வலையுலகத் தொடர்புகள் விரிவாகி இன்னும் நெருக்கமாத்தானே ஆகும்...? அது நல்லது தானே!

- ஏதாவது ஒரு போட்டி வெச்சு, அதுல ஜெயிக்கறவங்களுக்கு விருதுன்னு பண்ணினா, அதுல கலந்துக்கறவங்க லிஸ்டை வெச்சே நிறைய நட்பு வட்டம் பெருகுமே... அப்படி ஆண்டுக்கு நாலஞ்சு பேர் ஜெயிச்சால்ல அந்த விருதுக்கே சிறப்பு...? இல்ல, சிறப்பா செயல்படற ப்ளாக்கர்னு சிலரை நாமினேட் பண்ணி மத்த ப்ளாக்கர்ஸ் ஓட்டுப் போட்டு செலக்ட் பண்ணின ப்ளாகர்ஸ்க்கு கொடுத்தாலாவது நியாயம்..? இப்படி எல்லாரும் எல்லாருக்கும் சாக்லெட் தர்ற மாதிரி தர்றது என்ன நியாயம்...?

+ விருது கொடுக்கப்படுதுன்னா அதுக்குப் பின்னால அதை உனக்குத் தர்றவங்க உன் மேல வெச்ச அன்பும் மரியாதையும் இருக்கறது உன் கண்ணுக்குத் தெரியலயா...? அதை எப்படிக் குறை சொல்ல முடியும்...? உன்னை யாருக்காவது பகிரச் சொன்னாலும் அப்படி நீ அன்பு வெச்சிருக்கறவங்களுக்குத் தானே பகிர்வே...?

- விருதுகளை இப்படி அன்பின் காரணமா வழங்கறது சரிதானா...? இதுக்கு தங்களுக்குப் பிடிச்ச அன்பும் மரியாதையும் உள்ளவங்களுக்கு ஏதாச்சும் பட்டம் கொடுத்துப் பாராட்டலாம் இல்லையா..? சினிமாக்காரங்க புரட்சிங்கற வார்த்தைய அவனவன் விதவிதமா தன் பேருக்கு முன்னால சேர்த்துக்கற மாதிரி ப்ளாக் சம்பந்தப்பட்ட அடைமொழிகளைக் குடுத்துக்கிட்டா சிம்பிளா முடிஞ்சு போகுமே விஷயம்..!

ப்படி மாறிமாறி சிந்தனைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. அதனாலதான் என் தங்கை மைதிலி கஸ்தூரிரங்கனும், அன்பு நண்பர் மதுரைத் தமிழனும் வழங்கிய இந்த விருதை நான் இன்னும் யாருக்கும் பகிரவில்லை. இந்த இரண்டு அன்புள்ளங்களும் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டு மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை  எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன் அவர்களுக்குக் காட்டும் அன்பின் வெளிப்பாடாக இதை என் தளத்தில் வைக்கிறேன் சிலகாலம். இந்த விஷயத்தில் நான் ஒரு தெளிவுக்கு வர உங்களின் கருத்துக்கள் கலங்கரை விளக்காக வழிகாட்டும் என்று நம்பிக்கையுடன் வரப்போகும் கருத்துகளுக்காக ஆவலுடன் என் காத்திருப்பு. நன்றி.

Monday, September 15, 2014

மதுரைக்குப் போகலாம், வாரீகளா...?

Posted by பால கணேஷ் Monday, September 15, 2014
னைவருக்கும் வணக்கம். மதுரையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்க இருக்கும் மூன்றாமாண்டு வலைப்பதிவர்  திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் என் தளத்தில் பதிவர்களின் வருகையை உறுதி செய்து கொள்ளும்படியான படிவம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனைப் பூர்த்தி செய்து இன்றைய தினம் வரையில் தங்களின் வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் பட்டியல் இதோ...

1. சிதம்பரம் என்ற சீனா (வலைச்சரம்), 2) தமிழ்வாசி பிரகாஷ் (தமிழ்வாசி), 3. பொன். தனபாலன் (திண்டுக்கல் தனபாலன்), கவிஞர். 4. திருமலை சோமு (thirumalaisomu.blogspot.com), 5. பகவான்ஜி (ஜோக்காளி), 5. பாலகணேஷ் (மின்னல் வரிகள்), 6. கவியாழி (கவியாழி), 7. sithayan sivakumar (விழிப்புணர்வு), 7. சங்கர இராமசாமி (கனிச்சாறு), 8. செல்வின் (அஞ்சாசிங்கம்), 9.வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 10. சசிகுமார் (வந்தேமாதரம்), 11. ஜீவானந்தம் (கோவை நேரம்), 12. சித்தூர் முருகேசன் (அனுபவஜோதிடம்) , 13. கருப்பணன் (karuppanan), 14. நா.முத்துநிலவன் (வளரும் கவிதை), 15. சுரேஷ்குமார் (கடல் பயணங்கள்), 16. பாலாஜி (அநியாயங்கள்), 17. மு.கீதா (தென்றல்), 18. கா.ந.கல்யாணசுந்தரம் (கவிதைவாசல்), 18. முருகன் (gurumurugan.blogspot.com), 19.கருண்குமார் (வேடந்தாங்கல்), 20. யானைக்குட்டி (http://yanaikutty.blogspot.in), 20. கோவை ஆவி (பயணம்), 21. செல்வி ஷங்கர் (பட்டறிவும் பாடமும்), 21. வியபதி (ஏதாவது எழுதுவோம்), 22. இராய செல்லப்பா (செல்லப்பா தமிழ் டயரி), 23. முகமதுநவாஸ்கான் (99Likes (Tamil Computer Tips), 24. கரந்தை ஜெயக்குமார் (கரந்தை ஜெயக்குமார்), 25. கேபிள் சங்கர் (கேபிள் சங்கர்), 26. ஜெய் (பட்டிகாட்டான் பட்டணத்தில்), 27. இ.வரதராஜபெருமாள் (குமாரபாளையம் குடமுருட்டி), 28. திலிப் நாராயணன் (அழகிய நாட்கள்), 29. J. நிஷா (யாமிதாஷா), 30. புலவர் இராமாநுசம் (புலவர் குரல்), 31. மதுமதி (மதுமதி.காம்), 32. வெங்கட் நாகராஜ் (சந்தித்ததும் சிந்தித்ததும்), 33. ம.கோகுல் (கோகுல் மனதில்), 34. விமலன் (சிட்டுக்குருவி), 34. ஆர்.வி.சரவணன் (குடந்தையூர்) 35. முனைவர் துரை.மணிகண்டன் (மணிவானதி), 36. துளசி கோபால் (துளசிதளம்), 37. விஜயன் துரை (கடற்கரை), 38. சி.வெற்றிவேல் (இரவின் புன்னகை), 39. சரவணன் (ஸ்கூல் பையன்), 40. கவி. செங்குட்டுவன் (கல்விக்கோயில்), 41. எஸ்.விஜயநரசிம்மன் (svijayanarasimhan.blogspot.in), 42. ஸபி (சக்கரக்கட்டி), 43. சம்பத்குமார் (தமிழ் பேரண்ட்ஸ்), 44. முனைவர் நா.சிவாஜி கபிலன் (தூரிகை கபிலன்), 45. அரசன் (கரைசேரா அலை), 46. ரூபக் ராம் (சேம்புலியன்), 47. தி தமிழ் இளங்கோ (எனது எண்ணங்கள்), 48. வெ.கோபாலகிருஷ்ணன் (மதுரகவி), 49. அ.ரா.சங்கரலிங்கம் (உணவு உலகம்), 50. அகிலா (சின்ன ச்சின்ன சிதறல்கள்), 51. கோவிந்தராஜ்.வா (தமிழன்), 52. பொய்யாமொழி (தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்), 53. அறிவு விக்னேஷ்குமார் (தோழன்), 54. சிவபார்கவி (சிவபார்கவி), 55. வஹாப் ஷாஜஹான் (டாஸ்மாக் செய்திகள்), 56. நிவாஸ் (medimiss), 57. நக்கீரன்.ஜெ (நாய் நக்ஸ்), 58. சைதை அஜீஸ் (saidaiazeez), 59. பரமேஸ்வரன் (கொங்குதென்றல்).

இதுவரை பதிவு செய்து கொள்ளாத நண்பர்கள் கீழ்வரும் இணைப்புகளில் சென்று தங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளவும். 
எத்தனை பேர் வருவார்கள் என்பதை உத்தேசமாகக் கணக்கிட முடிந்தால்தான் சிறப்பாக வரவேற்பதற்கும் நிகழ்ச்சியைத் திட்டமிடவும் ஏதுவாக இருக்கும். ஆகவே, இதைத் தவறாமல் செய்யவும்.நேற்று புலவர் இராமாநுசம் ஐயா அவர்களின் வீட்டில் சென்னைப் பதிவர்கள் (சிலர் வர இயலவில்லை) சந்தித்து மதுரை விழாவிற்குச் செல்வது பற்றிப் விவாதிக்கப்பட்டது.  ஒரு பேருந்தை அமர்த்திக் கொண்டு விழா நடப்பதற்கு முதல் நாள் மதுரையில் இருக்கும்படி புறப்படலாம் என்பது திட்டம். கீழ்க்காணும் பதிவர்களின் அனைவரும் சென்னையிலிருந்து பேருந்தில் புறப்படுவது தீர்மானமாகி இருக்கிறது.

1) புலவர் இராமாநுசம், 2) மதுமதி, 3) கே.ஆர்.பி.செந்தில், 4) பாலகணேஷ். 5) மெட்ராஸ்பவன் சிவகுமார், 6) வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 7) கவியாழி கண்ணதாசன், 8) இராய செல்லப்பா, 9) சீனு, 10) சரவணன் (ஸ்கூல் பையன்), 11) ஆர்.பி.ஆதித்யா (போலி பன்னிக்குட்டி). 12) அஞ்சாசிங்கம் செல்வின், 13) பிலாசபி பிரபாகரன். 14) சரவணன் (உண்மைத்தமிழன்). 15) வேடியப்பன் (டிஸ்கவரி).

சென்னைப் பதிவர்களில் சிலர் தங்கள் வருகையை உறுதி செய்ய காலஅவகாசம் கேட்டுள்ளனர். நேற்றைய சந்திப்புக்கு வர இயலாத சிலரையும் தொடர்பு கொண்டு பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, எண்ணிக்கை நிச்சயம் இன்னும் கூடும். நேற்றைய கூட்டத்திற்கு வராத, சென்னையிலிருந்து எங்களுடன் கிளம்பிவர விருப்பம் உள்ள பதிவர்கள் அனைவரும் bganesh55@gmail.com என்கிற என் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.  சரியானபடி திட்டமிடுவதற்கு  அது உறுதுணையாக இருக்கும். நன்றி.

Thursday, September 11, 2014

மின்னல் திரை : மேரிகோம் (இந்தி)

Posted by பால கணேஷ் Thursday, September 11, 2014
மேரிகோம் - இந்தியாவுக்கு உலக அளவிலான பெண்கள் பாக்ஸிங் பிரிவில் ஐந்து முறை தங்கமும், ஒலிம்பிக்ஸில் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று தந்த வீராங்கனை. ‘மக்னிபிஷியன்ட் மேரி’ என்று விளையாட்டு ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தன் சுயசரிதையை ‘அன்பிரேக்கபிள்’ என்ற தலைப்பில் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்டார். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளிலிருந்து விடுபட, நம்பிக்கை பெற, ‘பைட் கிளப்’ ஒன்றை தான் பிறந்த மணிப்பூரில் நடத்தி வருகிறார் மேரிகாம். அதனை பிரபலப்படுத்த பிராண்ட் அம்பாஸிடராக பிரியங்கா சோப்ரா இருக்க வேண்டுமென்று விரும்பித் தேர்ந்தெடுத்தார் மேரிகாம். இப்போது பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் அவரது வாழ்க்கை திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.


உண்மையின் மேல் சற்று புனையப்பட்ட இப்படக்கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். மணிப்பூரின் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மேரிகாமுக்கு பாக்ஸிங் விளையாட்டு சிறு வயதிலிருந்தே மிகப் பிடிக்கிறது. வாலிபியான மேரிகோம் குடும்பத்திற்காக பந்தயம் கட்டும் தெருச் சண்டையில் ஜெயிக்கிறார். அங்கு அறிமுகமாகும் இளைஞனுடன் நட்பாகிறார். ஒரு சில்லறை சண்டையின் மூலம் பாக்ஸிங் கோச்சின் அறிமுகம் கிடைக்க, பாக்ஸிங் பயிற்சியைத் துவங்கி, இந்தியாவிற்காக மூன்று முறை தங்கம் வெல்கிறார். அறிமுகமான இளைஞன் இப்போது காதலாக, கல்யாணம் என்று முடிவெடுக்கையில் ’கல்யாணம் என்பது ஸ்போர்ட்ஸின் முடிவு’ என்று கோச்சின் கோபத்துக்கு ஆளாகிறார். அதை மீறி கல்யாணம் செய்து. இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். பாக்ஸிங் ஈர்க்க, இரண்டாண்டுகளுக்குப் பின் கோச்சைச் சமாதானம் செய்து மீண்டெழுந்து வந்து பதக்கம் பெற பயிற்சி செய்கிறார். இதில் அவருக்கு வந்த தடைகள் என்னென்ன, அதை எப்படி வென்று பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று தந்தார் என்பதை 124 நிமிடங்களில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் போன்று வாழ்கின்ற செலிப்ரிட்டிகளின் கதைகளைப் படமாக எடுக்கையில் நிஜத்தைவிட நிழலை சற்நே மிகைப்படுத்தித் தான் காட்ட வேண்டியதிருக்கும்.  இங்கே கூடீயவரை நிஜத்துடனேயே பயணித்திருக்கிறார்கள். அதனால் படத்தில் நாம் எதிர்பார்க்கும் வலிந்து திணிக்கப்படூம் திருப்பங்கள் எதுவும் இல்லாத நேரடித் திரைக்கதை சற்றே போரடிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது - கிளைமாக்ஸ் நீங்கலாக. 

பாக்ஸிங்கிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி விட்டாலும் மனமெல்லாம் அது நிறைந்து ததும்பியிருக்க, தன் பழைய நியூஸ் கட்டிங்குகளை வெட்டி ஒட்டி மேரிகோம் ஆல்பம் தயாரிப்பது, தான் வென்ற மெடல்களை எடுத்து அணிந்து கொண்டு ரசிப்பது, பஸ்ஸில் பயணிக்கையில் சந்திக்கும் குட்டி ரசிகைக்கு கண்களில் நீர் திரையிட ஆட்டோகிராப் போட்டுத் தருவது என்று பல காட்சிகள் கவிதை மாதிரி அழகாக அமைந்து வசீகரிக்கின்றன. 

பிரியங்கா  சோப்ரா மேரிகோம் கேரக்டரைத் திரையில் உயிர்ப்பித்திருக்கிறார்.  ரியல் விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகளை அவர் திரையில் செய்து காண்பிக்கையில் நமக்கு வலிக்கிறது. ஒரு காட்சியில் தலைமுடியிழந்து மொட்டை போட்டுக் கொண்டு வருகிற அளவுக்கு அந்த வீராங்கனைக்கான நடிப்பிற்கு நியாயம் செய்திருக்கிறார். செலக்ஷன் கமிட்டி மெம்பரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்க (மனமின்றி)ச் செல்ல, அங்கே அவர் பலர் முன்னிலையில் படித்துக் காட்டும்படிச் சொல்லி அவமானப்படுத்துகிற காட்சிபும் பிரியங்காவின் நடிப்பும் நன்று. அப்பா, கோச் மற்றும் கணவன் கேரக்டர்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அளவிற்கு நிறைவாகச் செய்திருக்கின்றனர். என்றாலும் படம் முழுக்க வியாபித்திருப்பது மேரிகோமான பிரியங்காதான்.

இந்தியாவின் சார்பாக உலகப் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் எப்படி பாலிடிக்ஸும் ஈகோவும் விளையாடுகிறது என்பதைக் காட்டும் காட்சிகளை மேலாகத் தாண்டிச்  சென்று விட்டார்கள். இதை மையச்சரடாக எடுத்துக் கொண்டு இன்னும் விரிவாக அலசியிருந்தால் இன்னும் படம் உயரம் தொட்டிருக்கும், அழுத்தமாக மனதில் பதிந்திருக்கும் என்பது என் எண்ணம். ‘நான் மணிப்பூரி என்பதற்காக மறுக்கிறீர்களா?’ என்று சீறும் மேரிகாம், ‘மூன்று முறை தங்கம் வென்ற எனக்கு ஹவில்தார் வேலைதான் உங்கள் அரசு தருமா?’ என்று சீறும் மேரிகோம்... ‘கிரிக்கெட்டைக் கொண்டாடுகிற நீங்க ஏண்டா 5 தங்கம் ஜெயிச்ச எங்களை மாதிரி வீராங்கனைகளைக் கண்டுக்க மாட்டேங்கறீங்க?’ என்று ஆக்ரோஷமாகச் சீறியிருக்க வேண்டாமோ...? அதேபோன்று கிளைமாக்ஸ் காட்சியும் ஒரு டெம்ப்ளேட்டான விஷயம்தான். எதிராளியிடம் கன்னாபின்னாவென்று அடி வாங்கி கதாநாயகன்/நாயகி விழுவதும் பின் எழுந்து எதிரியை துவம்சம் செய்து ஜெயிப்பதும் காலம் காலமா பார்த்துச்  சலிச்ச விஷயங்கள்டே.... இன்னுமா....?

சஞ்சய் லீலா பன்ஸாலியின் தயாரிப்பில் ஓமங்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் இதுபோல சின்னச் சின்னக் குறைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது என்றாலும் அதைத்தாண்டி நல்ல ‘ஃபீல்குட்’ படமாக வந்திருக்கிறது. அழகான ஒளிப்பதிவும், உறுத்தாத பின்னணி இசையும் துணை செய்ய  (இந்தி) மொழி புரியா விட்டாலும் கதை புரியும் வண்ணம் எளிமையாக இருப்பது சிறப்பு.

மொத்தத்தில் : நம்ம கோவை ஆவி சொன்னார்... “இதுமாதிரியான முயற்சிகளை நாமல்லாம் என்கரேஜ் பண்ணணும் ஸார்... அப்பத்தான் போகப்போக இதைவிட நிறையப் படங்கள் கிடைக்கும்.” என்று. ஆவியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். கூடவே - பிரியங்கா சோப்ராவின் அசுர உழைப்பிற்காகவும் அவசியம் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

Saturday, August 30, 2014

இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள்..!

Posted by பால கணேஷ் Saturday, August 30, 2014
மிழ்ப் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்...

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்புகளை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. விழாவின் இனிய நினைவுகளை நண்பர்கள் பகிர, முதல் ஆண்டில் கலந்து கொள்ள இயலாமல் போன அனேக பதிவர்கள் ஆர்வமுடன் இரண்டாம் ஆண்டின் சந்திப்பில் பங்கேற்று அசத்தினார்கள். அதே போல் மூன்றாம் ஆண்டிலும் அசத்துவதற்கு இப்போதிருந்தே தயாராகுங்கள் நண்பர்களே..!மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் கோலாகலமாக ஆரம்பித்து விட்டன... சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து மங்காப் புகழ் பெற்ற மதுரை நகரில் இம்முறை நம் மூன்றாமாண்டு சந்திப்பு நடைபெற உள்ளது.

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

அக்டோபர் 23ம் நாள் உலகெங்கும் மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளித் திருநாள். அதைத் தொடர்ந்து மூன்று தினங்களில் 26ம் தேதியன்று வலைப்பதிவர்களான நம் அனைவருக்குமான மற்றொரு தீபாவளித் திருவிழாவாக அமைய இருக்கிறது இந்தப் பதிவர் சந்திப்பு. அந்தப் பண்டிகையைக் கொண்டாடிய அதே உற்சாகத்தை விடாமல் பற்றிக் கொண்டு, அலைகடலெனத் திரண்டு வந்து மதுரையில் இன்னொரு சித்திரைத் திருவிழா ஆரம்பித்து விட்டதோ என்று மதுரைவாசிகள் வியக்கும் வண்ணம் அசத்த வேண்டும் நாம்... வாருங்கள் வலைப்பதிவர்களே..!

விழா நிகழ்வு என்றும் நினைவில் நிற்கும் ஒன்றாக அமையவும், வேறு சில இனிய ஆச்சர்யங்களை உங்களுக்கு விழா நாளன்று வழங்கவும் மதுரை வலைப்பதிவர்களின் குழு சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கி விட்டனர்.  இந்த வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி உங்களின் வருகையை உறுதிசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்...


படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, மேலும் விவரங்கள் தேவைப்பட்டாலோ தொடர்புக்கு:- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்)திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

மேலும் விரிவான தகவல்கள் மற்றும் விபரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடப்படும். பதிவுலக நண்பர்கள் அனைவரும் இந்த விபரங்கள் அனைத்தையும் தங்களது வலைப்பதிவில் எழுதி உங்கள் நட்பு வட்டத்திற்கும், அனைத்து பதிவர்களுக்கும் விஷயத்தை எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்..!

=================================================================

விழா நடைபெறும் இடத்தை நான் க்ளிக்கிய படம் இது. இந்த ஹால் விசாலமாகவும் நிறைய ஜன்னல்களுடனும் இருப்பதால் நல்ல காற்றோட்டம். தவிர, விழா நடக்கும் ஹாலைச் சுற்றி அனைத்துப் பதிவர்களும் யானையில் வந்தால்கூட கட்டுவதற்குத் தேவையான அளவு விசாலமான பார்க்கிங் வசதி இருக்கிறது. அதுவும் தவிர, நிழலில் நின்று பதிவர்கள் கலந்துரையாடி மகிழ போதிய இடமும் இருக்கிறது. ஆகவே... அனைவருக்கும் நிறைவைத் தரும் வண்ணம் இந்த ஆண்டின் நிகழ்வுகள் அமையும் என்பது திண்ணம்.

=================================================================

Monday, August 11, 2014

ராமலக்ஷ்மியின் ‘அடைமழை’

Posted by பால கணேஷ் Monday, August 11, 2014
முத்துச் சரம் நமக்குத் தொடுத்து அளிக்கும் ராமலக்ஷ்மி ராஜன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.  பத்திரிகைகளில் (தளத்தில்) பேனாவால் கவிதை எழுதுவார், தன் காமிராவினாலும் அதை எழுதுவார், கச்சிதமாய் சிறுகதைகளும் எழுதுவார், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அழகாக மொழிபெயர்ப்பும் செய்வார். மொத்தத்தில் பொறாமை கொள்ளச் செய்கிற பன்முகப் படைப்பாளி. அவர் எழுதிய ‘அடைமழை’ என்கிற சிறுகதைத் தொகுப்பை சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி, அடுத்து வந்த மாதத்தில் வாசித்து முடித்து விட்டேன். என்றாலும் அதைப் பற்றிப் பேச  இப்போதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

ராமலக்ஷ்மி  இயற்கை வர்ணனை, கதாபாத்திர வர்ணனை என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாது, நம்மை நேரடியாகக் கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிற எளிமையான எழுத்து நடை கைவரப் பெற்றிருக்கிறார். அவர்தம் கதை மாந்தர்களும் 90 சதம் அடித்தட்டு மக்களாகவே அமைந்து விடுவது இப்படியான எழுத்து நடைக்கு கூடுதல் வேகத்தை அளிக்கிறது. ‘அடைமழை’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள 13 கதைகளின் மையச்சரடாக அமைந்திருப்பது மனிதம்தான். சக மனிதர்களின் மீதான அக்கறை, சமூகத்தின் மீதான அக்கறை என்று நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறுகிற விஷயங்களின் மீது விரல் நீட்டுகின்றன இவரின் கதைகள். அவற்றைச் சில வரிகளில் பார்த்து விடலாம்....

முதல் சிறுகதை ‘வசந்தா’ குழந்தைத் தொழிலாளர்கள் எப்படி உருவாகிறார்கள். அதைப் பற்றிய விழிப்புணர்வு பரவி விட்டதாக நாம் நினைக்கும் இன்றையச் சூழலிலும் எவ்விதத்தில் அது நம்முடன் இருக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறது. இரண்டாவது கதையான ‘பொட்டலம்’ வசதிக் குறைவான பெற்றவர்கள் நல்ல கல்வியை விரும்பி பெரிய பள்ளியில் தங்கள் மகனைப் படிக்க வைப்பதால் அந்தச் சிறுவனுக்கு எழும் மனவியல் பிரச்னையையும் கூடவே ஆசிரியைகள் நடந்து கொள்ளும் விதத்தையும் கண்முன் படம் பிடிக்கிறது. மூன்றாவது கதை ‘வயலோடு உறவாடி’ விவசாய நிலங்களை மறந்து. துறந்து வாழும் நம்மை கையைப் பிடித்து அங்கே இழுத்துச் சென்று அதன் அருமையை மனதில் உணரச் செய்கிறது.

நான்காவது சிறுகதை ‘ஈரம்’ எனக்கு மிகப் பிடித்திருந்தது. கணவனின் விருப்பத்திற்காக வேலையை விட முடியாமல் குழந்தையை ‘க்ரச்’சில் விட்டுவிட்டுச் செல்லும் ஒரு பெண்ணின் குடும்ப, அலுவலகச் சூழல்கள் இவரின் எழுத்தில் ஒரு குறும்படமாய் மனதில் விரிகிறது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் படிப்பவரையும் தொற்றிக் கொள்கிறது. ஐந்தாவது சிறுகதை ‘அடையாளம்’ தன் பெயரை எவரும் விசாரிக்கக் கூட செய்யாமல் வாழும் ஒரு எளியவனின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிற சிறந்த சிறுகதை. ஆறாவது சிறுகதை ‘பயணம்’ கூட்டுத் தொழில் செய்யும் நண்பன் திட்டியதால் மன உளைச்சலுடன் ரயிலில் பயணிக்கும் ஒருவனுக்கு ஏற்படும் திடுக் அனுபவத்தை விளக்கி எதிர்பாராத முடிவினால் புன்னகைக்க வைக்கிறது. 

ஏழாவது சிறுகதை ‘ஜல்ஜல் எனும் சலங்கையொலி’ அவரது தளத்தில் படிக்கையிலேயே மனதில் தனியிடம் பிடித்த ஒன்று. படித்து முடிக்கையில் சுப்பையாத் தாத்தாவிடம் கதை கேட்க வேண்டுமென்ற ஏக்கம் என் மனதிலும் வந்தது. அவர் ஏன் அந்த ‘ஜல்ஜல் மாட்டுவண்டி’க் கதையை கடைசிவரை சொல்லவே இல்லை என்பதை நீங்கள் படித்துத் தெரிந்து கொண்டால்தான் சிறப்பு. எட்டாவது சிறுகதை ‘அடைமழை’யை நட்சத்திரக் கதை என்றே சொல்லலாம். தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் ஒருவன். போலீஸ்காரர் ஒருவரால் துரத்தப்பட்டு, அவமானமடைந்து வாழ்க்கையின் முன்னேற சபதம் செய்து போராடுகிறான். சற்றே வளர்ந்துவிட்ட நிலையில் நாணயத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்ப்பது போல அந்தப் போலீஸ்காரரின் கோணத்தில் அவர்கள் வாழ்வை அவன் பார்க்க நேரிடுகிறது. அங்கே மனிதம் மலர்கிறது.

ஒன்பதாவது சிறுகதை ‘சிரிப்பு’ உம்மணாமூஞ்சியான ஒருவனை சிரிக்கச் செய்வது எது என்பதை விவரித்து நம் உதடுகளிலும் புன்னகையை ஒட்டுகிறது. பத்தாவது சிறுகதை ‘பாசம்’ பிற்பட்டோருக்கான கோட்டாவில் ஸ்காலர்ஷிப்பில் மகனை பெரிய படிப்பு படிக்க அனுப்பிவிட்டு அவ்வப்போது அவன் கேட்கும் பணத்தை அனுப்ப அந்தப் பாசமுள்ள பெற்றோர் படும் பாட்டை ரத்தமும் சதையுமாக வர்ணிக்கிறது. இச்சிறுகதையின் முடிவு கண்களை வேர்க்கச் செய்து விடுகிற ஒன்று. பதினொன்றாவது சிறுகதை ‘உலகம் அழகானது’ எனக்கு மிகப் பிடித்தமான சிறுகதை. பார்க்கில் காலை நடைபயிலும் இரண்டு நண்பர்கள் அருகம்புல் விற்கும் வியாபாரிகளிடம், தன் மகனைப் படிக்க வைப்பதற்காக அதே தொழில் நடத்தும் ஒருவனுக்காகப் பரிந்து பேச, அவர்களுடன் தகராறு செய்ய நேரிடுகிறது. பின்னர் அந்த வியாபாரிகளின் மனமாற்றம் நேர்ந்து அந்த வியாபாரிக்கும் ஓரிடம் கிடைக்கிறது அங்கு. இந்தச் சிறுகதையின் உள்ளீடான மனிதநேயமும், பாஸிட்டிவ் அப்ரோச்சும் சேர்ந்து ராமலக்ஷ்மியின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக்கி விடுகிறது இதை.

பன்னிரண்டாவது சிறுகதை ‘இதுவும் கடந்து போகும்’ கூட பாஸிட்டிவ் அப்ரோச் கொண்ட கதைதான். ‘தானே’ புயலின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளின் பின்ணணில் துவங்கி உணர்வுகளைப் பேசும் கதை. படித்துத்தான் அதை நீங்கள் அனுபவிக்க முடியும். பதிமூன்றாவது சிறுகதை ‘அடைக்கோழி’ மருமகளின் விருப்பத்துக்கு மாறாக மாமியார் வளர்க்கும் கறுப்பி என்கிற கோழியையும் மாமியார்  உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட பின் அந்த அடைக்கோழி என்னாகிறது என்பதையும் விவரிக்கிறது. இதுவும் நுட்பமான உணர்வுபூர்வமான கதைகளில் ஒன்றாகக் குறிப்பிட வேண்டியது.

நான் தமிழில் ‘சுதாரித்துக் கொண்டு’ என்று வார்த்தை இருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். புத்தகம் பூராவிலும் ‘சுதாகரித்துக் கொண்டு’ என்றே வருகிறது. (சுதாரி - சரியா, சுதாகரி - சரியா?) பேச்சு வழக்கில் எது சரியான சொல் என்பது சரியாகத் தெரியவில்லை. யாராவது தமிழ் அறிஞர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். பார்க்கலாம்...

மொத்தத்தில் ‘அடைமழை‘ தொகுப்பைப் படித்து முடிக்கையில் உங்களுக்கு ஒரு மனநிறைவும், கூடவே லேசாய் மனதில் கனமும் ஏற்படுவதும், சிந்தனைகள் கிளறப்படுவதும் நிச்சயம் நடக்கக் கூடிய விஷயங்கள். என்னைப் பொறுத்த வரையில் இதுபோன்ற நல்ல கதைகள் சிலவற்றை நாமும் எழுதியாகணும் என்று மனம் உறுதி கொண்டது. தொப்பிகள் இறக்கப்பட்டன (ஹாட்ஸ் ஆஃப்-க்கு தமிழ்.. ஹி... ஹி...) ராமலக்ஷ்மி மேடம்!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube